PUBLISHED ON : செப் 14, 2014

இந்த வருடம் நடந்து முடிந்த குற்றால டூரில் கலந்து கொண்ட, 'சந்தோஷகுமாராகிய' வழக்கறிஞர் செந்தில்குமார், டூர் முழுவதும் குழந்தையைப் போன்று ஏதாவது குறும்பு செய்து கொண்டே இருந்தார். அவர் செய்த குறும்புகளில் ஒன்று மறக்க முடியாத வகையில் இருந்தது என்று கடந்த வாரம் நிறுத்தியிருந்தேன். அது - பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் டூர் வாசகர்களிடம் பேசுகையில், வாசகர்களுக்கு திடீர் தலைப்பு கொடுத்து அவர்களையும் உற்சாகப்படுத்தி பேச வைப்பார். இந்த ஆண்டு, 'பெண்கள் வேலைக்கு போவதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமை' என்ற தலைப்பில் பேச சொன்னார்.
நன்மை என்றும் தீமை என்றும் மாறி மாறி பேசிய அனைவருமே பெண்கள். 'இங்கே இது குறித்து கருத்து சொல்ல ஆண்கள் யாருமே இல்லையா...' என்று ஞானசம்பந்தன் கேட்க, அனைவரும் செந்தில்குமாரை எழுப்பி விட்டனர்.
பலத்த கைதட்டலுடன், மைக் முன் நின்றார் செந்தில்குமார்.
'அனைத்து ஆண்குலங்களின் சார்பாக குரல் கொடுக்க வந்திருக்கும் செந்தில்குமாருக்கு, 'ஜே!' என்று, பின் வரிசையில் இருந்த ஆண் பார்வையாளர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைப் பிளந்தது. சுதந்திர தின விழா கொடியேற்றி, வீர உரையாற்றப்போகும் பிரதமர் பாணியில் செந்தில்குமார் தன் இரு கைகளையும் உயரத் தூக்கி, ஒரு சேர அசைத்தபடி அந்த வாழ்த்து கோஷங்களை ஏற்றுக்கொண்டார். இந்த காட்சியைப் பார்த்ததும், மனிதர் பேச்சில் பின்னப்போகிறார் என்று நினைத்து, அனைவரும் காதை தீட்டி ஆவலோடு கவனிக்க ஆரம்பித்தனர்.
'கனம் கோர்ட்டார் அவர்களே...' என்ற பாணியில், 'கனம் நடுவர் அவர்களே...' என்று ஜோராய்த்தான் ஆரம்பித்தார்; அதன்பின் சொதப்பினார் பாருங்கள்... 'பெண்கள் வேலைக்கு போவதால் தீமையே என்று பேசினால், இங்கே உள்ள பலரும் கைதட்டுவீர்கள்; நன்மையே என்று பேசினால், பொண்டாட்டிக்கு பயந்து பேசுகிறேன் என்பீர்கள்; ஆகவே, நன்மையின் பக்கமும் பேசாமல், தீமையின் பக்கமும் பேசாமல் விடைபெறுகிறேன். அப்போதுதான் இங்கேயும் சாப்பாடு கிடைக்கும்; வீட்டிற்கு போனாலும் சாப்பாடு கிடைக்கும்...' என்று சொல்லி, 'குடுகுடு'வென ஓடிப்போய் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
செந்தில்குமார் சொல்லப்போகும் பாயிண்டுகளை குறித்து, அதற்கேற்ப மதிப்பு தந்து பேசுவதற்காக பேனாவின் மூடியை திறந்து, பேப்பரில் எழுத தயாரான நடுவர் ஞானசம்பந்தன், தன் வாழ்க்கையில் இப்படி ஒரு கட்சிக்காரர் பேசி கேட்டதேயில்லை போலும்; பிரமை பிடித்தவர் போல செந்தில்குமார் போன திசையையே பார்த்தபடி இருந்தார்.
இருக்கையில் ஐந்து வினாடிதான் உட்கார்ந்திருப்பார், திடீரென எழுந்து, 'ஒரு முக்கிய விஷயம் சொல்லணும்...' என்றார்.
'இப்ப என்ன சொல்லப் போறாரோ...' என்று நடுவர் உட்பட அனைவரும், திகிலுடன் காத்திருந்தனர்.
'இந்த அருமையான வாய்ப்பை கொடுத்த வாரமலர் இதழுக்கும், அந்துமணிக்கும், மலர்க்கொடிக்கும் நன்றி...' என்று சொன்னார்.
'வாரமலர் தெரியும்; அந்துமணி ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா, யார் இந்த மலர்க்கொடி... நீங்க, உங்க சம்சாரம் புனிதாவோட வந்திருக்கிறதா சொன்னாங்க...' என்று நடுவர் கேட்டதும், 'ஒரு சின்ன பிளாஷ் பேக் இருக்கு சார்...' என்றபடி செந்தில்குமார் சொன்னதாவது...
'என் அப்பா சீனிவாசன் நேர்மையான அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். என்னை வழக்கறிஞருக்கு படிக்க வச்சாலும், 'பொய் சொல்வது, விவகாரத்து வாங்கி தருவது, சொத்தை பிரிப்பது போன்ற வழக்குகளில் தலையிடாதே... பெரிய பாவம்...' என்றார்.
