தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே! (45)

பசுமை நிறைந்த நினைவுகளே! (45)

பசுமை நிறைந்த நினைவுகளே! (45)


PUBLISHED ON : ஜூலை 13, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 13, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளியல் மற்றும் ஷாப்பிங் பற்றி நீண்ட லெக்சர் கொடுத்த, குமரகுருபரனின் பேச்சை இடைமறித்த அவரது மனைவி சீதா, 'இன்னும் ஏதாவது சொல்ல வேண்டியது இருக்கா?' என்று, மிரட்டும் தொனியில் கேட்கவும், 'இனி இந்த வருடம் முழுவதுக்குமே சொல்றதுக்கு விஷயமில்ல...' என்று, அடக்க ஒடுக்கத்துடன், பதில் சொன்னார் குமரகுருபரன்.

பிறகு என்னைக் காண்பித்து, 'உங்க சிஷ்யப்பிள்ளை ஏதாவது சொல்லணும்ங்றாரா?' என்று கேட்டபடி, கையில் வைத்திருந்த இளநீர் மட்டையை தூக்கி போட்டு பிடித்தார். நான் பயந்து போய், 'ஐயோ சிஸ்டர் நான் எப்பவுமே, எதுவும் சொல்றது இல்லீங்க. முதல்ல அந்த இளநீர் மட்டையை தூக்கி போடுங்க. ரொம்ப நேரம் வச்சுக்கிட்டு இருக்கீங்க, கைவலிக்க போகுது...' என்றதும், 'சரி சரி கூடையை தூக்கிட்டு நடங்க...' என்று, உத்தரவு போட்டார்.

அதென்ன, 'கூடை' என்று, இந்த இடத்தில் உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

கைகடிகாரம், மூக்கு கண்ணாடி போன்ற பொருட்களை வைத்திருப்போர், அருவிக்கு பக்கத்தில் வந்ததும், இவற்றை கழற்றி பத்திரமாக வைக்க, ஒரு கூடை கொண்டு போவோம். அதில், அப்போது எண்ணெய், சீகைக்காய், சோப்பு, ஷாம்பூ போன்றவைகளும் இருக்கும்.

பின் ஒரு நாள் அந்துமணி, 'இந்த தண்ணீர், இந்த மாவட்டத்தின் பல ஊர்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் செல்வதால், அருவி நீரை முடிந்தளவு மாசுப் படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...' என்று சொன்னார். அவர் அப்படி சொன்ன பின், ஷாம்பூ, சோப்பு போன்றவைகளை பயன்படுத்த வேண்டாம் என்று, வாசகர்களே முடிவு செய்தனர். இதன் காரணமாக, இப்போதெல்லாம் அருவிகளில் குளிக்கும் போது, இவற்றை வாசகர்கள் பயன்படுத்துவது இல்லை.

'அருவியையும், விவசாயத்தையும், குடிநீர் அருந்தும் மக்களையும் மதித்து குளிப்பது, வாரமலர் வாசகர்கள் தான்யா...' என்று, திடீர் விசிட் வந்த கலெக்டர் பாராட்டி சென்றது, இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

குமரகுருபரனின் மனைவி சீதா, உத்தரவு போட்டு முன்னே நடக்கவும், குமரகுருபரனுடன் கிசுகிசு குரலில் பேச்சுக் கொடுத்தேன்...

'சீதா சிஸ்டர் நம்ம கூட இருக்கிறது வாசகியர்களுக்கு ஒரு பாதுகாப்புதான். ஆனா, உங்க நெலமதான் அப்பப்ப பஞ்சராகுது. அத நினைச்சுதான் கவலை...' என்று சொன்னதும், 'உங்க முகத்த பாத்தா கவலைப்படற மாதிரி தெரியலையே... உள்ளூர சந்தோஷம் பொங்கி வழியற மாதிரி இருக்கே...'என்றார்.

தொடர்ந்து பேசுகையில், 'இப்ப சொல்றேன் எழுதி வச்சிக்குங்க; காலம் இப்படியே போயிராது, காத்தும் ஒரே பக்கமே அடிக்காது. நீங்களும் உங்க சம்சாரத்தோட இங்க வரத்தான் போறீங்க. அப்ப நானும் இதே போல, இல்லையில்லை... இதைவிட அதிகமா நமட்டுச் சிரிப்பு சிரிக்கத்தான் போறேன்...' என்று, அவர்விட்ட சாபம், அடுத்த ஆண்டிலேயே பலித்து விட்டது. அந்த சொந்தக் கதையை அதாகப்பட்ட என் நொந்தக் கதையை, அப்புறம் சொல்கிறேன்.

இப்ப ஐந்தருவிக்கு வருவோம்...

ஐந்தருவியில் வாசகிகளுக்கு அபார வரவேற்பு கிடைத்தது. அப்போது குற்றாலம் இன்ஸ்பெக்டராக இருந்த குமார், ஒரு அருமையான மனிதர்; அந்துமணியின் நண்பர். தனக்கு கீழ் இருந்த பெண் போலீசார் உதவியுடன், வாசகிகள் குளிக்க வழி செய்தார்.

ஐந்தருவியில், முதல் இரண்டு அருவி பெண்களுக்கும், மற்ற மூன்று அருவிகள் ஆண்களுக்கும் என்பது, காலம் காலமாக உள்ள நடைமுறை.

