PUBLISHED ON : ஜூன் 11, 2017

சிதம்பரத்திலிருந்து, மகன் கணேசன் போன் செய்து, விஷயத்தை கூறியபோது, பதற்றத்துடன், ''என்னப்பா சொல்ற... நம்ப சதீஷா...'' என்றார், ஆறுமுகம்.
''ஆமாம்ப்பா... என்ன செய்றது... முன்கோபக்காரனா இருக்கான். இப்ப, நீங்க வந்தா தான், இந்த விஷயம் நல்லபடியா முடியும். இன்ஸ்பெக்டர் ரொம்ப பிடிவாதமா இருக்காரு,'' என்றான், கணேசன்.
மனைவியுடன் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம், ஓய்வு பெற்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்.
மனைவியிடம் விஷயத்தை சொல்லி, சிதம்பரத்திற்கு புறப்பட்டார், ஆறுமுகம்.
பஸ்சில் பயணிக்கும் போது, 'காலேஜ் போனமா, படிச்சமான்னு இல்லாம, எதுக்கு காலேஜ் எலக் ஷன்ல நிக்கணும்; சண்டை போடணும்; அப்புறம் போலீஸ், கீலீசுன்னு அலையணும்... எல்லாம் சரி... இதுல நான் எந்த விதத்தில உதவ முடியும்ன்னு தெரியலயே...' என்று எண்ணியவாறு குழப்பத்துடனேயே, இரண்டு மணி நேரம் பயணித்தார், ஆறுமுகம்.
வீட்டு வாசலில் காத்திருந்த கணேசன், அப்பாவை பார்த்ததும், கொஞ்சம் நிம்மதியாகி, ''வண்டியில ஏறுங்கப்பா... ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்துருவோம்,'' என்று பரபரத்தான்.
''வர்றேன்... முதல்ல பதட்டப்படாம விஷயத்த தெளிவா சொல்லு...''என்றார்.
''அதான் போன்ல சொன்னேனே... காலேஜ் எலக் ஷன் தகராறுல, நம்ம சதீஷை எதிர்த்து நின்ன, பையனுக்கும், இவனுக்கும் பிரச்னை வந்து, அடிதடி வரைக்கும் போயி, இப்ப, அந்த பையன் ஆஸ்பத்திரியில, 'அட்மிட்' ஆயிருக்கான்; போலீஸ், நம்ப சதீஷை அழைச்சிட்டு போய், ஸ்டேஷன்ல வெச்சுருக்காங்க. எப்.ஐ.ஆர்., போடணும்ங்கிறாரு இன்ஸ்பெக்டர். கேஸ் பைல் பண்ணிட்டா, அது, சதீஷோட எதிர்காலத்த பாதிக்கும். நீங்க வந்து அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட பேசுங்க,'' என்றான், கணேசன்.
''நீ சொல்றத பாத்தா, சதீஷ் மேல தப்பு இருக்குன்னு தோணுதேப்பா... இதுல நான் என்ன பேச முடியும்...''
''அட என்னப்பா நீங்க புரியாம பேசுறீங்க... வயசு வேகத்துல கை கலப்பாயிருச்சு. இவனும் அடி வாங்கியிருக்கான்; ஆனா, அந்த பையனுக்கு, அடி பலமா பட்டுருச்சு. இது, என்ன திட்டம் போட்டா நடந்தது... இன்ஸ்பெக்டர் எப்.ஐ.ஆர்., பைல் பண்ணிட்டா, நாளைக்கு வேலை, பாஸ்போர்ட், இப்படி, பல விஷயங்கள்ல பாதிப்பு வரும்,'' என்றான், மகன் பாசத்தில், கணேசன்.
''நீ பேசி பாத்தியா...''
''பேசினேன்... இன்ஸ்பெக்டர், ரொம்ப கறாரா இருக்காரு. அவரை பத்தி விசாரிச்சதுல, அவரு, பரங்கிபேட்டை ஸ்கூல்ல படிச்சவராம்; நீங்க, அங்க தானே ரொம்ப வருஷம் வேலை பாத்தீங்க. அதான், உங்கள அவருக்கு தெரிஞ்சிருக்கலாம்,'' என்று கூறி, ஆறுமுகத்தை டூ - வீலரில் ஏற்றி, போலீஸ் ஸ்டேஷன் நோக்கி விரைந்தான், கணேசன்.
வழக்கமான பரபரப்புடன் காணப்பட்டது, போலீஸ் ஸ்டேஷன். இதில் எதுவும் சம்பந்தமில்லாதவர் போல், நுழைவாயிலில் பயன்படுத்தாத துப்பாக்கியுடன் நின்றிருந்தார், ஒரு கான்ஸ்டபிள். அங்கிருந்த நீள பெஞ்சில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தான், சதீஷ். தாத்தாவை பார்த்ததும், வெட்கப்பட்டு, தலை குனிந்து, எழுந்து நின்றான்.
