தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே (40)

பசுமை நிறைந்த நினைவுகளே (40)

பசுமை நிறைந்த நினைவுகளே (40)


PUBLISHED ON : ஜூன் 08, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 08, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குற்றால டூரைப் பொறுத்தவரை, மற்ற எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு செய்து விடலாம். ஆனால், அருவிகளில் தண்ணீர் விழுவது, எந்த திட்டமிடலுக்கும் உட்படாதது. அது முழுக்க முழுக்க இயற்கையின் கையில் தான் உள்ளது.

அருவிகளில் தண்ணீர் விழுகிறது என்று, பத்திரிகைகளில் வரும் படங்களைப் பார்த்து, பயணத்தை திட்டமிட்டு போய் சேரும் போது, தண்ணீர் வரத்து குறைந்தோ அல்லது நின்றோ போயிருக்கும்.

அதே நேரம், வேறு வேலையாக தென்காசி - செங்கோட்டை    பக்கம் போனவர்கள், குற்றாலத்தை எட்டிப் பார்ப்போமே என்று போகும் போது, மலைப்பகுதியில் தண்ணீர் பெய்து, குளிக்க ஆளில்லாமல், அருவி சும்மா கொட்டிக்கொண்டு இருக்கும்.

இது, நீண்ட காலமாக இயற்கை நடத்தி        வரும் கண்ணாமூச்சி விளையாட்டு.

சென்னை போன்ற நகரங்களில் உள்ள, 'தீம் பார்க்'குகளில், செயற்கை யாக அருவிகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். சக்திவாய்ந்த மின் மோட்டார் மூலம், தண்ணீரை உயரத்திற்கு எடுத்துச் சென்று, பின், உருவாக்கப்பட்ட செயற்கை மலைகளின் வழியாக அருவி போல விடுவர்.

இதில் குளிப்பதற்கு, குறைந்தபட்ச நுழைவு கட்டணமே, 300 ரூபாய். அதிலும், அதிக பட்சம், ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை மட்டுமே குளிக்க முடியும். இந்த தண்ணீரும் சுழற்சி முறையில் விடப்படும். அதாவது குளித்த தண்ணீர்தான் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்படும்.

ஒரு வாளி தண்ணீரில், குடும்பத் தோடு குளித்து, துவைத்து மிச்சமும் வைக்க வேண்டிய தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த சென்னை போன்ற நகரங்களில் இதுவே அதிகம்தான்.

இந்நிலையில் சுத்தமான, மூலிகை சக்தி நிறைந்த தண்ணீரில், நேரக்கட்டுப்பாடு இல்லாமல் குளிக்கலாம் என்பது, எவ்வளவு பெரிய விஷயம். இதனால்தான், மக்கள் குற்றாலத்தில் குவிந்து, இரவு, பகல் பாராமல் குளிக்கின்றனர். இவ்வூரின் இதமான, மிதமான தட்பவெட்பம் கூடுதல் போனஸ்.

இப்படி இயற்கை சார்ந்த குற்றாலத்தை, அனைவருக்கும் பிடிக்கும் என்றால், குற்றாலத்திற்கு ரொம்பவும் பிடித்தவர்கள், தினமலர் - வாரமலர் இதழ் வாசகர்கள் என்றே சொல்லலாம். இரண்டு மாதத்திற்கு முன்பே பயண தேதி நிச்சயிக்கப்பட்ட போதும், அந்த தேதியில் வரும் வாசகர்களை ஏமாற்றாது இதுவரை, தண்ணீர் விழுந்து வருகிறது.

மதுரையை விட்டு புறப்படும் போது கூட வெயில் வறுத்தெடுக்கும். ஆனால், ராஜபாளையம் தாண்டியதும், 'வாங்க வாசகர்களே...' என்பது போல, மேகம் கூடி, தூறல் விழ, சீசன் களை கட்டி விடும். அருவிகளில் தண்ணீர் பெருகி விடும்.

கடந்த ஆண்டு, அடுத்தடுத்த வாரம் என்று, இரண்டு முறை டூர் நடந்த போதும், தண்ணீரை அருவித்தாய் வாரி வழங்கினாள். இந்த ஆச்சரியம் எங்களைவிட, குற்றாலம் மக்களுக்கு நிறைய உண்டு.

