PUBLISHED ON : டிச 15, 2013

தென்காசி, ஆனந்தா கிளாசிக் ஓட்டலின் அதிபர் விவேகானந்தன் அழைப்பை ஏற்று, 1994ல், ஆனந்தா கிளாசிக்கில் தங்குவது என, முடிவாகியது.
வேறு ஒரு வேலையாக அந்த பக்கம் போயிருந்த அந்துமணி, வாசகர்கள் தங்கப்போகிற ஓட்டல் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ள தங்கிப் பார்த்தார்.
சுற்றிலும் வயல்காடு, நடுவில் லாட்ஜ் என் பதால், காற்றுக்கு பஞ்சமே இல்லை. இந்த காற்று, இரவில் அழுத்தமாக அடிக்கும் போது, அறைக் கதவை யாரோ தட்டுவது போலவே இருக்கும். 'யார் இந்த நேரம் கதவை தட்டுவது...' என்று கதவைத் திறந்து பார்த்தால், வெளியே யாரும் இருக்க மாட்டார்கள்.
இரண்டு மூன்று தட்டுகளுக்கு பிறகு 'இதுதான் விஷயம்' என்று, அந்துமணி கண்டுபிடித்து விட்டார். உடனே, இன்டர்காமில், விடுதி மேலாளரை கூப்பிட்டு, விஷயத்தை சொல்லி, உடனே அதை சரி செய்தும் விட்டார். ஆனால், வேறு சில அறைகளில் தங்கியிருந்தவர்கள், பயந்து போய், இரவோடு இரவாக அறையை காலி செய்யும் நிலைமைக்கு சென்றனர்.
இந்த விஷயத்தை முன் கூட்டியே பா.கே.ப.,வில் எழுதியதுடன், வாசகர் களிடமும் முன் எச்சரிக்கை யாக சொல்லச் சொன்னதால், கதவைத் தட்டும் காற்றின் அனுபவத்தை உணர வாசகர்கள் தயாராகயிருந்தனர். ஆனால், வாசகர்கள் போகும் போது, அந்த பிரச்னை எழாத அளவிற்கு சரி செய்து வைத்திருந்தனர்.
கடந்த, 1994ல் கலந்து கொண்ட இரண்டு வாசகர்களை பற்றி சுவாரசிய மான செய்தி...
முதலில் சென்டூர் விவசாயி பாலமுருகன்.
இவர், தன் கிராமத்து வீட்டிற்கு எதிரே உள்ள டீக்கடையில் வாங்கப்படும் தினமலர் நாளிதழுக்கு ரெகுலரான, 'இரவல்' வாசகர். 'கூப்பன் வீணாத்தானே போகுது... நான் உபயோகித்துக்கொள்ளவா...' என்று, கடைக்காரரைக் கேட்டு, கூப்பனை அனுப்பி, தேர்வாகி, குற்றாலத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
பின், ஊருக்கு திரும்பும் போது, டீக்கடைக்காரரின் குடும்பத்திற்கு, தன் நன்றியை தெரிவிக்கும் விதமாக, பழம், அல்வா, சிப்ஸ் என்று, நிறைய வாங்கிக்கொண்டார். கூடவே, ஊருக்கு போன நாள் முதல், சொந்தமாய் தினமலர் வாங்குவது என்ற உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.
இதே போல, சென்னை மின்வாரியத்தில் இன்ஜினியராய் இருந்தவர் யு.கே.சுந்தரம்.இவர் வழக்கமாக, 'வாக்கிங்' போய் வரும் போது, ஒரு குறிப்பிட்ட ஆங்கில நாளிதழை வாங்குவது வழக்கம். அன்று அந்த ஆங்கில நாளிதழ் இல்லை. கடைக்காரர், 'தினமலர் வாங்கிப் பாருங்கள் சார்... அதில், மற்ற பேப்பரில் இருக்கும் விஷயமும் இருக்கும், எந்த பேப்பரிலும் இல்லாத விஷயங்களும் இருக்கும்...' என்று சொல்லி கொடுத்துள்ளார்.
தினமலர் இணைப்பான வாரமலர் இதழை படித்தவர், அதில், குற்றால டூர் பற்றி வெளியான அறிவிப்பை படித்து, கூப்பனை அனுப்பி பார்ப்போமே என்று அனுப்பினார். அவரே எதிர்பார்க்காத வகையில் தேர்வானார்.குடும்பத்தோடு குற்றாலம் வந்தவர், வார்த்தைக்கு வார்த்தை, தினமலர்-வாரமலர் இதழை வாழ்த்திக் கொண்டே இருந்தார். 'வாரமலர் இதழ் ஒன்று தான், வாசகர் என்பதைத் தாண்டி ஒரு குடும்ப நேசத்தோடு, உறவின் பாசத்தோடு பார்க்கிறது...' என்று கூறினார். 'ஊர் திரும்பியதும் வீட்டில், நிறுவனத்தின் நூலகத்தில் என்று, தான் போகும் இடங்களில் எல்லாம், இனி, தினமலர் நாளிதழ் தான் வாங்கிப் போடப் போகிறேன்...' என்று சொல்லிச் சென்றார்.
இவர்கள் இப்படி என்றால், 1995ல், டூரில் கலந்து கொண்ட கவுசிக் என்ற இரண்டரை வயது சிறுவனை, இன்னமும் மறக்கமுடியாது.
