
'தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுங்கள்...' என்பது வழக்கம். இந்த பழமொழி வந்ததற்கு காரணம், பச்சை நிறமுள்ளது, புதன் கிரகம். பச்சை நிறம், செழிப்பை குறிக்கும். ஆனால், புதன் கிரகத்தில் தண்ணீர் கிடையாது. காரணம், இது, சூரியன் அருகிலுள்ளது.
தன்னிடம் தண்ணீர் இல்லாவிட்டாலும், அதை பொருட்படுத்தாமல், பிறர் பார்வைக்கு பச்சையாக தெரிந்து செழிப்பைக் காட்டுபவர், புதன். இவரது இந்த தியாகத்தை பாராட்டி, சீர்காழி அருகிலுள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில், இவருக்கு சன்னிதி அமைக்கப்பட்டது. இதை, பச்சை கிரக கோவில் என்பர்.
வெப்பத்தில் இருப்பவர்கள், குளிரை விரும்புவது இயற்கை. இதனால், புதனுக்கு, பச்சை ஆடை அணிவிப்பர். இவரது பிறப்பு பரிதாபமானது.
அழகே வடிவான சந்திரன், குருவின் வீட்டிற்கு கல்வி கற்க வந்தான். இவன் மீது, குருவின் மனைவி தாரை ஆசைப்பட்டாள். இதன் விளைவாக, புதன் பிறந்தான். கேலி பேச்சுக்கு ஆளானான். அவனது உள்ளம் கொதித்தது.
தன் பிறப்புக்கு காரணமான, சந்திரனையும், மனைவியை கட்டுப்பாட்டில் வைக்காத குருவையும், எதிரிகளாக பார்த்தான். சிவனை எண்ணி, தவமிருந்தான். அவனை, நவக்கிரக வரிசையில் இடம் பெறச் செய்து, கல்விக்கு அதிபதியாக்கினார், சிவன்.
புதன் கோவிலான திருவெண்காட்டில், கொடி மரம், தீர்த்தம், சுவாமி, அம்பாள், விநாயகர் என, எல்லாமே மூன்று மூன்றாக இருக்கும்.
சுவேதாரண்யேஸ்வரர், அகோர வீரபத்திரர், நடராஜர் ஆகிய சுவாமிகள்; பிரம்ம வித்யாம்பிகை, சுவேதா மாகாளி, மகா துர்க்கை என்ற அம்பாள்கள்; வடவால், கொன்றை, வில்வம் ஆகிய தல விருட்சங்கள்; அக்னி, சூரியன், சந்திரன் என, தீர்த்தங்கள்.
குருவுக்குரிய எண் மூன்று. எல்லாமே மூன்று மூன்றாக இருப்பதன் மூலம், தனக்கு பிடிக்காத குருவின் மீது, புதனின் ஆதிக்கம் இருக்கும்.
சூரியனின் பேரனான, இனன் என்பவன், ஒருமுறை, கவுரி தீர்த்தத்துக்கு வந்தான். இது, பார்வதிதேவி குளிக்கும் இடம். சிவனை தவிர, வேறு எந்த ஆண், இங்கு வந்து குளித்தாலும், பெண்ணாக மாறி விடுவர் என்று ஒரு ஏற்பாட்டை செய்திருந்தாள், பார்வதி.
இதையறியாத இனன், இங்கு வந்து குளிக்க, அவன், பெண்ணாக மாறி விட்டான். இளை என்று பெயருடன் சுற்றி வந்தான்(ள்). இவள் மீது பரிதாபப்பட்ட புதன், அவளைத் திருமணம் செய்து கொண்டான்.
இங்கு, புதனுக்கு தனி சன்னிதி உள்ளது. இவருக்கு, புதன் கிழமைகளில் பச்சை ஆடை அணிவித்து பூஜை செய்வர்.
சீர்காழியில் இருந்து, 10 கி.மீ., துாரத்தில் திருவெண்காடு உள்ளது.
தி. செல்லப்பா

