PUBLISHED ON : ஜன 18, 2015

கடந்த, 2010-ம் ஆண்டு டூரில் கலந்து கொண்ட பழனி வாசகி அங்குலதாவை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது என்று எழுதியிருந்தேன். காரணம், இத்தனை வருட டூரில் கலந்து கொண்ட முதல் மாற்றுத்திறனாளி இவர்தான். ஆனால், இவரை பழனியில் சந்தித்த போதுதான் தெரிந்தது, இவர் பலரது மனதையும் மாற்றும் திறனாளி என்று!
பள்ளி ஆசிரியையான இவர், பள்ளிக்கு போனோமா சம்பளத்தை வாங்கினோமா என்று இல்லாமல், மாணவர்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு ஆக்கப் பணிகளை செய்பவர். 'தினமலர்' நாளிதழ் நடத்திவரும், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியின் போது, மேடையில் தங்கு தடையின்றி தமிழை அருவியாக பொழிபவர்.
இவர் குற்றால டூருக்கு தேர்வான நேரத்தில், மும்பை செல்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தன் மும்பை பயணத்தை ரத்து செய்து, குற்றால டூரில் கலந்து கொண்டார். இவர் வருகிறார் என்றதும், பஸ்சில் எளிதாக ஏறுவதற்கு உயரம் குறைந்த கூடுதல் படிக்கட்டை அமைக்க சொன்ன அந்துமணி, அவர் வழக்கமாக தங்கும் சாய்தள படிக்கட்டு வசதி கொண்ட, 'பிரெஞ்ச் ஹவுஸ்' காட்டேஜையும் ஒதுக்கி கொடுத்தார்.
ஆனால், இவற்றை மறுத்த வாசகி அங்குலதா, 'தயவுசெய்து என்னை சிறப்பாக கவனிப்பதாக கூறி, அன்னியப்படுத்தி விடாதீர்கள்; நான் எல்லாரையும் போல பேசி, சிரித்து குழந்தையைப் போல இருக்க ஆசைப்பட்டே வந்திருக்கிறேன். அதனால், எல்லாரையும் போலவே என்னையும் நடத்துங்கள்...' என்று சொல்லி, டூரில் கலந்து கொண்டார்.
அவருடன், அவரது தம்பி மனைவி கோகுலபிரியதர்ஷினி, அவரது குழந்தை சுஜல் பரத் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில், கோகுலபிரியதர்ஷினியின் பூர்வீகம் கன்னடம். புகுந்த வீடுதான் பழனி. இதன் காரணமாக, 'மழை வந்துட்டார், மாமா வந்துருச்சு...' என்று சகட்டு மேனிக்கு உயர்தினையையும், அஃறினையையும் கலந்தடித்து பேசுவார்.
இதை எல்லாரும் கேலி செய்ய, 'தப்பாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழில் பேசும் இவரை பாராட்டுவோம். நாம் இது போல மலையாளமோ, கன்னடமோ பேச முயற்சியாவது எடுத்திருக்கோமா...' என்று அந்துமணி சொல்லவும், அதன்பின், கோகுலபிரியதர்ஷினியின், 'இமேஜ்' உயர்ந்து விட்டது.
இப்போது வாரமலர் இதழை படித்து, அதுபற்றி விவாதிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்ட பிரியதர்ஷினி, 'அன்று, டூரில் என்னை அந்துமணி உற்சாகப்படுத்தியதுதான் இதற்கு காரணம்...' என்று சொல்கிறார்.
அந்த ஆண்டு டூர் முழுவதும் நல்ல மழை. அருவியில் மட்டுமல்லாமல் குற்றால சாரலிலும், தூரலிலும் நனைந்து கொண்டேதான் வாசகர்கள் இருந்தனர்.
மழைக்கு பயந்து, வாசகர்கள் அறையை விட்டு வெளியே வர தயங்கிய போது, 70 வயதை தாண்டிய வாசகர்கள் ஏகாம்பரமும், ராஜீவும், 'இதெல்லாம் ஒண்ணும் செய்யாது; இந்த மழையில் இப்போது நனையா விட்டால் இனி எப்போதும் வாய்ப்பு கிடைக்காது...' என்று சொல்லி களமிறங்கினர்.
அதன்பின், அனைவருமே மழையில், 'ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே...' என்று பாட்டுப் பாடியபடி நனைந்தனர். அதிலும், படகு குழாமில் எதிரே நிற்பவர் தெரியாத அளவிற்கு மழை பெய்த போதும், 'போட்டிங் போவோம்' என்று அடம்பிடித்து போட்டிங் சென்ற வாசகிகள் பத்மாவதி, மம்தா, மகேஸ்வரி, மங்கையர்கரசி, லாவண்யா, ரேகா, கனகவல்லி ஆகியோரை படகில் இருந்து கரைக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
கவிஞர்களுக்கு இயற்கை, மழை, அருவி, பசுமை, மழலை, மரம், செடி, கொடி என்று எதைப் பார்த்தாலும் கவிதை கொட்டும் என்பர். குற்றாலத்தில் இது அத்தனையும் மொத்தமாக கிடைக்கவே, வாசகர்களாகிய, கவிஞருமான ராஜ்குமார் கவிதை மழை பொழிந்து விட்டார்.
'மின்மினிப் பூச்சிகளாக கிராமத்தை சுற்றி வந்த எங்களை
இப்படி வானில் மின்னும் நட்சத்திரமாக்கி விட்டீர்...'
என்று ஆரம்பித்து, பல கவிதைகள் சொல்லி சொக்க வைத்தவர், 'என் திருமணத்திற்கு வாசகர்களாகிய உங்களைத்தான் எதிர்பார்ப்பேன்...' என்று கண்கலங்க கூறினார்.
