
ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பார்த்த கண்கள், அவரை விட்டு விலகாது. அந்தளவுக்கு பெரியவராக, பாதம் முதல் உச்சி வரை பரவசத்துடன் பார்ப்போம். அவரையும் விட பெரிய பெருமாள், விழுப்புரம் மாவட்டம், ஆதிதிருவரங்கத்தில் அருள்பாலிக்கிறார்.
சந்திர பகவானின் அழகில் மயங்கிய, தட்சன் என்பவனின் புதல்விகள், 27 பேர், அவனை மணந்தனர். ஆனால், கார்த்திகை, ரோகிணி என்பவர்கள் மீது மட்டும் அன்பு கொண்டான், அவன். இதனால், மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளானான்.
'அழகு என்ற மமதையால் தானே, இவன் ஆட்டம் போடுகிறான்; இவனின் அழகு தொலை யட்டும்...' என, அவர்கள் சாபமிட்டனர். பின், அவன், தேவர்களின் ஆலோசனைப் படி, ஆதிதிருவரங்கம் வந்து தவமிருந்து, பெருமாள் அருளால் குறை நீங்கப் பெற்றான்.
இங்கு வந்த பெருமாளை, அதே இடத்தில் தங்க வேண்டுமென வேண்டி கொண்டனர், தேவர்கள். தேவ தச்சனான, விஸ்வகர்மா வரவழைக்கப்பட்டார். அவர், பெருமாளை சயன நிலையில், ரங்கநாதர் என்ற பெயரில் உருவாக்கினார்.
சோமுகன் என்னும் அசுரன், படைப்பு தொழில் செய்த பிரம்மாவிடமிருந்து வேதங்களை அபகரித்தான். வருத்தத்துடன் திருமாலிடம் முறையிட்டனர், தேவர்கள். அவர்களது வேண்டுதலை ஏற்ற திருமால், சமுத்திரத்தில் மறைந்திருந்த சோமுகனை அழித்து, வேதங்களை மீட்டு வந்து, பிரம்மாவுக்கு சில உபதேசங்களையும் செய்தார்.
சுருதகீர்த்தி என்ற மன்னனுக்கு அனைத்து செல்வங்களும் இருந்தும், குழந்தைகள் இல்லை. நாரதரின் அறிவுரையின் படி, இந்தப் பெருமாளை வழிபட்டு, நான்கு குழந்தைகளை பெற்றான், மன்னன். மூலவர் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகிக்கு சன்னிதிகள் உள்ளன.
இந்தியாவிலுள்ள சயன நிலை விக்ரகங்களில், ஸ்ரீரங்கம் பெருமாள் சிறப்புடையது. இவர், 21 அடி நீளம் உடையவர். ஆனால், ஆதிதிருவரங்கம் பெருமாள், 28 அடி நீளம் உள்ளவர். இதனால், இவரை, 'பெரிய பெருமாள்' என்கின்றனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் பத்மநாப பெருமாள், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் போன்று புகழ்பெற்ற பெருமாள்களின் வரிசையில், இவர் சேர்ந்துள்ளார்.
கோவிலின் கிழக்கே, ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் வழியாக, 62 கி.மீ., சென்றால், ஆதி திருவரங்கத்தை அடையலாம். காலை, 6:00 மணி முதல், இரவு, 7:30 மணி வரை, கோவில் திறந்திருக்கும். இக்கோவிலில் இருந்து, 16 கி.மீ., துாரத்தில், மகாபலி மன்னனை ஆட்கொண்ட, திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது.
தி. செல்லப்பா