PUBLISHED ON : ஆக 18, 2019

அழுக்காறு - பொறாமை... இதன் விளைவுகளை, பல குறள்களில் கூறியிருக்கிறார், வள்ளுவர். இத்தகைய குணம் உடையவர்களுக்கு, பகைவர்கள் வேண்டாம்; அவர்கள் கொண்ட பொறாமையே, கேடு விளைவிக்கும் என்பது, வள்ளுவர் கருத்து.
இக்கருத்தை விளக்கும் கதை:
செல்வங்கள் அனைத்தையும், சகுனியின் வஞ்சனை சூதாட்டத்தில் இழந்து, பாண்டவர்கள், 'துவைத வனம்' எனும் இடத்தில் இருந்த காலகட்டம்... பூஜை, மற்றும் மகான்களிடம் நற்கதைகள் கேட்பது என, அமைதியாக காலம் கடத்தினர், பாண்டவர்கள்.
இருந்தாலும், துரியோதனனால் அதைப் பொறுக்க முடியவில்லை. செல்வம், அரண்மனை, படை, பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் என, அனைத்தும் இருந்தும், அவைகளை எல்லாம் மீறி, பொறாமையும் இருந்தது.
சகுனி வேறு அதைத் துாண்டி, துாபம் போட்டார். விளைவு...
பசு குலங்களை பார்த்துக் கொள்ளும் ஆட்கள் மூலம், 'கணக்கெடுக்க வேண்டும்...' என்றெல்லாம் தகவல் சொல்லச் சொல்லி, பல வகைகளிலும் திட்டம் தீட்டினான்; கர்ணன், சகுனி முதலான பலருடனும், பாண்டவர்கள் இருந்த வனத்திற்கு சென்றான், துரியோதனன்.
போனவன், தன் உற்றார், -சுற்றார் என, அனைவருடனும், பாண்டவர் பார்வையில் படும்படியாக, ஆர்ப்பாட்ட கொண்டாட்டங்கள் போட்டான். அவன் ஆட்ட,- பாட்டங்களை கண்டு, பாண்டவர்கள் வருத்தப்பட வேண்டும் என்பது, துரியோதனனின் எண்ணம்.
அதேசமயம், தேவேந்திரன் ஏவலால், இந்திரசேனன் எனும் கந்தர்வன், பாண்டவர்கள் இருந்த வனத்திற்கு வந்தான். அவனையும், இழிவாக கருதிய துரியோதனப் படைகள், கந்தர்வனுடன் மோத, கடும் போர் மூண்டது.
துரியோதனன் மற்றும் கர்ணன் உட்பட அனைவரையும் கடுமையாக தாக்கி, கட்டியிழுத்துச் செல்லத் துவங்கினான், கந்தர்வன்.
பொறாமையின் காரணமாக, பாண்டவர்களை அவமானப்படுத்துவதற்காக, திட்டங்கள் பல தீட்டிய துரியோதனன், பாண்டவர்களுக்கு தெரியும்படியாகவே அவமானப்பட்டான்.
அப்போது, உதவிக்கு, பாண்டவர்களை அழைத்து புலம்பினான், துரியோதனன்.
அவமானப்படுத்த வந்தவன், அவமானப்பட்டு அலறுவதைக் கேட்ட, தர்மர், அவனை காப்பாற்றுமாறு, தம்பிகளை ஏவினார்.
தம்பிகளோ, 'வஞ்சனை எண்ணம் கொண்ட துரியோதனன், தீயவர்களுடன் சேர்ந்து, வஞ்சகமாக சூதாட்டம் நடத்தி, நம்மை காட்டிற்கு அனுப்பினான். அது மட்டுமா, இந்த காட்டிலும், நாம் மகிழ்ச்சியாக இருப்பது பொறுக்காமல், அவமானப்படுத்த வந்திருக்கிறான்.
'செய்த தவறுக்குத் தண்டனையை அனுபவிக்கிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்!' அவனைப் போய், நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்...' என, மறுத்தனர்.
'சகோதரர்களே... நமக்குள், பகை வந்தால், அவர்கள், 100 பேர்; நாம், ஐந்து பேர். ஆனால், பகை வெளியில் இருந்து வந்தால், நாம், 105 பேர். துரியோதனனை, நீங்கள் காப்பாற்றா விட்டால், நானே போய் காப்பாற்றுகிறேன்...' என்றார், தர்மர்.
பிறகு, காப்பாற்றப்பட்டான், துரியோதனன். பஞ்ச பாண்டவர்களிடம் பொறாமை கொண்ட அவன், அதன் பிறகும் திருந்தவில்லை. விளைவு... அவன் கொண்ட பொறாமையே, அவனுக்கு தீங்கானது.
பொறாமை எங்கு குடியேறுகிறதோ, அந்த இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து குலைத்து விடும்.
எச்சரிக்கையாக இருந்தால், ஏற்றம் பெறலாம் என்பதை விளக்கும் கதையிது.
பி. என். பரசுராமன்