ஆனால், அந்த வருடம் பியூலா, சத்யா, புவனேசுவரி, ஜான்சி, பாலாராணி, சுகன்யா என்று ஏகப்பட்ட இளைமைப் பட்டாளம். 'ஏன்... ஐந்தருவியின் நடு அருவியில நாங்க குளிக்கக் கூடாதா...' என்று, கேள்வி கேட்டனர்.இதைக்கேட்ட ஆட்டோ கண்ணன், 'பெண் என்றால் பேயே இரங்கும் போது, நடுவில் இருக்கும் அருவி மட்டும் இரங்காதா?' என்று, இன்ஸ்பெக்டர் குமாரிடம் விஷயத்தை எடுத்துப் போனார். 'அவ்வளவுதானே விஷயம்...' என்று, நடுவில் இருந்த தடுப்பை கொஞ்சம் தள்ளி வைத்தார். அப்புறமென்ன... 'ஐந்தருவியில மூன்றருவி நமக்கு...' என்றபடி, ஆடிப்பாடி குளித்தனர்.

வந்திருந்த வாசகியரில் திருமதி திரவியமும் ஒருவர். வயது முதிர்வு மற்றும் மூட்டு வலி காரணமாக ஒதுங்கி நின்று, மற்றவர் குளிப்பதை, ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.

இதை அந்துமணி கவனித்து விட்டார். திருமதி திரவியத்தின் கண்ணைப் பார்த்து, அவரது ஏக்கத்தை புரிந்து கொண்டவர், பின் என்னைப் பார்த்தார். நான் அவரது கண்அசைவை புரிந்து, இன்ஸ்பெக்டர் குமாரை அணுக, அடுத்த நிமிடம், எங்கு இருந்தோ ஒரு மடக்கு சேர் கொண்டு வரப்பட்டது. அதில் திரவியம் அம்மாள் உட்கார்ந்து, குளித்தார். குற்றால வரலாற்றில், நாற்காலியில் உட்கார்ந்து குளித்தது அனேகமாக, இவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

'கிட்டத்தட்ட இருபது வருடம் கழித்து, குற்றால அருவியில் குளிக்கிறேன். எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா... நான் நினைச்சே பாக்கவில்ல...' என்ற திரவியம் அம்மாள், சந்தோஷத்துடன் இன்ஸ்பெக்டர் குமாரை அருகில் அழைத்து, தாயாய் மாறி, உச்சந்தலையில் முத்தம் தந்து ஆசீர்வதித்தார். அவருக்கும், அருகில் இருந்த அந்துமணிக்கும் திரவியத்தின் மகிழ்ச்சி, நெகிழ்ச்சியை தந்துவிட, விழியோரங்களில் ஆனந்தக் கண்ணீர்.

இது தவிர, அதே ஆண்டு, மேலும் சில புதுமையான அனுபவங்கள், டூர் வாசகர்களுக்கு கிடைத்தது. அது என்ன என்பது, அடுத்த வாரம்.

குற்றாலமும், சுற்றுலா பயணிகளும்...

வேறெந்த ஆண்டிலும் இல்லாத அளவில் இந்தாண்டு, பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள காவல் துறையினர், மேலும், சில விதிமுறைகளை விதித்துள்ளனர். அவை:

குரங்குகள் சாலைகளில் அங்குமிங்கும் போய் வரக்கூடும் என்பதால், குற்றாலத்திற்குள் வாகனங்களை மெதுவாக இயக்கவும்.

பைக் முன், சீட் கவர்களில், தின்பண்டங்கள் மற்றும் வேறெந்த பொருட்களையும் வைக்காதீர்கள். குரங்குகள் பைக் சீட்டுகளை கிழித்து சேதப்படுத்தி விடும்.

குற்றால அருவி நீரில் இயற்கையாகவே மூலிகைத் தன்மையும், ஆக்சிஜனும் நிறைந்திருப்பதால் சோப்பு, ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டாம்.

      மது அருந்திவிட்டு குளிப்பது உயிருக்கு ஆபத்தானது. இக்காரணத்தினாலேயே ஒவ்வொரு ஆண்டும் பலர் உயிரிழக்கின்றனர். மது குடித்துவிட்டு அருவிக்கு வருபவர்கள், மது பாட்டில்களை அருவிப்பக்கம் போட்டு உடைப்பவர்கள், தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்படுவர்.

நகைகள் அணிந்து குளிக்காதீர்கள்; விலையுயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

வன வளம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செண்பகாதேவி அருவி, தேனருவிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் ஜட்டி மட்டும் அணிந்தும், பெண்கள் உள்ளாடை மட்டும் அணிந்தும் அருவிகளில் குளிக்கக் கூடாது. பெண்கள் திறந்த வெளியில் உடை மாற்றக் கூடாது.

நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக, குற்றால அருவிகளில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து, அதிகாரிகள் இந்த ஆண்டு முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்; பாதுகாப்பாக குளியுங்கள்; சீசனை அனுபவியுங்கள்.

- இவற்றையெல்லாம் கடைபிடித்து, குற்றால அருவியில் குளித்து, திளைப்போம்.



— அருவி கொட்டும்.

-எல்.முருகராஜ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us