PUBLISHED ON : மே 04, 2014

குற்றால டூரின் கதாநாயகரான அந்துமணியின் வாசகராக இருந்து, நண்பர்களானவர்களின் பட்டியல் வெகு நீ....ளமானது. அழகர்ராஜா, ஆட்டோ கண்ணன், குணசேகரன், பாலாஜி, ரஷீத், அருண், கண்ணன் என்று நீளும். அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் மதுரை ஸ்ரீவேல்முருகன் டிரான்ஸ்போர்ட் அதிபர் செந்தில்.
நீண்ட கால வாரமலர் வாசகரான செந்தில், அந்துமணியின் கட்டுரைகளை தொடர்ந்து படித்து, எப்படியும் அவரை ஒருமுறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று, ஆர்வமுடன் இருந்தார்.
ஒரு நாள், இவரது ஆர்வமும், ஆசையும் கூடி வந்தது. அந்துமணியை ஒருமுறை பார்த்து பேசினால் போதும் என்று நினைத்து சந்தித்தவர், பின், அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று எண்ணினார். இவரது அன்பும், நட்பும், பேச்சும் அந்துமணி மனதிற்கு நெருக்கமான மனிதராக கொண்டு வந்தது.
இதன் காரணமாக, அந்துமணி மதுரை வந்தால், இவரை சந்திக்காமல் இருக்க மாட்டார். அந்துமணி தொடர்ந்து சில மாதங்கள் மதுரை வராவிட்டால், செந்தில் சென்னைக்கு வந்து பார்த்துவிட்டு போவார்; அந்த அளவு பாசம் கொண்டவர்.
இவர் அந்துமணிக்கு அறிமுகமான புதிதில், இவருடன் அதிகம் பேச முடியாத சூழ்நிலையில் இருந்த அந்துமணி, 'நான் வாசகர்களுடன் குற்றால டூர் போகிறேன்; இது, எனக்கு முக்கியமான நிகழ்ச்சி. ஆகவே, குற்றாலத்தில் நான் கொஞ்சம் ப்ரீயாக இருப்பேன். அங்கே வாங்களேன் சந்திப்போம்...' என்று, ஒரு வார்த்தை சொல்லி விட்டார்.
அவ்வளவுதான்! 'அந்துமணி என்னை குற்றாலத்தில் வைத்து பார்ப்பதாக சொல்லியுள்ளார்...' என்று, அவரது நட்பு வட்டாரத்தில் தண்டோரா போட, 'அண்ணா... நானு நானு...' என்று, ஒவ்வொருவராக கிளம்பி விட்டனர். அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒரு ஜீப், இரண்டு கார், மூன்று வேன்களில், குற்றாலம் வந்து விட்டார் செந்தில்.
குற்றாலம் வந்தவர், வாசகர்களோடு அந்துமணி தங்கியிருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து வந்தபோது, இரவு, 2:00; மணி. விடுதி செக்யூரிட்டி கதவை திறக்காமல், என்ன ஏது என்று கேட்ட போது, 'அந்துமணியை சந்திக்கணும்...' என்று சொல்லியிருக்கிறார். செக்யூரிட்டிக்கு எதுவும் புரியவில்லை; எனக்கு தகவல் கொடுத்தார்.
'வணக்கம் சார்; எங்கே இவ்வளவு தூரம்...' என்றதும், அவர் விஷயத்தை சொன்னார். 'ரொம்ப சந்தோஷம்; இதுதான் ஐந்தருவியில் குளிப்பதற்கு ஏற்ற நேரம் என்பதால், அந்துமணி ஐந்தருவிக்கு போயிருக்கிறார்; நீங்க எல்லாரும் உள்ளே வந்து தங்குங்க, காலையில பார்த்து விடலாம்...' என்றதும், 'அதெல்லாம் முடியாது; நாங்க ஐந்தருவியிலேயே அவரை பார்த்துக்கிறோம்...' என்றவர், 'எட்றா வண்டியை; விட்றா ஐந்தருவிக்கு...' என்று கட்டளையிட, நள்ளிரவு அனைத்து வண்டிகளும் உருமலுடன் ஐந்தருவி நோக்கி விரைந்தன.
ஐந்தருவியில் அந்துமணியை சந்தித்து, அறிமுகம் செய்து, 'குட்மார்னிங்' சொல்ல, 'கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருப்போம்; மெய்யாலுமே, குட்மார்னிங் வந்துடும்...' என்று, அந்துமணி சொல்ல, பேச்சு சுவாரசியத்தில் விடிந்தும் போனது, குட்மார்னிங்கும் வந்தது.
