தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே!

பசுமை நிறைந்த நினைவுகளே!

பசுமை நிறைந்த நினைவுகளே!


PUBLISHED ON : ஆக 31, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடந்து முடிந்த டூரில் கவனத்தை ஈர்த்த வாசகியரின் வரிசையில், கோவையில் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் சுபாஷினியும் ஒருவர்.

டூர் நிறைவுப் பகுதியில், மதுரை ரயில் நிலையத்தில் அனைவரையும் அந்துமணி வழியனுப்பும் போது அவரிடம், 'அவசரத்திற்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்க முடியுமா?' என்று கேட்டார்.

காரில் ஏறிய அந்துமணி, 'ஓ... தாராளமாக! அவசரத்திற்கு நீங்கள் கூப்பிட வேண்டிய எண், 108...' என்று சொல்லி, காரில் பறந்து விட்டார். 'அவசரத்திற்கு' என்ற தன் வார்த்தையை வைத்து, ஆம்புலன்ஸ் எண்ணான 108ஐ கொடுத்து குறும்பு செய்துவிட்டு சென்றாலும், அந்துமணியின் மீது அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.

ஐந்தருவியில் குளித்துவிட்டு வரும் போது அவருடன் வந்த தோழி தீபா, 'அடியே சுபாஷினி... உங்க சொந்தக்காரங்கள்லாம் வந்திருக்காங்களே... ஏண்டி எங்கிட்ட சொல்லவேயில்லை...' என்று சீரியசாக கேட்டிருக்கிறார்.

'குற்றாலத்திற்கு என்னைத்தேடி வர்ற அளவிற்கு யார் அந்த சொந்தக்காரங்க...' என்று கேட்ட சுபாஷினிக்கு, தீபா கைகாட்டிய திசையில் இருந்தது, ஒரு பெரிய குரங்கு கூட்டம்.

கொஞ்சமும் கோபப்படாமல், 'ஆமாம்... மறந்து போச்சு; இவங்கள்லாம் என் பழைய சொந்தம். வாடீ அறிமுகப்படுத்துறேன்...' என்று தீபாவை இழுத்துக்கொண்டு குரங்குகளுக்கு அருகில் செல்ல, 'ஐயோ... தாயே தெரியாம சொல்லிட்டேன்...' என்று தீபா பயந்து பின் வாங்க, இவர்களது கலாட்டாவை பார்த்து, மிரண்டு போன குரங்குகள், தரையில் இருந்து தாவி மரத்தில் ஏறிக் கொண்டன.

மதுரையை விட்டு கிளம்பியதுமே, 'வழியில் ஏதாவது கிடைக்குமா?'என்று உதவியாளர் சீனிவாசனிடம் கேட்டிருக்கிறார் சுபாஷினி. 'ராஜபாளையம் வந்ததும் எல்லாம் கிடைக்கும்...' என்று அவர் பதில் தர, 'எல்லாமே என்றால்...' என்று அடுத்து கேட்டுள்ளார். 'காபி, டீ, லைம் ஜூஸ்...' என்று பதில் தர, 'அதெல்லாம் வேண்டாம்... எனக்கு ஒரு, 'ஸ்மால் கட்டிங்' போடணும்; வழியில் டாஸ்மாக் கடையை பார்த்தா நிறுத்துப்பா...' என்றதும், உதவியாளர் சீனிவாசன், 'ஐயோ அம்மா...' என்று அலறியபடி பஸ்சின் முன் பக்கம் வந்து, 'சார், அந்தம்மா என்னவெல்லமோ கேட்குது சார்...' என்று உளற ஆரம்பித்தார்.

'சும்மா கலாட்டா பண்ற பொண்ணுப்பா; அவங்களுக்கு காபி, டீ குடிக்கிற பழக்கம் கூட கிடையாது...' என்று சொல்லி, அவரது அச்சத்தை போக்க வேண்டியதாயிருந்தது. ஆனாலும், 'நான் பஸ்ல முன் பக்கமே நின்னுகிட்டு வந்துடுறேனே...' என்றபடி பஸ்சின் முன் சீட்டிற்கு வந்து விட்டார் சீனிவாசன்.

குற்றாலநாதர் கோவிலுக்கு போன போது, அங்கே கொடுத்த விபூதியை வாங்கிய அனைவரும் பட்டும் படாமலும் நெற்றியில் பூசிக்கொண்டபோது, இவர் மட்டும் விபூதியை நெற்றியில் பட்டையாக பூசி, 'ஓம் நமசிவாய...' என்று உரக்க சொன்னதும், கோவில் அர்ச்சகர் உட்பட அனைவரும் இவரைத் திரும்பிப் பார்த்து, 'சொன்னது இவர்தானா...' என்று மேலும், கீழும் பார்த்தனர். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்பது போல் அப்போதும், 'ஓம் நமசிவாய...' என்று உரக்கச் சொன்னார். அந்தளவிற்கு எதற்கும் தயக்கமோ, பயமோ கிடையாது.

ஒரு சிலர் பேசினால் பேசுவர்; மற்றபடி யாரிடமும் வலிய போய் பேச மாட்டார்கள். ஆனால், சுபாஷினியோ எல்லாரிடமும் வலியப் பேசி நட்பாகி விடுவார். டூரில் எல்லாருக்கும் அக்காவாக இருந்த போடிநாயக்கனூர் வாசகி விஜயலட்சுமி, சுபாஷினிக்கு மட்டும் செல்லமான அம்மா. எவ்வளவு நாற்காலிகள் இருந்தாலும், ஓடிப்போய் அவரது மடியில் உட்கார்ந்து கொள்வார்.

பலருடன் பல நாள் பழகினாலும் ஏற்படாத அன்பும், பாசமும் சிலரிடம் சில நாள் பழகினாலே ஏற்பட்டுவிடும்; இதில், இரண்டாவது ரகம் சுபாஷினி.

அதே போல், வெள்ளந்தி என்ற வார்த்தைக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான ஒருவரும் டூரில் கலந்து கொண்டார். இத்தனைக்கும் அவர் ஒரு வழக்கறிஞர். அவரைப்பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

— அருவி கொட்டும்.

குற்றாலமும், சங்கரநாராயணர் கோவிலும்...

குற்றாலத்திலிருந்து தென்காசி, புளியங் குடி வழியாக, 46 கி.மீ., பயணித்தால் சங்கரன்கோவிலில் (நெல்லை மாவட்டம்) உள்ள சங்கரநாராயணர் கோவிலை தரிசிக்கலாம். இங்கே இறைவன் சங்கரலிங்க சுவாமியாகவும், இறைவி கோமதியம் மனாகவும் அருள்பாலிக்கின்றனர்.

மதுரையை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் ௧௧ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோவிலின் ராஜகோபுரமும், பிரகாரமும் காண காணத் திகட்டாத கம்பீரமும், அழகும் கொண்டது.

அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்தி, கோமதியம்மனுக்கு சிவன், சங்கர நாராயணராக காட்சி தந்ததே ஆடித் தபசு விழா.

இந்த கோவிலில்  வழங்கப்படும் புற்றுமண் பிரசாதம் மிகவும் பிரசித்தம்.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us