PUBLISHED ON : ஜூன் 22, 2014

திருப்பதியில் மொட்டை போட்டவரை எப்படி அடையாளம் சொல்லி கண்டுபிடிக்க முடியாதோ, அது போல, குற்றாலத்தில், சீசன் நேரத்தில் அருவியில் குளிப்போரை அடையாளம் காண்பதும் சிரமம்.
பெரும்பாலான ஆண்கள், பெர்முடாஸ் எனப்படும் அரை டவுசரும், பெண்கள், அடர்த்தியான நிறம் கொண்ட நைட்டியும் அணிந்திருப்பர். அதுவும், அருவியில் நனைந்த பின், அவர்கள் உருவமும், தலைமுடியும் நனைந்துள்ளதால், சட்டென அடையாளம் காண முடியாது.
இதனால், அருவியில் குளிக்க போகும் வாசகர்களுக்கு தனியிடம் ஒதுக்கி, காவல் துறையினர் உதவ நினைத்தாலும், வாசகர் மற்றும் வாசகர் அல்லாதோர் யார் என, அடையாளம் காண முடியாமல் சிரமப்பட்டனர்.
இதற்கு முடிவு காணும் வகையில், 2002-ல், சீருடை போல, குற்றால டூர் வாசகர்கள் என, எழுதப்பட்ட பனியன் வழங்கப்பட்டது. இதை அணிந்து, குளிக்கப்போன வாசகர்களுக்கு, ராஜ உபசாரம் கிடைத்தது.
பனியனுக்கு கிடைத்த மரியாதையால், கர்ணனின் கவச குண்டலம் போல, வாசகர்கள் உடலோடு, பனியன் எப்போதும் உறவாடியபடியே இருந்தது.
இந்த அனுபவம், பனியனை போட மறுத்த வாசகிகளுக்கு கிடைக்கவில்லை.
பனியன் போட்டதால், அருவிகளில் தங்களுக்கு கிடைத்த மரியாதையை ஆண் வாசகர்கள், விடிய விடிய, பெண் வாசகிகளிடம் சொன்னதன் விளைவு, டூரின் இரண்டாவது நாள், அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம், அனைத்து வாசகிகளும், தங்களது சேலை, நைட்டியின் மேல், குற்றால டூர் பனியனை அணிந்து, அருவியில் குளிக்க தயாராயினர்.
ஒரே நாளில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை இனிய மாற்றமாக்க முடிவு செய்தோம். இரண்டாவது நாள் நிகழ்ச்சி நிரலின்படி, 'இப்போது பழைய குற்றாலம் போகிறோம்...' என்றதும், 'அதெல்லாம் செல்லாது; முதல் நாள் இந்த பனியன் அணிந்து, ஆண் வாசகர்கள் குளித்த அதே மெயினருவி மற்றும் ஐந்தருவிக்கு போய்விட்டுதான், வேறு அருவிகளுக்கு போக வேண்டும்...' என்று அடம்பிடித்தனர் பெண் வாசகியர். அந்த அளவிற்கு ஆண் வாசகர்கள் அவர்களை கடுப்பேற்றியிருந்தனர்.
'நம் கணக்குப்படி, ஒரு நாளைக்கு இரண்டு அருவி; ஆனால், தற்போது, உங்கள் கணக்குபடி, இன்று ஒரு நாள் மட்டும் நான்கு அருவியாகி விடுமே...' என்றதும், 'அதனால் என்னாங்க சார், குளிச்சா சரியாச்சு; கிளம்புங்க கிளம்புங்க...' என்று, வேகமெடுத்தனர்.
இந்த வேகத்திற்கு காரணம், பனியன் போட்டு குளிக்கப்போகும் ஆர்வம் என்று எடுத்துக்கொண்டாலும், அதைவிட முக்கிய காரணம், முந்தய நாள் சாப்பிடக் கூட விடாமல், 'பனியன் மகாத்மியம்' பற்றி, பேசிய ஆண் வாசகர்களை, அதே போல உட்கார வைத்து, தங்களது பனியன் அனுபவங்களை, சொன்னால் தான், தங்களது மனம் ஆறும் என்பதே நோக்கம்.
