
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய தாரிணி, லேப் - டாப்பும் கையுமாக அப்பா உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், ''என்னப்பா... 'கேம்' விளையாடுறீங்களா,'' என்று கேட்டாள்.
''ஏம்மா... கல்யாண வயசில பொண்ணை வச்சுக்கிட்டு, கேம்சா விளையாடத் தோணும்... எல்லாம் உன் கல்யாண விஷயம் தான்; மேட்ரி மோனில, உனக்கு வரன் தேடிக்கிட்டிருக்கேன்,'' என்றார்.
தாரிணிக்கு திக்கென்றது. 'கல்யாணமா... விக்ரமைப் பற்றி, சொல்லிடலாமா...' என்று நினைத்தாள். அதற்குள் அம்மா காபி கொண்டு வர, மவுனமானாள்.
தாரிணி வேலைக்கு சேர்ந்த புதிதில் தான் விக்ரமும் வேலைக்கு சேர்ந்தான். கல்லூரியில், அவளுக்கு இரண்டு ஆண்டு சீனியர். ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்ற உணர்வு, இருவரையும் நெருங்கிப் பழக வைத்தது. இருவருமே வேலைக்கு புதிது என்பதால், ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தனர். நிறைய விஷயங்களில், அவர்களுடைய எண்ணங்கள் ஒத்துப் போனதில், அவர்களுடைய நட்பும் பலமாயிற்று. சிறிது காலத்தில், அவர்களுடைய நட்பு, அலுவலகத்தில் வித்தியாசமாக பார்க்கப்பட்ட போதும், இருவருமே கவலைப்படவில்லை.
ஆனால், திடீரென்று விக்ரமுக்கு வந்த, 'டிரான்ஸ்பர்' ஆர்டர் இருவருக்குமே, தங்கள் காதலை உணர வைத்தது. 'எப்படி பிரிந்து இருப்பது' என்று மனசு கிடந்து தவித்தது. விக்ரம் மிகவும் கஷ்டப்பட்டு, அரசியல் செல்வாக்கை உபயோகித்து, டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் செய்தான். திரும்பவும், அதே அலுவலகத்தில் அவனைப் பார்த்த அந்தக் கணம், தாரிணிக்கு, 'இவனைப் பிரிந்து தன்னால் இருக்க முடியாது...' என்பது புரிந்தது.
இப்போது அப்பா மாப்பிள்ளை பார்ப்பது மனதுக்குள் கவலையை ஏற்படுத்தியது. நாளை விக்ரமிடம் இதுகுறித்து பேச வேண்டும் என நினைத்தாள் தாரிணி.
மறுநாள் அலுவலகத்தில், மதிய உணவு நேரத்தில், தாரிணி பேச்சை ஆரம்பித்தாள்...
''விக்ரம்... எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டாங்க...'' என்றாள் பொதுவாக!
''நானே, இதைப் பற்றி உங்கிட்ட பேசணும்ன்னு நினைச்சேன் தாரிணி. ஆனா, உன் மனசு தெரியாம பேசறதுக்கு யோசனையா இருந்துச்சு. நமக்குள் நல்ல புரிதல் இருக்கு; நடுவில நம்முடைய மதம் தான் குறுக்கே வருது. ஆனா, நீ என் லைப் பார்ட்னரா வந்தா, நல்லா இருக்கும்ன்னு தோணுது,'' என்றான்.
இறுக்கம் தளர்ந்தவளாக, ''ம்... அப்படியா... நான் ஓ.கே., சொல்லலன்னா கடல்ல குதிச்சிடுவீங்களா,'' என்று குறும்பாக கேட்டாள்.
''ஆமாம்; சும்மா இல்ல, உன்னையும் சேத்து இழுத்துக்கிட்டு குதிச்சிடுவேன்,'' என்றான்.
இருவரும் ஜாலியாக பேசினாலும், 'அடுத்து என்ன' என்ற கலக்கம் இருவருக்குள்ளும் எழுந்தது. விக்ரம் டல்லாக இருப்பதைப் பார்த்த அவன் சீனியர், ''என்ன விஷயம்...'' என்று கேட்டதும், விஷயத்தைச் சொன்னான் விக்ரம்.
''விக்ரம்... பெரியவங்க இந்த விஷயத்தில பிரச்னை தான் செய்வாங்க. நீங்க இரண்டு பேரும் உறுதியா இருந்தா, நம் அலுவலக நண்பர்கள் எல்லாரும் உங்களுக்கு உதவியா இருக்கோம். முதல்ல, ஏதாவது ஒரு கோவில் அல்லது சர்ச்சில கல்யாணத்த முடிச்சுட்டு, பதிவு செய்துட்டு, இரண்டு பேரோட வீட்டுக்கும் போங்க. முதல்ல எதிர்த்தாலும், அப்புறம் சரியாயிடுவாங்க. காலம் அவங்கள மாத்திடும்,'' என்றார்.
வேறு வழி தெரியாததால், இருவரும் அதற்கு ஒத்துக் கொண்டனர்.