உணர்ச்சி வேகத்தில் பேசுபவர்கள் பின், கொஞ்ச நாளானதும் ரயில் சிநேகம் போல, 'நான் நல்லாயிருக்கேன்; நீ நல்லாயிருக்கியா?' என்ற ஒற்றை வார்த்தையோடு உறவு பேணுவது போலத்தான் இவரும் இருப்பார் என்று எண்ணியதற்கு மாறாக, சில ஆண்டுகள் கழித்து முடிவான, தன் திருமண பத்திரிகையை எடுத்துக்கொண்டு, அந்த ஆண்டு டூரில் கலந்து கொண்ட வாசகர்கள் பலரையும் நேரில் போய் அழைத்தார்.
அதே போல விருத்தாசலத்தில் நடந்த, தன் திருமணத்தின் போது மாலையும், கழுத்துமாக வாசலில் நின்றே வாசகர்களை வரவேற்றார். திருமணத்திற்கு வந்திருந்த வாசகர்கள் கையில் அட்சதையை கொடுத்ததுடன், மாங்கல்யம் அணிவிக்கும் போது அவர்களை மணமேடைக்கே வரவழைத்து, ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்.
கடந்த, 2011ம் ஆண்டு டூரில் கலந்து கொண்ட வேலூர் டாக்டர் ரம்யா போட்ட ஒரே கட்டளை, 'எங்கம்மாவை யாரும் பாடச் சொல்லக் கூடாது...' என்பதுதான்!
அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
— அருவி கொட்டும்.
குற்றாலமும், புதுச்சேரி சங்கரும்!
வாரங்கல் இன்ஜினியரிங் கல்லூரியில், கடந்த, 1971ல் சிறந்த மாணவர் என்ற பட்டத்துடன் பட்டயமும் பெற்றவர், கே.ஜி.சங்கர்.
கடந்த, 37 ஆண்டுகளாக ரசாயன தொழிலில் ஈடுபட்டுள்ளார். விஷத்தை, விஷத்தால் தான் முறிக்க முடியும் என்பது போல், ஆலைக் கழிவுகளின் ரசாயன நச்சுத்தன்மையை நீர்த்துபோகச் செய்ய, இவரது தயாரிப்பு ரசாயனம் தான் உபயோகிக்கப்படுகிறது. மத்திய அரசின், 'ராஷ்டிரிய நிர்மா மற்றும் கிரேட் அச்சீவர் ஆப் இண்டியா' போன்ற விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர். புதுவை மாநில பா.ஜ.க.,வின் பொருளாளராக நீண்டகாலம் பணியாற்றுபவர்.
இவருக்கு இன்னுமொரு முகம் உண்டு.
குற்றாலத்தை சுற்றி பல ஏக்கரில் விவசாயமும் செய்து வருகிறார்; இயற்கை கொஞ்சி நிற்கும் பசுமை வயல்வெளிகளில், பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்வதற்காக, அடிக்கடி புதுச்சேரியில் இருந்து குற்றாலம் வருவார். அவ்வாறு குற்றாலம் வரும்போது தங்குவதற்காக குற்றாலத்தில், அலங்கார் ரிசார்ட்சில், பிரெஞ்ச் கட்ட வடிவமைப்பில், அற்புதமாய் ஒரு காட்டேஜ் கட்டியுள்ளார்.
'பிரெஞ்ச் ஹவுஸ்' என்றழைக்கப்படும் இந்த காட்டேஜில், குற்றாலம் வரும்போது மட்டுமே தங்குவார். மற்ற நாட்களில் இந்த காட்டேஜ் பூட்டியே கிடக்கும். அலங்கார் ரிசார்ட்சில் மற்ற அனைத்து காட்டேஜ்களும் நம் வாசகர்கள் தங்குவதற்கு கிடைத்தாலும், நடுவில் நிற்கும் இந்த காட்டேஜ் மட்டும் நமக்கு கிடைக்கவில்லை.
இந்த காட்டேஜ் வேண்டுமே என்று கேட்ட போது, 'இதன் உரிமையாளர் சங்கர் மட்டுமே இதில் தங்குவார்; வேறு யாருக்கும் தர மாட்டார்கள். எதற்கும் கேட்டுப் பாருங்கள்...' என்று சொல்லி போன் நம்பர் கொடுத்தனர். அவரை தொடர்பு கொண்ட போது, 'அது சரிப்பட்டு வராதே...' என்று பிடிகொடுக்காமல் பேசியவர், 'அந்த காட்டேஜில் அந்துமணி தங்கப் போகிறார்...' என்று சொன்னதும் மிகவும் உற்சாகமாகி விட்டார்.
'அந்துமணிக்கு இல்லாத காட்டேஜா...' என்று கேட்டு, எப்போது வருகிறார் என்று விசாரித்து, வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், ஆட்களை அனுப்பி காட்டேஜை புதுப்பித்தும் தந்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. அந்துமணி வரக்கூடிய நாட்களில், அவர் வரவேண்டி இருந்தால், தன் தேதியை தள்ளிவைத்து விடுவார்.
இதில், மிக முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த எட்டு ஆண்டுகளாக இவரும், அந்துமணியும் நேரில் சந்தித்துக் கொண்டதோ, போனில் கூட பேசிக்கொண்டதோ கிடையாது. 'இலக்கியத்தில் பிசிராந்தையார் என்ற புலவர், கோப்பெருஞ்சோழனை பார்க்காமலே ஆழ்ந்த நட்பும், பாசமும் கொண்டிருந்ததாக படித்திருக்கிறேன்; அந்துமணியைப் பொறுத்தவரை, நான் ஒரு பிசிராந்தையாரே...' என்பார் சங்கர்.
எல்.முருகராஜ்
