PUBLISHED ON : அக் 13, 2013

குற்றால டூருக்கு வருகை தந்த, வாசகர் களை மகிழ்விக்க, நகைச்சுவை நடிகர்கள் உட்பட, பலர் வந்திருந்தாலும், அவர்களையும் தாண்டி , வாசகர்கள் கண்களில், ஒரு தவிப்பும், தீவிர தேடலும் இருந்தது. அந்த தவிப்பிற்கும், தேடலுக்கும் காரணம் அந்துமணி!
அன்று முதல், இன்று வரை, வாசகர்களை நேரில் அழைக்கச் செல்லும் போதெல்லாம், அவர்கள், 'அந்துமணி வருவாரா' என, சூடம் ஏற்றி, சத்தியம் வாங்காத குறையாக, கேட்டு, அதன் பின்னர் தான், தங்களது, வருகையை உறுதி செய்வர். அதற்கு காரணம், அவரது எழுத்துக்கள்.
இந்திய அமைதிப்படை, இலங்கையில் முகாமிட்டிருந்த சமயத்தில், அவர்களின் பணி பற்றி, பத்து வாரம், தொடர் கட்டுரையாக எழுதி, பரபரப்பை ஏற்படுத்தியவர். மற்ற கட்டுரையாசிரியர்கள் எல்லாம், உட்கார்ந்த இடத்திலிருந்தே, யாழ்ப்பாணம், நுவரேலியா பற்றி எழுதிக் கொண்டு இருந்த போது, அந்துமணி, இந்திய ராணுவத்திற்கு சொந்தமான, ஒரு லொட, லொட ஹெலிகாப்டரில், 'என் உயிருக்கு, நானே பொறுப்பு...' என்று, எழுதிக் கொடுத்து, சென்றிருந்த, 'திக்,திக்' பயணம் அது.
ஒவ்வொரு வாரமும், அடுத்தது, 'என்ன' என்பதை, 'திரில்'லுடன் சொன்ன, அருமையான பயணக்கட்டுரை. சரியாக சொல்லப்போனால், இலங்கையில், என்ன நடக்கிறது என்பதை, உள்ளது உள்ளபடி சித்திரித்த, முதல் கட்டுரை அது.'யாருக்காக போரிடுகிறோம்... செத்தால் கூட, நாட்டிற்காக செத்தோம் என்று, சொல்ல முடியாத, அவல நிலை இது...' என்று, மனமுடைந்திருந்த, நம் ராணுவ வீரர்களின், மனதையே மாற்றும், வலிமையான எண்ணங்களை, கொண்டிருந்தது, அவரின் எழுத்து. ராணுவ வீரர்களின் சிரமங்கள், போர் அனுபவங்கள், அப்போதைய முதல்வர் வரதராஜ பெருமாளுடனான நேர்முகம் என்று, பல விஷயங்களை, அக்கட்டுரையில், சுவாரசியமாக சொல்லியிருந்தார்.
பத்திரிகையாளர்களாக விரும்புவோருக்கு, அந்த, பத்து வார தொடரை, தொகுத்து கொடுத்தால் போதும், அதைவிட, சிறந்த பாடம் இருக்க முடியாது. அந்த கட்டுரை தொடரை படித்து, அடிக்கடி சந்திக்கும் என்னைப் போன்றவர்களே, அவர் மீது, தனி அபிமானம் கொண்டு, வியந்து பார்த்து வந்தோம் என்றால், ஒரு முறை கூட, பார்த்திராத வாசகர்களுக்கு, எந்த அளவு ஆர்வம் இருந்திருக்கும் என்று, சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
இதே போல், அடுத்து வந்த, அமெரிக்க பயணக் கட்டுரையில், உள்ளூர் தமிழன், அமெரிக்காவில், எப்படி எல்லாம், எளிய முறையில், வேலை வாய்ப்பை பெறலாம் என்பதை சொல்லி, அதற்கான கதவுகளை, தன் கட்டுரை மூலம், திறந்து விட்டார்.
