தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே.....(47)

பசுமை நிறைந்த நினைவுகளே.....(47)

பசுமை நிறைந்த நினைவுகளே.....(47)


PUBLISHED ON : ஜூலை 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 27, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வழக்கமாக வாசகர்களை வழியனுப்பும் போது, பிரிபவர்களின் கண்களில்தான், கண்ணீர் துளிர்க்கும். ஆனால், அந்த வருட(2002) குற்றால டூர் வாசகர்களின் அப்பழுக்கற்ற அன்பால், அந்துமணியின் கண்களில், கண்ணீர் துளிர்த்தது. இனி, 'எந்த ஊரில் எந்த நாளில் சந்திப்போமோ...' என்ற எண்ணம், இரு தரப்பிலும் இருந்ததே, அதற்கு காரணம்.

ஆனால், அதே வருடம் அதே வாசகர்களை சந்திக்கும் இனிய சம்பவம், முதன் முறையாக நடந்தது. சந்திப்பு நடந்த இடம், 'குளு குளு' கொடைக்கானல்.

இந்த டூரானது, வாசகர்களே அவர்களுக்குள் பேசி முடிவு செய்தது. 'நாங்க ரெண்டு நாள் கொடைக்கானல் வருவதன் நோக்கமே அந்துமணி தான். அவரு யாருன்னு தெரியாமலேயே குற்றாலத்தில் பேசி பழகினோம். இப்ப அவர தெரிந்ததால், பேசி பழகணும்.

'அதனால, இந்த கொடைக்கானல் டூரை, வாசகர்களாகிய நாங்கள் ஏற்பாடு செய்திருக்கோம். நீங்க வந்து முழுக்க முழுக்க எங்களுடன் இருக்கணும். இது எங்கள் அன்பு வேண்டுகோள்...' என்று சொல்லி, அவர்கள், ஏற்பாடு செய்த கொடைக்கானல் டூர், மிகவும் வித்தியாசமாக இருந்தது.

அதை விவரிக்கும் முன், 2002-ன் சுவாரசியங்கள் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கே என்று, அந்த ஆண்டு வாசகர்கள் சிலர் எடுத்துக் கொடுத்தனர்.

அதில் ஒன்று அசைவ உணவு.

பொதுவாக அசைவம் சாப்பிடுபவர்கள், சைவ உணவும் சாப்பிடுவர் என்பதால், குற்றால டூரில் பொது உணவாக, சைவ உணவை வைப்பதுடன், அசைவ பிரியர்களின் மனது வாடக்கூடாது என்பதற்காக பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் அசைவம் மாதிரி இருக்கும் சைவ உணவும் சமைத்து வைப்போம்.

'இதெல்லாம், 'மாதிரி' அசைவம் தானே தவிர, அசைவ உணவு இல்லயே... தீபாவளின்னா ஸ்வீட் என்பது போல குற்றாலம்ன்னா, அசைவ உணவுதான் பிரதானம். அதனால், அசைவ உணவுக்கு கருணை காட்டுங்க...' என்று, கோரிக்கை வைத்தனர் வாசகர்கள்.

அதனால், சைவ உணவு சாப்பிடுவோரின் மனது வருத்தப்படாமல், அசைவ உணவு விரும்புபவர்களின் மனதும் சந்தோஷப்படும் வகையில், ஒரு ஐடியா கொடுத்தார் அந்துமணி.

வழக்கமான சைவ உணவுகள் ஒருபுறம் வரிசை கட்டி (பப்பே முறையில்) நிற்கட்டும். எதிர் வரிசையில் மட்டன் வறுவல், சிக்கன் குழம்பு போன்ற அசைவ உணவுகள் கூடுதலாக இருக்கட்டும். விரும்புபவர்கள் விரும்பியதை எடுத்து சாப்பிடட்டும் என்று, முடிவானது.

'சரி எப்போது இருந்து அசைவ உணவை ஆரம்பிப்போம்...' என்றதும், 'இதுக்கெல்லாமா நேரம், காலம் பாப்பாங்க; இப்பவே ஆரம்பிப்போம்...' என்றனர்.

'பஜார் போகணும்; மீனு, சிக்கன், கறி வாங்கணும். அப்புறம் அதற்கு மசால் தடவி ஊறவிடுவது போன்ற மரியாதைகளை செய்யணும்...' என்றதும், 'அதெல்லாம் எதுக்கு? தேவையான பாத்திரத்த மட்டும் எடுத்துட்டு, 'பார்டர்' கடைக்கு போனா, எல்லாமே கிடைக்குமே...' என்ற யோசனையை, வாசகர்கள் இருவர் முன் மொழிய, அதை, நான்கு வாசகர்கள் வழி மொழிந்தனர்.

'சரி தேவையான பாத்திரம் எடுத்துட்டு வாங்க...' என்றதுமே, அறையில் குளிக்க பயன்படுத்தும் சில்வர் வாளிகளுடன் ஆஜராயினர். பிறகென்ன, 'சர் சர்'ரென, கார்கள் பார்டர் கடையை நோக்கி பறந்தன.