இருவரும் இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றனர். ஏதோ எழுதிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், ஆள் அரவம் கேட்டு நிமிர்ந்தவர், கணேசனை பார்த்ததும், ''எதுக்கு மறுபடி வந்திருக்கீங்க... அதான் சொன்னேனே...'' கடுமையான தொனியில் பேசியவர், அருகில் நின்ற ஆறுமுகத்தை பார்த்ததும், ஆச்சரியத்துடன் எழுந்து நின்று, ''நீங்க, ஆறுமுகம் சார் தானே?'' கனிவான குரலில் கேட்டார்.
'ஆம்' என்பது போல் ஆறுமுகம் தலையாட்ட, ''சார்... நான், மோகன். உங்க ஸ்டூடண்ட்; உங்ககிட்ட பத்தாவது படிச்சேன்...'' என்று பரபரத்தார், இன்ஸ்பெக்டர்.
நிம்மதி பிறந்தது கணேசனுக்கு!
இருவரும் நாற்காலியில் அமர, சட்டென்று முகம் மாறிய இன்ஸ்பெக்டர், ''சார்... இவர் உங்களுக்கு தெரிஞ்சவரா?'' என்று கணேசனை காட்டி கேட்டார். ''இவன் என் மகன்; சதீஷ் என் பேரன்,'' என்றார், ஆறுமுகம். அவருக்கு இன்னும் மோகனை சரியாக நினைவுக்கு வரவில்லை.
சிறு தயக்கத்துடன், ''சார்... உங்கள சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி; அதேசமயம், நீங்க இங்க ஏன் வந்திருக்கீங்கன்னு புரியுது; அதுக்கு முன், நான் ஒண்ணு சொல்லிடுறேன்... நான் பரிட்சை எழுதி, நேரடியா, 'போஸ்ட்'டுக்கு வந்தவன்; இதுவரைக்கும், ஆறு ஸ்டேஷனுக்கு மாற்றலாகி இருக்கேன். காரணம், வேலையில நான் காட்டுற நேர்மையும், அதில் எந்த வித சமரசமும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாயிருக்கிறதால! நேர்மை தவறும் பட்சத்துல, வேலைய ராஜினாமா செய்யக் கூட தயங்க மாட்டேன். அந்தளவுக்கு நேர்மை குறித்து எனக்குள் வைராக்கிய உணர்வு ஏற்பட மூல காரணமே நீங்க தான்,'' என்றதும், புருவங்களை உயர்த்தினார், ஆறுமுகம்.
''ஆமாம் சார்... 'நேர்மை ஒண்ணு தான் மனிதனுக்கும், மிருகத்துக்கும் உள்ள வித்தியாசம்'ன்னு நீங்க, எனக்கு போதிச்ச அறிவுரைகள், பசுமரத்தாணி போல, என் மனசில பதிஞ்சு போயிருச்சு,'' என்றார்.
ஆறுமுகத்திற்கு, இப்போது மோகனின் பள்ளி பருவ முகம், ஞாபகத்துக்கு வந்தது. நல்ல துறுதுறுப்புடன், அவரையே சுற்றி வருவான். பொதுவாகவே, 'நேர்மை தான் எல்லாவற்றிருக்குமான அடிப்படை பண்பு...' என்று, மாணவர்களுக்கு போதிப்பார், ஆறுமுகம். தன் வார்த்தைகளே, 'பூமரங்' போல திரும்பி வருவதை உணர்ந்தார். இருப்பினும், பேரனின் எதிர்காலத்தை நினைத்து, பெருமூச்சுடன் மோகனை ஏறிட்டார்.
''ரொம்ப சந்தோஷம் மோகன்... என் மாணவன், இவ்வளவு நேர்மையாய், அரசு பணியில் இருக்கிறத நினைக்கும் போது, பெருமையா இருக்கு; அதேநேரம், எனக்குன்னு ஒரு பாதிப்பு வரும் போது, என்னால அப்படி இருக்க முடியல.
''என் பேரன் செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைக்கட்டும்; ஆனா, அது, சட்டப்பூர்வமா வேணாம். எப்.ஐ.ஆர்., போட்டா, நாளைக்கு, வேலை, வெளிநாட்டு பயணம்ன்னு பல வகையில சிக்கல் வரும். தயவுசெய்து கொஞ்சம் உதவ முடியுமான்னு பாரேன்,'' கெஞ்சும் தொனியில் கேட்டார் ஆறுமுகம்.
இதை எதிர்பார்க்காத மோகன், 'அறிவுரைகள் மற்றவர்களுக்கு மட்டும் தானா...' என்பது போல், ஆறுமுகத்தை உற்றுப் பார்த்தார்.