மேலும், அப்போதுதான், பா.கே.ப., பகுதி சூடு பிடிக்க ஆரம்பித்திருந்த நேரம். 'ரோட்டோரம், வைக்கோல் லாரி டிரைவரிடம், இரண்டு ரூபாய் லஞ்சம் வாங்கும், போக்குவரத்து போலீசாரைவிட, குளிர்சாதன அறையில் இருந்தபடி, லட்சம் லட்சமாய், லஞ்சம் வாங்கும், உயர் போலீஸ் அதிகாரிகள்தான் முதலில் களையப் படவேண்டிய, 'களைகள்' என்று, பேனாவில், நேர்'மை'யை நிரப்பி, நெருப்பு பொறி, பறக்க எழுதிக் கொண்டிருந்தார்.
இன்னொரு பக்கம், பாரதியும், பாரதிதாசனும் தம்முடைய, கவிதை வரிகளால், உயர்த்த நினைத்த, பெண்மையை,கேள்வி - பதில் பகுதி மூலமாக, அப்பணியை செய்து கொண்டிருந்தார். சுருங்கச் சொல்ல வேண்டுமானால், எழுத்தை, வேலையாக செய்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், அதை, இவர், வேள்வியாக கருதி எழுதினார். அந்துமணியின், கார்ட்டூன் முகத்தை போட்டு, சென்னை என்று எழுதினாலே போதும், அந்த அஞ்சலட்டை, மிகச்சரியாக, இவரது கைக்கு கிடைத்துவிடும். அந்த அளவிற்கு, இவரது எழுத்து, புகழ் பெற்றிருந்தது.
இதன் காரணமாக, 'எப்படியும் அந்துமணியை,
பார்த்தாக வேண்டும்' என்று, வாசகர்கள், வரிந்து கட்டி, களத்தில் இறங்கினர். ஆனால், 'என் எண்ணமும், எழுத்தும் வெளிப்பட்டால் போதும். நான், ஏன், வெளிப்பட வேண்டும்...' என்று, தன்னை, ரொம்பவே சுருக்கிக் கொண்டு, வாசகர்களோடு வாசகர்களாக, எதுவும் தெரியாதவர் போல, உட்கார்ந்து இருப்பார்.
குற்றால டூரில், வாசகர்கள், 'அந்துமணியை கண்டுபிடித்தால், நூறு ரூபாய் பரிசு' என்று அறிவிப்பர். அந்துமணிதான், முதல், நூறு ரூபாய் கொடுப்பார். 'அவர்கூட படம் எடுக்க வேண்டும். ஏதாவது செய்யுங்கள்...' என்று கேட்போர் கூட்டத்தில், இவர் தான், முதல் ஆளாக இருப்பார்.
நட்புக்கு, ஒரு அந்துமணி, என்று சொல்லு மளவிற்கு, உள்ளூர், வெளியூர், வெளிநாடு என்று, மிகப் பெரிய நண்பர் கூட்டம் இவருக்குண்டு. இவர், குற்றாலம் வருவது தெரிந்ததும், இவரது நண்பர்கள், பெரிய அளவில் இவரைச் சூழ்ந்து காணப்படுவர். அந்த, பெரிய கூட்டத்தில், 'யார் அந்துமணி' என்பதை, வாசகர்கள் கண்டுபிடித்து, நெருங்குவதற்குள், டூர் நிறைவடைந்து விடும்.
நண்பர்கள் குழப்புவதுடன், நிகழ்ச்சி நடத்த வருவோரும், அந்துமணியின் வாசகர்களுடன் இணைந்து கொண்டு, ஆங்காங்கே, முகமூடியை அணிந்து கொண்டு, 'நானும்தான் அந்துமணி' என்று, நாடகம் போட்டு, இன்னும் குழப்புவர்.