அலுவலகமே அவர்கள் கல்யாணத்தை நடத்தி வைக்க தயாராகி, நாள் குறித்தனர். அந்த நாளுக்காக, படபடப்புடன் காத்திருந்தாள் தாரிணி.
''தாரிணி... உனக்கு ஒரு மோதிரம் வாங்கணும்; வா கடைக்கு போகலாம். உனக்கு பிடித்த மோதிரத்தை நீயே செலக்ட் செய்,'' என்று, அலுவலகம் முடிந்ததும் அவளை நகைக் கடைக்கு அழைத்துச் சென்றான் விக்ரம்.
ஒவ்வொரு மோதிரமாக போட்டுப் பார்த்த தாரிணியின் கவனம், வாசலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய தம்பதியின் மேல் சென்றது. 'அருண்...' என்று, அவள் உதடு முணுமுணுக்க, அதற்குள் அவனும் அவர்களைப் பார்த்து விட்டான்.
வேகமாக அருகில் வந்து, ''விக்ரம்...'' என்று தோளைத் தொட்டான். திரும்பிப் பார்த்த விக்ரம் அருவெறுப்புடன், அவன் கைகளை உதறி, ''தாரிணி... வா... வேற கடைக்குப் போகலாம்,'' என்று கூறி, அவளை இழுக்காத குறையாக வெளியே இழுத்து வந்தான்.
வியப்புடன், அவனைப் பார்த்தாள் தாரிணி. காலேஜில் படிக்கும்போதே, அருணை அவளுக்குத் தெரியும். அருணும், விக்ரமும் உயிர் நண்பர்கள். பள்ளியில் துவங்கியது அவர்களுடைய நட்பு. வசதியில்லாத குடும்பத்து அருணுக்கும் தன்னுடன் சேர்த்து, இன்ஜினியரிங் காலேஜில் அட்மிஷன் வாங்கி, பணமும் கட்டினான் விக்ரம். இதை, எல்லாரிடமும் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பான் அருண். அப்படிப்பட்டவன் மீது, விக்ரமுக்கு இப்போது ஏன் இந்த வெறுப்பு.
''ஏன் விக்ரம், அருணைப் பாத்தும் என்னை இழுத்துட்டு வந்துட்டே... உனக்கும், அவனுக்கும் என்ன சண்டை?'' என்று கேட்டாள். அவனும் இதற்காகவே காத்திருந்தவனாக சொல்ல ஆரம்பித்தான்...
''கல்லூரி படிப்பு முடிந்ததும், வேலை வெட்டி ஏதுமில்லாமல், சுத்திக்கிட்டு இருந்தான் அருண். எங்க அப்பா எனக்காக, சிமென்ட் ஏஜன்சி எடுத்து, ஒரு ஸ்டோர் வச்சுக் கொடுத்தார். அவனை ஒர்க்கிங் பார்ட்னராக போட்டேன். வரவு - செலவு முழுக்க, அவன் பொறுப்பில் விட்டேன். கையெழுத்துப் போட்ட பிளாங்க் செக் புக்கையும் கொடுத்தேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு, பின்னாடி தான் தெரிஞ்சது.
''கொஞ்ச கொஞ்சமா பணத்தை சுருட்ட ஆரம்பிச்சிருக்கான். அந்த சமயத்தில, எங்க அம்மாவுக்கு பை-பாஸ் சர்ஜரி நடந்ததால, என் கவனம் எல்லாம் அதிலேயே இருந்துச்சு. அந்த சமயத்துல திடீர்ன்னு, அதே ஏரியாவில் அவன் பெயரில் ஒரு சிமென்ட் கடை ஆரம்பிச்சுட்டான். என் கடை நஷ்டத்தில் ஓடுனதா கணக்கு காட்டி இழுத்து மூட வச்சிட்டான்.
''உயிரா பழகின நண்பன்... கூடப் பிறந்தவனாட்டம் நினைச்சிருந்தேன். இப்படி முதுகில் குத்திட்டானேன்னு தாங்க முடியல. பணம்ன்னு வரும்போது, நட்பு கூட இருந்த இடம் தெரியாம போயிடும்ன்னு, அவன் எனக்கு கத்துக் கொடுத்திட்டான்.
''ஆக்சுவலா எனக்கு பிசினஸ் செய்றதில விருப்பம் இல்ல; அதுக்கான திறமையும் என்கிட்ட இல்ல. கவர்ன்மென்ட் வேலைக்குத் தான் முயற்சி செய்துட்டுருந்தேன். போட்ட முதல் கிடைச்சவுடனே, கடையை அவன் பேர்ல மாத்திடணும்ன்னு தான் நினைச்சிட்டிருந்தேன். என்கிட்ட அவன் கேட்டிருந்தா, நானே அந்தக் கடையை அவனுக்கு கொடுத்திருப்பேன். ஆனா, அவன் செஞ்ச துரோகம் என்னால தாங்க முடியல. நெஞ்சில் பெரிய காயமா வலிச்சிட்டே இருக்கு...''
