தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே!

பசுமை நிறைந்த நினைவுகளே!

பசுமை நிறைந்த நினைவுகளே!


PUBLISHED ON : செப் 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வழக்கறிஞர் செந்தில்குமாரை கண்களாலேயே கட்டுப்படுத்தியவர் யாராக இருக்கும் என்ற கேள்விக்கு, இந்த வாரம் விடை தருவதாக சொல்லியிருந்தேன். அது வேறு யாராக இருக்க முடியும்... சாட்சாத் அவரது மனைவி புனிதாவே தான்!

கல்லூரி முதல்வர் ஆவதையே தன் லட்சியமாகக் கொண்டு, பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் ௨, இளநிலை, முதுகலை படிப்புகளில் முதல் மாணவியாக வந்து, பிஎச்.டி., உள்ளிட்ட பல்வேறு உயர் படிப்புகளை முடித்தவர். இன்றோ நாளையோ கல்லூரி முதல்வராகிவிடக்கூடிய நிலையில் தற்போது ஒரு கல்லூரியில் துறை தலைவராக பணியாற்றுகிறார்.

எந்த ஒரு கட்டத்திலும் தான் மெத்த படித்தவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடாமல், டூர் முழுவதிலும் எளிமையாக எல்லாருடனும் இனிமையாக கலந்து பழகினார். யார் எது சொன்னாலும், ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொள்வார். 'உங்களுக்கு நன்கு பாட வருமாமே... கொஞ்சம் பாடுங்களேன்...' என்று கேட்டதும், கொஞ்சமும் பிகு செய்யாமல் பாடினார்.

டூரின் இரண்டாவது நாளன்று பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில், ஒரு பக்கம் திவ்யா, புவனா, ஜான்சி, உமா என்று ஒரு பெரிய படையே உட்கார்ந்து பாட, எதிரணியில் அந்துமணியுடன் இருந்தது இவர் மட்டுமே! ஆனால், இவர் ஒருவர் பாட்டுக்கு எதிர்பாட்டு பாட முடியாமல் மொத்த எதிர் அணியும் திணறியது. அந்த அளவிற்கு எதிர் அணியினர் எந்த பாடல் பாடி நிறுத்தினாலும், பாட்டுக்கு பாட்டு விதிப்படி பாடலின் முடிவில் உள்ள எழுத்தைக் கொண்டு, ஏதாவது ஒரு பாடலைப் பாடி அசத்தினார்.

அதற்கு பிறகும் பாடகர் மதுரை சுப்புராமுடன் தனிப்பாடல்கள் சிலவற்றை பாடியவர், கடைசியாக, 'குறையொன்றுமில்லை மறைமூர்த்திகண்ணா...' என்று மங்களம் பாடிவிட்டுதான் சென்றார்.

'இவ்வளவு பாட்டு எப்படி தெரியும் என்று ஆச்சரியப்பட வேண்டாம்; எதையுமே ஒரு முறை கேட்டால் அதை அப்படியே கிரகித்துக் கொள்வேன். அது பாட்டு என்றாலும், பாடமாக இருந்தாலும்... எதையுமே சுவாரசியமாக எடுத்துக் கொண்டால், அது மனதை விட்டு அழியாது...' என்று சொன்னபோதுதான், அவர் கல்வியில் வெற்றியாளராக விளங்குவதன் ரகசியம் தெரிந்தது.

வழக்கமாக பந்து போடுதல், வளையம் வீசுதல் என்று வலிக்காத, உடல் வளையாத விளையாட்டுகளைத்தான் வாசகிகள் தேர்வு செய்வர். ஆனால், இந்த ஆண்டு வந்த வாசகிகள் கபடி, கைராட்டினம் என்று புழுதி பறக்கும் விளையாட்டுகளை விளையாடினர் என்றால், அதில் பெரும் பங்கு புனிதாவிற்கு உண்டு.

கல்லூரி மாணவியரை உற்சாகப்படுத்தும் கலையை படித்தவர் என்பதால், அந்த கலையை நம் வாசகிகளிடமும் அறிமுகப்படுத்த, அது நன்றாகவே, 'கிளிக்'கானது.

அதற்காக மற்றவர்களை தூண்டிவிட்டு ஒதுங்கும் ரகமும் இல்லை; முதல் ஆளாக, 'பலிஞ்சடுகுடு' என்று அடி எடுத்து வைத்து ஆடியவரும் இவரே!