இப்படிப்பட்ட காலகட்டங்களை எல்லாம் கடந்து, இந்த, 2013-ம் வருடம் நடைபெற்ற, சிறப்பு டூரில், அந்துமணி, அந்துமணியாகவே அறிமுகமாகி, வாசகர்களை திக்குமுக்காடச் செய்து விட்டார். அதையெல்லாம், பிறகு பார்ப்போம். ஆனால், இந்த, 2013-ம் ஆண்டைப் போலவே, 1992-ம் ஆண்டு, வாசகர்களுக்கு, ஒரு வாய்ப்பு அமைந்தது.
அது, 'என்ன' அப்படி, ஒரு அற்புத வாய்ப்பு என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.
குற்றாலமும் - சித்திரசபையும்!
குற்றாலம், மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி, ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு, வலது பக்கத்தில், எந்தவித விளம்பர பலகையும் இல்லாமல், காணப்படுவதுதான், சித்திரசபை.
இந்த இடம், வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப் படுவதால், வாகனங்கள் வந்து நின்றவுடன், 'அவசரத்திற்கு' ஒதுங்கி, இந்த சித்திரசபை, கோவில் மதில் சுவரை, மனசாட்சி இல்லாமல், ஈரம் செய்பவர்கள், கொஞ்சம் ஈர மனதுடன், உள்ளே போய்,'என்னதான் இருக்கிறது' என்று, எட்டிப்பார்த்துவிட்டு வரலாம்.
இந்தியாவில் அமைந்துள்ள சிவாலயங்கள், ஐந்து திருச்சபைகளின் பெயரால், அழைக்கப்படுகின்றன. சிதம்பரம் நடராஜர் ஆலயம், 'கனகசபை' என்றும், திருவாலங்காடு சிவாலயம், 'ரத்தினசபை' என்றும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம், 'வெள்ளிசபை' என்றும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், 'தாமிரசபை' என்றும், குற்றாலம் குற்றாலநாதர் கோவில், 'சித்திரசபை' என்றும், அழைக்கப்படுகிறது.
பொதுவாக, கோவில்களில், விக்கிரக வழிபாடுதான், பிரதானமாக இருக்கும். ஆனால், சித்திர வடிவில், இறைவனை வழிபடுவது உலகிலேயே, இங்கு மட்டும்தான். இங்கு, இறைவன், ஓவியமாக காட்சியளிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய, திரிபுரதாண்டவம், இந்த சபையில், நடைபெற்றதாக, திருப்பத்தூர் புராணம் கூறுகி.
சித்திரசபையில், நடராஜபெருமான், தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார். மார்கழி மாதம், திருவாதிரை விழா, இங்கு, விமரிசையாக நடைபெறும். சபையில், இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக்கண்டு, பிரம்மதேவன், ஆதி சிவனின் சொரூபங்களை, சுவரில் எழுதி வைத்தார். இதனால், இதை, 'சித்திரசபை' என்று அழைத்ததாக, புராணங்கள் கூறுகின்றன.
சித்திர சபை, குற்றால நாதர் கோவிலுக்குப் அருகில், தனிக்கோவிலாக உள்ளது. சபையின் உட்சுவற்றில், துர்க்கையின், பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறு கள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், சனி பகவான், பைரவரின் பல்வேறு உருவங்கள் வண்ணத்தில், எழுதப்பட்டுள்ளன. பல நூறு வருடங்களுக்கு முன், அழியாத மூலிகை வண்ணத்தில், வரையப்பட்ட, இந்த சித்திரசபையின் கும்பாபிஷேகம், சமீபத்தில், நடந்திருப்பதால், இப்போது, இன்னும் பொலிவு பெற்று விளங்குகிறது. இனிமேலாவது, அந்தப் பக்கம் போனால், எட்டிப் பாருங்கள்.
***
— அருவி கொட்டும்.
எல்.முருகராஜ்