சென்னையைச் சேர்ந்த சேகர்-புவனா தம்பதியின் மகனான கவுசிக், படு குறும்பு. எப்போதும், 'அபா... அபா' என்று கூப்பிட்டபடி, தன் அப்பாவையே சுற்றி வந்தாலும், எல்ல அருவிகளிலும் பயப்படாமல் குளித்து கும்மாளம் போட்டும், யார் தூக்கி கொஞ்சினாலும், அழாமல் சிரித்து விளையாடியதுமாக, அந்த வருட டூரின் நட்சத்திரம் கவுசிக்தான்.
கவுசிக்கின் குறும்பில் மனம் பறிகொடுத்த அந்துமணி, டூர் முடிந்த சில நாட்களிலேயே, கவுசிக்கின் படம் சிறுவர் மலர் இதழ் அட்டையில் வெளி வர சிபாரிசு செய்தார். மீண்டும் அந்த குடும்பத்தினர், அருவியில் குளித்த ஆனந்தம் அடைந்தனர்.
இது நடந்து முடிந்து, 18 வருடங்களான நிலையில், வெள்ளி விழா டூருக்கு பழைய வாசகர்களுக்கு அழைப்பு விடுத்த போது, ஒரு கடிதம் வந்தது. 'நாங்கள், 1995ல், டூரில் கலந்து கொண்ட கவுசிக்கின் பெற்றோர். கவுசிக் இரண்டரை வயதில், டூரில் கலந்து கொண்ட போது, செய்த குறும்பை, வீட்டில், இப்போதும் நினைத்து நினைத்து பேசுவோம். ஆனால், பாவம் கவுசிக்குத்தான் எதுவும் நினைவில் இல்லை. சிரிப்புடனும், வெட்கத்துடனும் ஓடி விடுவான்.
'கவுசிக் அறியாத வயதில் பார்த்த குற்றாலத்தை, அறியும் வயதில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா...' என்று கேட்டு, கடிதம் எழுதியிருந்தனர். கூடவே, கவுசிக்கின் இன்றைய புகைப்படத்தையும் இணைத்திருந்தனர். கடிதமும் தேர்வாகி, தொடர்பு கொள்ள முயன்ற போது தான், அந்த சிக்கல் நேர்ந்தது.
ஒரே நபர், மூன்று மொபைல் போன் வைத்திருக்கும் இந்த காலத்தில், இந்த குடும்பத்தில், கவுசிக்கையும் சேர்த்து மூன்று பேர் இருந்தும், ஒருவர் கூட மொபைல் எண்ணைக் குறிப்பிடவில்லை. கடிதத்தை திருப்பி திருப்பி பார்த்தும், எந்த இடத்திலும் தொடர்பு எண் இல்லை. இதன் காரணமாக, இவர்களை அழைக்க முடியாமல் போயிற்று.
இப்படி, அதிர்ஷ்டம், அது இஷ்டத்திற்கு விளையாடியதை அறிந்த நீங்கள், அடுத்தடுத்த வருடங்களில், தினமலர் ஊழியர்களை வைத்து போடப்பட்ட, 'நாடகங்கள்' பற்றி தெரிந்து கொண்டால், உங்கள் மனதிற்குள் நிச்சயம் மகிழ்ச்சி மத்தாப்பூ பூக்கும். அந்த நாடகங்கள் பற்றி, அடுத்த வாரம் சொல்கிறேன்.
குற்றாலமும், அகஸ்தியர் அருவியும்...
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தை தாண்டியுள்ள, முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குள் அமைந்துள்ளது அகஸ்தியர் அருவி.
போகும் வழியில், பாபநாசம் சிவன் கோவில் வரும். கோவிலை ஒட்டி, தாமிரபரணி ஆறு ஓடுகிறது. ஆற்று குளியலை விரும்புவோருக்கு இது ஒரு அருமையான இடம். இங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரம், பசுமையான மலைகளின் வழியாக பயணித்தால், அகஸ்தியர் அருவி வரும்.
உலகம் சம நிலை பெற, இறைவனால், தென்திசைக்கு அனுப்பப்பட்ட அகஸ்தியர் வந்த இடம் இது என்பதால், இந்த இடத்திற்கு அகஸ்தியர் அருவி என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றாலத்தில், குளித்து குளித்து, அலுத்து போனவர்கள், ஒரு மாறுதலுக்காக, இங்கு வருவதுண்டு. அதே போல, குற்றாலத்தில் குளிக்க முடியாத அளவிற்கு தண்ணீர் குறைவாக விழுந்தால், மொத்த கூட்டமும், தேடிவரும் இடமும் இதுதான்.
என்னதான் வானிலை மாற்றம் ஏற்பட்டாலும், இந்த அகஸ்தியர் அருவியில் மட்டும் 365 நாளும், தண்ணீர் விழும். நூறு அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் குளிப்பதற்கு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியாக இடம் உண்டு.
இங்கு, சிங்கவால் குரங்குகள் நிறைய உண்டு. .அங்குள்ள தடாகத்தில் பிடித்ததாக சொல்லி, நிறைய பேர் மீன் சுட்டு விற்பர்.
புலிகள் சரணாலயத்திற்குள் இருப்பதால், வனத்துறை அனுமதி பெற்றே உள்ளே நுழைய முடியும். மாலை, 6:00 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் என்பது போன்ற, கட்டுப்பாடுகள் உண்டு.
- அருவி கொட்டும்.
-எல்.முருகராஜ்