அதன்பின் வந்த வருடங்களில், குற்றால டூர் பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே, அந்த நாட்களில், அந்துமணியுடன் குற்றாலத்தில் இருப்பதை வழக்கமாக்கி கொண்டார்.
செந்தில் அதிகம் பேச மாட்டார்; ஆனால், ரசனை மிக்கவர். அபூர்வமாகத்தான் வாசகர்களுடன் மகிழ்ச்சி எனும் ஜோதியில் கலந்து கொள்வார். 2008-ல் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. வந்திருந்த வாசகர்கள் ஆண், பெண் என்று பிரிக்கப்பட்டு, இருவருக்குமிடையில், கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கு நடுவர் செந்தில்.
இந்த கிரிக்கெட் போட்டிக்கு, செந்தில், சில புதிய விதிகளை கொண்டு வந்தார். ஆண் வாசகர்கள் இடது கையால்தான் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய வேண்டும். திரும்பி நின்று பீல்டிங் செய்வதுடன், விக்கெட் கீப்பிங் பத்தடி தள்ளி நின்று தான் செய்ய வேண்டும்; அடிக்கிற மாதிரி பந்து போடணும், பிடிக்கிற மாதிரி வந்தால், விட்டுடணும் என்பதுதான், அவர் கொண்டு வந்த விதிகள்.
'இந்த விதிகளோடு விளையாடறதுக்கு பதிலா, மரத்தடியில தலைகீழா நின்னு யோகா செய்துட்டு போகிறேன்...' என்று அழகர்ராஜா போன்றவர்கள் போட்டியில் இருந்து விலகியது தனிக் கதை. விதிகளை ஏற்று, களம் இறங்கிய ஆண்கள் அணியுடன், கடுமையாக போராடி, பெண்களின் அணி வெற்றி வாகை சூடியது.
'சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெற்றுள்ள நம் மகளிர் அணிக்கு, இந்த மகத்தான கோப்பையை பரிசளிக்கிறேன்...' என்று சொல்லி, காலியான வாட்டர் கேனை, உடனடி பரிசாக வழங்கி கவுரவித்தார் செந்தில். அந்த வெற்றிக்கோப்பையை தலையில் சுமந்தபடி, மகளிர் அணி மைதானத்தை வலம் வந்து, தந்தையர்குல அணியை மேலும் வெறுப்பேத்தியது.
இதே போன்று, அந்த வருடம் இன்னும் பல சுவாரசியங்கள் நடந்தன. அதை எல்லாம் பார்ப்பதற்கு முன், உலகமே வரவேற்று மகிழ்ந்த, 2000வது ஆண்டில் புத்தாண்டு குற்றால டூர் எப்படி இருந்தது என்பதை, பார்த்து விடுவோம்.
— அருவி கொட்டும்.
குற்றாலமும், மலைக்குகையும்!
குற்றாலம் அருகில் உள்ள செங்கோட்டை -- கொல்லம் ரயில் வழித்தடத்தில், ஐந்து மலைக்குகைகள் உள்ளன. இதில், கோட்டை வாசல் -- ஆரியங்காவுக்கு இடையில் இருந்த மலைக்குகை, சுமார், 1 கி.மீ., நீளம் கொண்டது.
இதை, ரயிலில் கடப்பதற்கு, இரண்டரை நிமிடங்கள் ஆகும். இக்குகையினுள் செல்லும்போது கும்மிருட்டாகவும், கடும் குளிராகவும், ரம்மியமான சூழலும் நிலவும். பயணிகள் குறிப்பாக குழந்தைகள் குஷியாகி, 'ஓ'வென்று, ஆரவாரமிடுவர். இந்த ஒலி, குகைக்குள் எதிரொலித்து, அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்தும். பெரியவர்களையும் சிறுவர்களாக்கி, சந்தோஷப்பட வைக்கும்.
இதெல்லாம் ஒரு காலம். விஞ்ஞான வளர்ச்சி மற்றும் இன்றைய தேவைகளின் காரணமாக சில விஷயங்களை பலி கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அகல ரயில் பாதையின் அவசியம் கருதி, தற்போது, இந்த மலைக்குகையை மாற்றி, இரும்பாலான மலைக்குகை அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
-எல்.முருகராஜ்