அதேபோல, குற்றால அருவிகளில் தான் நன்றாக குளித்ததுடன், மற்றவர்களையும் உற்சாகப்படுத்தி குளிக்க வைத்தார்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் நாம் சமைத்ததை வயிராற சாப்பிட்டால் நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்... அது போல விருந்தினர்களாக வந்த வாசகர்கள் மனம் குளித்து மகிழ்வதை பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது; அதற்கு காரணமாக இருந்தவர் புனிதா.

டூர் முழுவதும் குறும்பான குழந்தையாகவே மாறிவிட்ட தன் கணவர் செந்தில்குமாரை அன்பாலும், கண்களாலும் கட்டுப்படுத்தி வைப்பதற்கு மட்டும் தான் கொஞ்சம் சிரமப்பட்டார்.

டூருக்கு தேர்வு செய்யப்பட்ட புனிதாவை அழைக்க, நான் நேரில் சென்ற போது, அவரது கணவர் செந்தில்குமாரை சந்திக்க இயலவில்லை; ஒரு வழக்கு காரணமாக வெளியூர் போயிருந்தார். பின் போனில் அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆகவே, செந்தில்குமார் பற்றி முழுமையாக அப்போது தெரியாது.

இதன் காரணமாக டூரில் கலந்து கொள்ள இவர்கள் ஊரில் இருந்து கிளம்பியதும், செந்தில்குமாரிடம் போனில், 'உங்கள் மனைவியை பத்திரமாக கூட்டி வாருங்கள்; மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கியதும் ஆட்டோ கிடைக்கிறதா என்று பாருங்கள்... கிடைக்காவிட்டால், 'ரிஸ்க்' எடுக்கவேண்டாம்; எனக்கு போன் செய்யுங்கள். நான் கார் அனுப்பி உங்களை அழைத்துக் கொள்கிறேன்...' என்றெல்லாம் சொன்னேன்.

செந்தில்குமார் பற்றி அறிந்த பின், டூர் நிறைவாக செந்தில்குமார்-புனிதா தம்பதியை வழியனுப்பும் போது, அந்துமணி சொன்ன வார்த்தையை கேட்டு, மொத்த டூர் வாசகர்களுமே, ரசித்து சிரித்தனர். அப்படி அனைவரும் சிரிக்கும்படியாக என்ன சொன்னார் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

— அருவி கொட்டும்

குற்றாலமும், ரம்டன் பழமும்...

குற்றாலத்தில் சீசன் நேரத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய அபூர்வ பழங்களில் ரம்டன் பழமும் ஒன்று! இப்பழத்தின் உண்மையான பெயர் ரம்புட்டான்; அதுவே ரம்டன் என்று மறுவி விட்டது.

ரம்டன் பழம் சீனா மற்றும் தென் கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இலங்கை போன்ற நாடுகளிலும் விளைகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட இப்பழத்தை உண்டால், உடலுக்கு அதிக கலோரி கிடைக்கும்.

இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான வீட்டு மருத்துவமாக இப்பழம் உபயோகிக்கப்படுகிறது.

மஞ்சள், சிவப்பு என இரு நிறங்களில் காணப்படும் இப்பழத்தின் மேல்பகுதியில் மிருதுவான முட்கள் உள்ளன. தோலை உரித்தால் அதற்குள் வெள்ளையாக, 'ஹால்ஸ்' மிட்டாய் வடிவத்தில் சதைப்பற்று காணப்படும்; அதுதான் சாப்பிடுவதற்கானது. இனிப்பு சுவை கொண்ட இப்பழத்தை சாப்பிடும் போது, அதில் உள்ள கொட்டையை துப்பிவிட வேண்டும்; அதில், ஏதாவது சத்து இருந்தாலும் இருக்கும் என்று மென்று தின்போரும் உண்டு.

முன்பு, தமிழகத்தில் கொடைக்கானல், உதகை, நீலகிரி, குற்றாலம் போன்ற மலைப் பகுதிகளில் இப்பழங்கள் ஆடி மாதத்தில் அமோகமாக விளைந்தன. குற்றாலம் தவிர்த்து மற்ற மலைப்பகுதிகளில் உள்ள மரங்களை மனிதன் மொட்டையடித்து வருவதால், தற்போது, குற்றாலம் மலைப்பகுதிகளில் மட்டும் இந்த பழங்கள் விளைகின்றன. விளைச்சலை பொறுத்து கிலோ, 100லிருந்து, 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us