நம் வாசகர்கள் நன்றாக குளிக்க வேண்டுமே என்பதற்காக செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் தான், டூர் நடத்தப்படும். காரணம், கூட்டம் குறைவாக இருக்குமே என்பதற்காக. ஆனால், இந்த தேதியில், நிச்சயம் தண்ணீர் விழும் என்பதால், இப்போதெல்லாம், இந்த கிழமைகளை குறித்து வைத்து, வரக்கூடிய பொதுமக்கள் அதிகம்.

எவ்வளவு கூட்டம் வந்தாலும், அத்தனை கூட்டத்திலும், வி.ஜ.பி., அந்தஸ்தில், நம் வாசகர்கள் குளிப்பர். அதற்கு காரணம் திருநெல்வேலி நிருபர் முப்பிடாதி. தன் அன்பினால் அனைவரது மதிப்பையும், நட்பையும் பெற்றவர். எள் என்றால், எண்ணெயாக இருப்பார். 'இது முடியுமா...' என, கேட்டு முடிப்பதற்குள், 'முடியுமே...' என்று சொல்லக்கூடியவர். இவரைத் தெரியாதவர்கள் குற்றாலத்தில் யாரும் கிடையாது. இவருக்கு தெரியாதவர்களும், குற்றாலத்தில் யாரும் கிடையாது. உயரதிகாரியிடம் முறை யாக பேசிவிடுவதால், வாசகர்கள் எந்த அருவிக்கு போனாலும் முன்கூட்டியே அங்கு போலீசார் ஆஜராகி, பாதுகாப்பு கொடுத்து, வாசகர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் குளிக்க உதவுவர்.

அருவி தண்ணீர் என்பது, மிக புனிதமானது என்பதால், பழமையான ஆட்கள் செருப்பு போட்டு குளிக்க மாட் டார்கள். ஆனால், எங்கும் குடி, எப்போதும் குடி என்றாகிவிட்ட இக் காலத்தில், அருவியின் மகிமை தெரியாமல் குடித்துவிட்டு அருவியை விட்டு நகராமல், நடுகல் போல, சிலர் நிற்பர். அவர்களை எல்லாம் போலீசார் தங்கள் மொழியில் கையாலும், பிரம்பாலும் பேசித்தான் விரட்டுவர்.

இப்படி வாசகர்களை ஐந்தருவிக்கு, 'பராக்' சொல்லாத குறையாக மகாராஜாக்கள், மகாராணிகள் போல அழைத்துச் சென்று குளிக்க வைத்த போதும், ஒரு சின்ன சிக்கல் எழுந்தது. அது என்ன சிக்கல் என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.

தென்காசியும், குத்துக்கல் வலசையும்...

தென்காசியில் இருந்து பண்பொழி போகும் ரோட்டில், முதலில் தென்படுவது இந்த குத்துக்கல்தான். 30 அடி உயரம் கொண்ட இந்த கல்லை, அடையாளமாக வைத்து தான், இங்குள்ள கிராமத்திற்கு, குத்துக்கல் வலசை கிராமம் என்ற பெயர் வந்தது.

இப்பகுதியில், வலசை என்ற வார்த்தையில் முடியும் பல கிராமங்கள் இருந்தாலும், இந்த குத்துக்கல் வலசை பிரபலம். வலசை என்பதற்கு, வரிசை, பகுதி என்று அர்த்தம். ஒரு காலத்தில், இந்த கல்லுக்கு பக்கத்திலேயே, இதே போல சிறிய அளவில் கற்கள் இருந்ததாகவும், காலப்போக்கில் அவைகள் காணாமல் போக, இப்போது இந்த ஒரு கல்தான் மிஞ்சி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்தக் குத்துக்கல் விழுந்து விடுவது போல காணப்பட்டாலும், காலம் காலமாக விழாமல் இப்படியேதான் காணப்படுகிறது. இயற்கை உருவாக்கிய அதிசயமான இந்த கல், இன்னும், பல காலம் தாக்குப் பிடிக்கும் என்பது, இயற்கை ஆர்வலர்களின் கருத்து. இயக்குனர் பாலசந்தரின் பல படங்களில், இந்த குத்துக்கல் இடம் பெற்றிருக்கும்.

இயற்கை உருவாக்கியது போல இன்னொன்றை செயற்கையாக உருவாக்குவது கடினம். அப்படியே உருவாக்கினாலும், அது இயற்கைக்கு நிகராக இருக்காது.

ஆகவே, இயற்கை நமக்கு கொடுத்த பொக்கிஷம் போன்ற இந்த குத்துக்கல்லை, நாம் ரசித்தது போல, அடுத்த தலைமுறையும் ரசிக்க செய்வோம்.



— அருவி கொட்டும்.

-எல்.முருகராஜ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us