'நேர்மை, கடவுள் போன்றது; அது, மாறும் மனிதர்களை விட உயர்வானது...' என அவர் மனச்சாட்சி கூற, ''மன்னிக்கணும் சார்... உங்க மீது எனக்கு மரியாதை இருக்கு; ஆனா, அதைவிட, நேர்மையை மதிக்கிறேன். உங்க பேரன் அடிச்ச அடியில, அந்த பையன், ஐ.சி.யு.,ல இருக்கான். எப்படி இதை சரி கட்ட முடியும்? அவனோட பெத்தவங்க இடத்துல இருந்து யோசிச்சா, நீங்க இப்படி கேட்டிருக்க மாட்டீங்க... உங்களுக்கு, இந்த உதவிய செய்ய முடியாததுக்கு, என்னை மன்னிச்சிடுங்க.''
மோகனின் கறாரான வார்த்தைகளால் மனம் உடைந்து போனார், ஆறுமுகம். அதேநேரம், அதில் உள்ள நியாயம் புரிந்தது. சில நிமிடங்கள் மவுனத்தில் கழிய, மோகனே, ''சார் இதுக்கு ஒரு வழி இருக்கு; முயற்சி செய்து பாருங்க...'' என்றார்.
''சொல்லுங்க இன்ஸ்பெக்டர் உடனே செய்றோம்,'' என்றான், கணேசன்.
''உங்க, 'ஆப்போசிட்' பார்ட்டி, புகாரை வாபஸ் வாங்கறது தான் ஒரே வழி. கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சித்து பாருங்க...'' என்று சொல்ல, எழுந்து நின்ற ஆறுமுகம், ''ரொம்ப நன்றி மோகன்... நாங்க பேசிப் பாத்துட்டு வர்றோம்,'' என்று சொல்லி, இருவரும் அந்தப் பையன், 'அட்மிட்' ஆகியுள்ள ஆஸ்பத்திரிக்கு, விரைந்தனர்.
தகவல் சொல்லி காத்திருந்த போது, அந்த பையனின் பெற்றோர் வெளியே வந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராமல், தடாலென்று, அவர்களின் காலில் ஆறுமுகம் விழ, 'வயதானவர் நம் கால்களில் விழுகிறாரே...' என, அவர்கள் பதறினர். கணேசனும் விழப் போக, அவனை தடுத்தனர்.
''நாங்க எதுக்காக வந்திருக்கோம்ன்னா...'' என்ற ஆறுமுகத்தை பேசவிடாது, ''இன்ஸ்பெக்டர் எங்களுக்கு போன்ல விஷயத்த சொல்லிட்டாரு... உங்கள பத்தியும், உங்க குடும்பத்தை பத்தியும் சொல்லி, வயசுப் பசங்களோட விவேகம் இல்லாத வீரத்தால, எல்லாரும் பாதிச்சிருக்காங்கன்னு சொன்னாரு. நாங்களும் யோசிச்சு பாத்தோம். நடந்தது நடந்து போச்சு; பதிலுக்கு உங்க பையன் வாழ்க்கைய கெடுக்கறதால, எங்களுக்கு எந்த நல்லதும் வரப்போறதில்ல; மாறா, பகை தான் வளரும். அதனால, மன்னிக்கறதுன்னு முடிவு செய்துட்டோம். இந்தாங்க நாங்க கையெழுத்து போட்ட பேப்பர்; இன்ஸ்பெக்டர்கிட்ட கொடுங்க,'' என்று சொல்லி, கையெழுத்திட்ட காகிதத்தை கொடுக்க, கணேசனும், ஆறுமுகமும் கைகள் நடுங்க அதை வாங்கி, அவர்களுக்கு நன்றி சொல்லி, போலீஸ் ஸ்டேஷன் திரும்பினர்.
''எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல ரொம்ப சந்தோஷம் சார். உங்களுக்கு, என்னால இந்த விதத்துல உதவ முடிஞ்சதுல சின்ன திருப்தி. அதேநேரம், என்னோட வேண்டுகோள்... அந்த பையனோட ஆஸ்பத்திரி செலவு முழுசையும் நீங்க ஏத்துக்கணும்...'' என்றார், மோகன்.
''அது எங்க கடமை; உன்னை மாதிரி நேர்மையான அதிகாரி, என் மாணவன்னு சொல்லிக்கிறதுல எனக்கு ரெம்ப பெருமை. இந்த விஷயத்துல, நீ, எனக்கு ஆசிரியரா மாறி, 'அறிவுரைங்கிறது மத்தவங்களுக்கு மட்டுமில்லை; சொல்றவங்களுக்கும் தான்'னு தெளிவாக்கி, இந்த உலகில், எல்லாவற்றையும் விட, நேர்மை உயர்ந்ததுன்னு புரியவச்சுட்டே. ரொம்ப நன்றி,'' ஆறுமுகம் பாராட்ட, மோகன் புன்னகைத்தார்.
கீதா சீனிவாசன்