தாரிணிக்கு கேட்கவே கஷ்டமாக இருந்தது. அருண் வந்த பெரிய காரும், அவன் மனைவி அணிந்திருந்த வைர நகைகளும் கண் முன் ஆடியது.
''விக்ரம்... நீங்க அருண்கிட்ட இதைப் பத்தி ஒண்ணுமே கேக்கலையா?''
''கேட்டேனே... அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா... ஓடத் தெரிந்த குதிரை தான் பிழைக்குமாம். சின்ன வயசிலிருந்தே அடுத்தவரை அண்டியே வாழ்ந்திட்டானாம். காலத்துக்கும் வேலைக்காரனா வாழப் பிடிக்கலையாம். அவன் இதோட நிறுத்தியிருந்தாக் கூட பரவாயில்லை, அவனும் நன்றி மறக்கலயாம்; இதுவரைக்கும், அவனுக்காக நான் செலவழிச்ச பணத்தை எல்லாம் வட்டியோட கொடுக்குறானாம். இன்னும் எனக்கு எந்த உதவின்னாலும், செய்யத் தயாரா இருக்கானாம். என் கையைப் பிடிச்சு கெஞ்சினான். 'சீ'ன்னு உதறிட்டு வந்தேன். இன்னைக்கு என் கண் முன் வந்து, என் மூடையே கெடுத்திட்டான்...'' என்றான்.
அவர்கள் கல்யாணம் செய்யத் தீர்மானித்த நாளுக்கு, இன்னும் ஒரு வாரம் இருந்தது.
''தாரிணி... நம்ம திருமணத்திற்கு உனக்கு மோதிரம் வாங்கப் போய், அருணப் பாத்ததால அன்னக்கி வாங்காம வந்துட்டோம். இன்னைக்கு வாங்கப் போவோமா...'' என்று கேட்டான் விக்ரம்.
''விக்ரம்... நான் ஒண்ணு சொன்னா நீங்க கோபப்படக்கூடாது. இத நல்லா யோசிச்சு தான் சொல்றேன்... சின்ன வயசில இருந்து கூடப் பிறந்தவனாட்டம் பழகின உங்க நண்பன், உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துட்டான்னு நீங்க எவ்வளவு வேதனைப்படுறீங்க... நம்மைப் பெத்து இந்த, 25 ஆண்டு, எவ்வளவோ கனவுகளோடு நம்மை வளத்து ஆளாக்கினவங்களுக்கு, நாம நம்பிக்கை துரோகம் செய்யலாமா...''என்றாள்.
''நீ என்ன சொல்ல வர்றே... நம்ம கல்யாணம் வேணாங்கிறியா...'' என்றான் ஆத்திரத்துடன்!
''அப்படிச் சொல்ல வரல விக்ரம், நாம காத்திருப்போம்ன்னு சொல்றேன். நீங்க அன்னக்கி சொன்னீங்களே... 'அருண் என்கிட்ட அவன் ஆசைய சொல்லியிருந்தா, அந்த கடையை அவனுக்கே கொடுத்திருப்பேன்'னு. நாமும் தப்பு செய்ய வேணாம்; என் வீட்டுக்கு நீங்க வாங்க, நான் எல்லாருக்கும் உங்களப் பத்தி சொல்றேன். இதுவரைக்கும் என் எந்த விருப்பத்துக்கும் எங்க அப்பா, அம்மா தடை போட்டதில்ல. இதையும் பக்குவமா எடுத்துச் சொல்லலாம். நல்ல பர்சனாலிட்டி, படிப்பு, அறிவு, வேலை, வசதின்னு எல்லா விதத்திலேயும் என்னோட ஒத்துப் போற உங்களப் பாத்ததும், எங்க அம்மா, அப்பாவுக்கு மதம் பெரிசாத் தெரியாம போகலாம். அதேபோல, என்னை உங்க வீட்டுக்கு கூட்டிப் போய் அறிமுகப்படுத்துங்க,'' என்றாள்.
''அப்படி அவங்க ஓ.கே., சொல்லலன்னா, நம்ம காதல அழிச்சிடுவோம்ன்னு சொல்றியா....''
''நோ... நேருக்கு நேரா போராடுவோம்ன்னு சொல்றேன். நாம அவங்க முதுகில் குத்த வேணாம்; மரணம் கூட ஏற்படுத்தாத வலியை, நம்பிக்கை துரோகம் செய்திடும். அன்பான உறவுகளைப் பகைச்சிட்டு, நாம நல்லா வாழ்ந்திட முடியுமா?'' என்று கேட்டவள், ''என்ன விக்ரம் யோசிக்கிறீங்க...''என்றாள்.
''இல்ல... முதன் முதலா இன்னைக்கு, உங்க வீட்டுக்கு வரப் போறேன்; இந்த ஷர்ட் பரவாயில்லையான்னு யோசிக்கிறேன்,'' என்றான்.
சந்தோஷத்துடன், அவன் கைகளை இறுகப் பற்றினாள் தாரிணி. அவர்கள் காதலில் அடுத்த அத்தியாயம், ஆரம்பமாகியது.
என். உஷாதேவி