பார்டர் கடை ரஹமத் புரோட்டா கடையின் நாட்டு கோழிகளும், காடைகளும், இன்னும் சில ஊர்வன, பறப்பன வகைகளை சேர்ந்த இனங்களும், இவைகளுக்கு, 'தொட்டுக்கொள்ள' புரோட்டா, சால்னா குழம்பு வகையறாக்களையும் வாங்கி, டிக்கி கொள்ளாமல் நிரப்பிய பின், கார்கள் போன வேகத்தைவிட, அதிவேகத்தில் திரும்பியது.

இப்போது சைவம், அசைவம் இரண்டும் ரெடி; விருப்பப்பட்டவர்கள் தேவையானதை சாப்பிடலாம் என்றதும், கடலூர் வாசகரும், சித்த மருத்துவ நிபுணருமான குமரேசன் முந்திச் சென்றார்.

இவரை ஊரில், நேரில் பார்த்து பேசிக்கொண்டு இருந்த போது, 'ஆடு, கோழி, மீன் சாப்பிடுவது பாவம்; தவிர, ஜீரணகோளாறு வரும். ஆகவே, சைவ உணவே சாலச்சிறந்தது...' என்று, எனக்கு வகுப்பு எடுத்தது நினைவிற்கு வந்தது. எங்கே என்று அவரைத் தேடியபோது, 'கோழியை படைத்த இறைவன், அதற்கு நான்கு கால்களை வைத்திருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்...' என்று சொல்லி, கோழித் தொடையை கடித்துக் கொண்டே, டூர் தோழி ஒருவருடன், பேசிக்கொண்டு இருந்தார்.

அவரை நெருங்கி, 'அசைவம் பாவம் என்று ஊரில் சொன்னதாய் ஞாபகம்...' என்றதும், 'அதெல்லாம் ஊரில்...' என்றவர், அடுத்த கேள்வியை எதிர்கொள்ள தயாரில்லை. 'தற்போது முக்கிய வேலையில் இருக்கிறேன்...' என்று சொல்வது போல, கோழிக்கறி வறுவல் இருந்த திசைக்கு முகத்தையும், எனக்கு முதுகையும் காட்டியபடி திரும்பிக் கொண்டார்.

சட்டியில் இருப்பதை கரண்டியில் எடுத்து, தட்டில் போடுவதற்கு கூட ஆள் இல்லாத நிலையில், அந்துமணி அவரே ஒரு தட்டில் தயிர்சாதத்தையும், ஊறுகாயும் எடுத்து வைத்து, தனக்கு பின்னால் தன்னைப்போல் எத்தனை பேர் சைவ உணவு வரிசையில் இருக்கின்றனர் என்று திரும்பிப் பார்த்தார்.

அங்கே —

குற்றாலமும்,வெளிநாட்டு பயணிகளும்...

குற்றால நீர் வீழ்ச்சி, அந்தக் காலத்தில் அரசர்களும், ஜாமீன்தார்களும் மட்டுமே குளிப்பதற்கான இடமாக இருந்தது. பின், நம்மை ஆண்ட வெள்ளையர்கள் அனுபவித்தனர்.

பல்வேறு சட்ட ரீதியான போராட்டங்களுக்கு பின், படிப்படியாக அருவிகள், பொதுமக்களுக்குமானது.

திருநெல்வேலி மாவட்டத்துக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்; சைக்கிளில் போய், குற்றாலத்தில் குளித்துவிட்டு வரக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள்.

ஆடிமாதம் வியாபாரம் டல்லடித்த காலத்தில், குற்றால சீசனை மொத்த குத்தகை எடுத்து, மாதக்கணக்கில் தங்கி அனுபவித்தவர் விருதுநகர் மாவட்டத்துக்காரர்கள்.

போக்குவரத்து கொஞ்சம் எளிமையான பின், மதுரைக்காரர்களும் அவர்களைத் தொடர்ந்து இப்போது மற்ற மாவட்டத்துக்காரர்களும், மற்ற மாநிலத்துக்காரர்களும் கூட குற்றாலத்தில் சீசன் நேரத்தில் குவிந்து வருகின்றனர்.

இப்போது இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், இயற்கையை, அருவி குளியலின் ஆனந்தத்தை அனுபவிப்பதற்காக, சீசன் நேரத்தில் இங்கு வருகின்றனர் வெளிநாட்டவர்.

குற்றாலம் வந்துவிட்டால் சாப்பிடுவது, குளிப்பது, தூங்குவது என்பதைத் தவிர, வேறு எதையும் செய்யாத நம்மவர்களிடம் இருந்து, இவர்கள் வித்தியாசப்படுகின்றனர்

குற்றாலத்தை சுற்றிலும் மரங்கள் நடுவது, தெரிந்த நண்பர்களின் உதவியுடன் விவசாயம் செய்வது, நீர் நிலைகளை ஒழுங்குபடுத்துவது, பசுமையை வளர்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

'இப்படி ஒரு இடம் எந்த நாட்டிலயும் இருப்பதாக தெரியல. அதனால் தான், எங்களுக்கு பின், எங்க பிள்ளைகளும் இங்கே வந்து இதை அனுபவிக்கணும்ன்னு நினைக்கிறோம். அதற்காக இந்த பூமிக்கு எங்களால முடிஞ்ச நன்றியும், மரியாதையும்தான் மரங்கள் நடுவதற்கு காரணம்...' என்கின்றனர் வெளிநாட்டவர்.

— அருவி கொட்டும்.

எல்.முருகராஜ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us