தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே... (36)

பசுமை நிறைந்த நினைவுகளே... (36)

பசுமை நிறைந்த நினைவுகளே... (36)


PUBLISHED ON : மே 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 2000மாவது ஆண்டை, உலகம் பலவிதங்களில் வரவேற்று மகிழ்ந்தது. இந்த ஆண்டில் எதை செய்தாலும், அது சிறப்பானதாக அமையும் என்று கருதப்பட்ட நிலையில், வாரமலர் குற்றால டூரும், சிறப்பாகவே நடைபெற்றது.

அந்த ஆண்டு குற்றால டூரின் முதல் நாள், வாரமலர் வாசகர்களை வாழ்த்தி வழியனுப்பும் விழாவை, நாடே குதூகலம் பொங்க கொண்டாடியது. 'இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா'ன்னு நினைக்காதீங்க. அன்று, ஆக.,15 சுதந்திர தினம் என்பதால், சுதந்திர தின கொண்டாட்டத்துடன், நம் கொண்டாட்டமும் இணைந்து கொண்டது.

காபி கொடுத்த கையோடு, அனைவருக்கும் சுதந்திர தின கொடியை குத்திவிட்டு, 'ஆடுவோமே பள்ளுபாடுவாமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்...' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, வாசகர்கள் அறிமுக விழா, சுதந்திர தின விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது.

அந்த ஆண்டு டூரில் கலந்து கொண்டவர்களில், மதுரை, என்.ரவீந்திரன்-மீனாட்சி தம்பதியினர் விசேஷமானவர்கள்.

இவர்கள் வெள்ளி விழா டூருக்கு அனுப்பிய விண்ணப்பம், என்னை வியப்பில் ஆழ்த்தியது. காரணம், 2000மாவது ஆண்டின் போது கொடுத்த உணவு மெனு, நிகழ்ச்சி நிரல் படிவம், அந்துமணியின் நன்றி கடிதம் உள்ளிட்ட எதையுமே தூக்கி போட்டு விடாமல், பொக்கிஷமாக பாதுகாத்து வந்துள்ளனர். அவை அனைத்தையுமே, நகலெடுத்து தபாலில் அனுப்பியிருந்தனர்.

மாநில அரசின் செயற்பொறியாளராக இருந்த ரவீந்திரன், கடந்த, 2000மாவது ஆண்டில் டூரில் பங்கேற்று, படகு குழாமில் படகு பயணம் மேற்கொண்ட போது, அவரது மணிபர்ஸ் எப்படியோ தொலைந்து விட்டது. விடுதிக்கு வந்த பின் தான், தொலைந்த விவரமே அவருக்கு தெரிய வந்தது.

பர்சினுள் ஐநூறு ரூபாய் பணமும், அலுவலக அடையாள அட்டையும், டிரைவிங் லைசென்சும் இருந்துள்ளது. 'பணம் போனால் போகட்டும் ஆனால், டிரைவிங் லைசென்சும், அடையாள அட்டையும் முக்கியமே...' என்று, கவலைப்பட்டார்.

தன் கவலையை வெளியே சொன்னால், மற்றவர்கள் சங்கடப்படுவர் என்பதால், தனக்குள்ளேயே வைத்துக் கொண்டவர், என்னிடம் மட்டும் தயங்கி தயங்கி சொன்னார். எல்லாரும் ஓய்வெடுக்க அறைக்கு சென்றபின், படகு குழாமிற்கு போய், அனைத்து இடங்களிலும் பர்சை தேடிவிட்டு அங்கு இருந்தவர்களிடமும் விவரம் சொல்லி வந்தோம்.

டூருக்கு வரும் வாசகர்களுக்கு எந்த கவலையும் இருக்கக் கூடாது என்று, நாங்கள் நினைத்திருந்த நிலையில், வாசகர் ரவீந்திரனுக்கு இந்த கவலை வந்துவிட்டதே என்று நினைத்து இருந்த போது, அதிசயமாக அந்த நிகழ்வு நடந்தது.

மாலை தென்காசி கோவில் போய்விட்டு, நாங்கள் தங்கியிருந்த ஆனந்தா கிளாசிக் ஓட்டலுக்கு திரும்பிய போது, ஓட்டல் மேலாளர், ஒரு கவரை ரவீந்திரனிடம் கொடுத்தார். கொடுத்தவர் எந்த விவரமும் சொல்லாமல், 'உங்களிடம் பத்திரமாக தரச் சொன்னார்...' என்று, மட்டும் கூறினார்.