இப்படி, அருவியை நீயா நானா பார்த்துவிடுவது என்ற முடிவோடு கிளம்பிய பெண் வாசகிகளின் ஆர்வத்தை பார்த்து, 'குற்றாலத்தில் எப்படி குளிப்பது' என்பது பற்றி ஒரு சிறு வகுப்பு எடுத்தார் நண்பர் குமரகுருபரன்.
இவர், குற்றாலத்திலேயே பிறந்து, வளர்ந்து, தற்போது அறுபது வயதை தாண்டினாலும், இருபது வயது இளமையோடு, இப்போதும் அருவிகளில் உற்சாக குளியல் போடுபவர். அருவிகளை ஆராதிக்கும் இவர், அது தரும் ஆனந்தத்தால், சொக்கிப் போய், எந்த ஊர் போனாலும், இரவே ஊர் திரும்பக் கூடிய குணம் கொண்டவர். இவர், குற்றாலத்தில் குளிப்பது குறித்து எடுத்த வகுப்பு, வாசகர்களுக்கு மட்டுமல்ல... குற்றாலத்தில் குளிக்க போகும் அனைவருக்குமே
பொதுவானது.
அருவிகளில் குளிப்பது குறித்து, அப்படி என்ன கற்றுக் கொடுத்தார் என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.
குற்றாலமும், முக நூல் நண்பர்களும்...
இந்த விஞ்ஞான உலகில், அசுரத்தனமாக வளர்ந்து நிற்பது, 'பேஸ்புக்' எனப்படும் முகநூல். இரண்டு பேர் அறிமுகமானால், ஒருவரிடம், மற்றவர் கேட்கும் கேள்வி, 'நீங்கள், 'பேஸ்புக்கில்' இருக்கிறீர்களா...'என்பதுதான்.
எந்த விஞ்ஞான வரவிலும், நன்மை இருக்கும் அளவுக்கு தீமையும் உண்டு; அது அவரவர் பயன்படுத்தும் தன்மையில் இருக்கிறது.
தென்காசியில் உள்ள இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து, 'ஐ லவ் குற்றாலம்' என்று, முகநூலில் கணக்கு வைத்துள்ளனர்.
இந்த இளைஞர்கள் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் புகழ் பாடும் சுற்றுச்சுழல் ஆர்வலர்களாக இருக்கின்றனர்.
அடுத்தவர்கள் செய்யட்டும் என்று காத்திராமல், தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர் இந்த முகநூல் நண்பர்கள்.
'குற்றாலத்தில் குப்பையும், கூளமுமாக காணப்பட்ட பேரருவி பூங்காவை, இந்த தேதியில் சுத்தம் செய்து, பெயின்ட் அடிக்கப்போகிறோம்; ஆர்வம் உள்ளவர்கள் வரலாம்...' என, அழைப்பு விடுத்தனர்.
அந்த தேதியில், ஐ.டி., துறையில் பணியாற்றுபவர் முதல் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் வரை அனைவரும் மண்வெட்டி, குப்பை கூடையுடன் திரண்டு விட்டனர். காலையில் ஆரம்பித்து, மாலைக்குள், 'இது நாம் பார்த்த பேரருவி பூங்காதானா...' என்று, வியக்குமளவிற்கு சுத்தம் செய்து விட்டனர்.
ஏற்கனவே, இவர்கள் பழமையான செங்கோட்டை வளைவை சுத்தப்படுத்தி வர்ணம் பூசி, அந்த வளைவின் பெருமையையும், கம்பீரத்தையும் மீட்டவர்கள் என்பது, குறிப்பிடத்தக்கது.
இப்படி தான் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும், 'ஐ லவ் குற்றாலம்' முகநூல் நண்பர்களை, நாமும் வாழ்த்தி பாராட்டலாம்.
— அருவி கொட்டும்.
எல்.முருகராஜ்