அதனால், மழை நேரத்தில் ஒழுகும் பஸ்சில் பயணம் செய்து அவதிப்படும் பயணிகளுக்கு நஷ்ட ஈடு வாங்கித்தருவது, சிரமப்பட்டு வாங்கிய பிரிட்ஜ், 'டிவி' வேலை செய்யாமல் போனால் வேறு பெற்றுத்தருவது போன்ற நுகர்வோர் வழக்கில் மட்டுமே வாதாடுவதாக உறுதி எடுத்து, கடந்த, ௨௦ ஆண்டுகளாக நுகர்வோர் வழக்கறிஞராக மட்டுமே இருக்கிறேன்.
'இதில் வருமானம் இல்லாவிட்டாலும், மனநிம்மதி உண்டு. ஆரோக்கியமும், ஆனந்தமும் பொங்கிவழியும் குடும்பம் என்னுடையது; மனைவி, குழந்தைகள் என்று என்னளவில் நான் மிகுந்த மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.
'என் அப்பாவின் தங்கைதான் மலர்க்கொடி; மலர்க்கொடியின் ஒரே மகள் தான் என் மனைவி புனிதா. என் மாமியார் மலர்க்கொடியின் பாசத்திற்கும், நேசத்திற்கும் உரியவர்கள் நாங்கள் மட்டுமல்ல, 'தினமலர்' - வாரமலரும்தான்!
'அவர்தான் பல ஆண்டுகளாக வாரமலர் குற்றால சீசன் டூர் கூப்பனை, மகள் பெயரில் அனுப்பிக்கொண்டிருக்கிறார். கூப்பனை அனுப்பிவிட்டு, ஏதோ, 'டிக்கெட்' எடுத்தவர் போல, 'கூப்பன் போட்டிருக்கிறேன் ரெடியா இருந்துக்குங்க...' என்று சொல்வார். ஆனால், தேர்வாகாமல் போனதும், எங்களைவிட அவர்தான் அதிகம் சோர்வாகி விடுவார். எப்படியும் கிடைக்கும் என்று விடாமல், பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் அவர் எழுதிப் போட்டதால் தான், இப்போது நாங்கள் உங்கள் முன் நிற்கிறோம். அதனால், இந்த சந்தர்ப்பத்தில், அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்...' என்றார்.
'அப்புறம் இன்னொரு விஷயம்...' என்றபடி பார்வையாளர் பக்கம், தன் கண்களை ஓடவிட்டவர், ஒரு ஜோடி கண்களையும், அது சொன்ன மொழியையும் புரிந்து கொண்டவர் போல, 'நான் அந்த விஷயத்தை அப்புறம் சொல்றேன்...' என்று சொல்லி, வேகமாக போய் தன் மனைவி புனிதா அருகில் அமர்ந்து, 'அதான் வந்துட்டேன்லம்மா...' என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.
அவரது பேச்சை நிறுத்திய அந்த கண்களுக்கு சொந்தக்காரர் யார், செந்தில்குமார் சொல்ல வந்த அந்த இன்னோரு விஷயம் என்ன என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.
— அருவி கொட்டும்..
குற்றாலமும், தீ விபத்துகளும்...
வெள்ளியை உருக்கி கொட்டுவது போன்ற அருவியும், அதன் சில்லென்ற சாரலும், வானுயர்ந்த மரங்களும், பொதிகைத் தென்றலும், வெண்மேகங்கள் மலையைத் தழுவிச் செல்லும் காட்சியையும் கண்டால், சாதாரண மனிதர்கள் கூட கவிஞனாகி விடுவர்.
பொதிகை மலையான குற்றால மலை, அருவிநீர் மூலமாக மூலிகை மருத்துவத்தை கொண்டு சேர்க்கும் மருத்துவராக காலம் காலமாக எந்த கைமாறும் கருதாமல் மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
பதிலுக்கு, மலை வளத்தை நாசப்படுத்தும் தீ விபத்துகளை ஏற்படுத்துவது தான், மலைகளுக்கு நாம் செய்யும் கைமாறு.
தமிழகத்தில் இயற்கையை இன்னமும் விட்டு வைத்திருக்கும் இடமான குற்றாலத்தை காண வரும் பொதுமக்கள், மலையோரங்களில், குறிப்பாக, பழைய குற்றாலத்து பாதையில் சமைத்து, சாப்பிட்டுவிட்டு மீதம் இருக்கும் நெருப்பை அணைக்காமல் அப்படியே விட்டுச் செல்கின்றனர்.
பெரும்பாலும் இவை, சாரல், தூரலுக்குள் சிக்கி அணைந்துவிடும் என்றாலும், சில நேரங்களில் அணையாமல் இருக்கும் நெருப்பானது, கொஞ்சம் கொஞ்சமாக சருகுகள் வழியாக பரவி, மலையில் உள்ள மரங்களைப் பற்றி, வனங்களின் அழகையும் அழித்து விடுகிறது.
சாப்பிட்டு முடித்து, பாத்திரம் கழுவிய நீரை ஊற்றினால் கூட சமையல் செய்து மீதமான நெருப்பு அணைந்துவிடும். ஆனால், அதைக்கூட செய்யாமல், பொறுப்பில்லாமல் போவதன் காரணம் தான் இந்த தீ விபத்து என்று சொல்லி தீயணைப்பு நிலையத்தார் வேதனைபடுகின்றனர்.
இந்த வேதனை இனியும் தொடரத்தான் வேண்டுமா?
-எல்.முருகராஜ்