அந்த கவரை ரவீந்திரன் திறந்ததும், உள்ளே ஒரு கடிதமும், காணாமல் போன பர்சும் இருந்தது. கடிதத்தில், 'இத்துடன் உங்கள் பர்சும், உங்களது அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் பத்திரமாக உள்ளது. நீங்கள் வாரமலர் டூரில் வந்த வாசகர் என்பதும், எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்ற விவரமும் பர்சினுள் இருந்த குறிப்புகள் மூலமாக அறிந்தேன்; பர்சினுள் இருக்கும் பொருட்கள் முக்கியமானது என்பதை உணர்ந்தேன். ஆகவே பர்சை பத்திரமாக சேர்த்து விட்டேன்; தப்பாக நினைக்க வேண்டாம் நான் திருடனில்லை. ஆனால், நான் நல்லவனுமில்லை. காரணம், என் கையில் கிடைத்த இந்த பர்சினில் இருந்த பணம் ஐநூறை, என் கஷ்ட நிலைமை காரணமாக எடுத்துக் கொண்டேன். முடிந்தால் பின்னாளில் அனுப்பி வைக்கிறேன். மன்னிக்கவும் நன்றி...' என்று, எழுதப்பட்டு இருந்தது.

ரவீந்திரனுக்கு அதிக சந்தோஷம். இந்த தகவலை கேள்விப்பட்டதும், அனைவருக்குமே அந்த, 'நல்லவனின்' கடிதமும், ரவீந்திரனின் பர்சும் காட்சிப் பொருளாகி விட்டது.

அனைவரும் கடிதத்தை வாங்கி படிப்பதும், பர்சை வாங்கி அதிசயமாக பார்த்துவிட்டு தருவதுமாக இருந்தனர். இந்த விஷயம் அந்துமணிக்கு தெரியவர அவரது கைக்கு, கடிதமும், பர்சும் சென்றது.

அவரிடம் சென்ற பர்ஸ் ரவீந்திரனிடம் திரும்பிவந்த போது, அதனுள் இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது.

குற்றாலமும், குரங்குகளும்…

குற்றாலத்தின் சிறப்பு, அதன் அருவிகளில் மட்டுமல்ல, அங்கு சுறுசுறுப்புடன் திரியும் கணக்கற்ற குரங்குகளிடமும் தான் உள்ளது.

குரங்குகள் மட்டும் இல்லை என்றால், குற்றால மலைகள் எப்போதோ, தன் பசுமையை இழந்திருக்கும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

குரங்குகள் தாங்கள் சாப்பிட்ட எச்சத்தை குறிப்பாக பழங்களின் கொட்டைகளை, மலை எங்கும் பரவச் செய்வதால் தான், யாருமே விதைக்காமல், பராமரிக்காமல் இவ்வளவு மரங்கள், செழித்து வளர்ந்து காணப்படுகின்றன.

இங்கிருக்கும் குரங்குகள் தங்கள் குழந்தை, குட்டிகளுடன் பாசம் காட்டி, மரத்துக்கு மரம் தாவி தாவி விளையாடும் அழகே தனி. சுறு சுறுவென்று, சுறுசுறுப்பு திலகங்களாக திகழும் இவைகள், தாங்கள் பசியாறிய பின், யாருடைய உணவையும் தட்டிப் பறிப்பது இல்லை.

குரங்குகள் இல்லாத குற்றாலம், அழகாக இருக்காது. ஆகவே, அடுத்த முறை குற்றாலம் போகும் போது, உங்கள் கையில் உள்ள தின்பண்டங்களை நாடி ஓடிவரும் அவைகளை, கம்பாலோ, கல்லாலோ அடித்து துரத்தாதீர்கள். அவைகள் யாரிடம் போய் தன் பசியை சொல்லி உணவு கேட்கும்! ஆகவே, முடிந்தவரை கையில் உள்ள தின்பண்டங்களை கொடுங்கள்; குழந்தைகளிடம் காசு கொடுத்து தின்பண்டங்களை வாங்கி போடச் சொல்லி கற்றுக் கொடுங்கள்.

— அருவி கொட்டும்.

-எல்.முருகராஜ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us