PUBLISHED ON : ஜன 23, 2022

கோபுரத்தின் நிழல் நேராக தெரிவதைத் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், தலை கீழாக விழும் கோபுர நிழலைக் கொண்ட அதிசய கோவில், கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் பம்பா ஷேத்திரம் என அழைக்கப்பட்டு, தற்போது, ஹம்பி என்ற பெயரில் புகழ் பெற்ற நகரிலுள்ள விருபாட்சர் கோவிலே இது.
விருபம் என்றால் ரிஷபம் அல்லது காளை, முக்கண் என்றும் பொருளுண்டு. சிவனது வாகனம் ரிஷபம் என்பதால், சுவாமிக்கு விருபாட்சர் என்று பெயர் ஏற்பட்டது; முக்கண்ணன் என்றும் சொல்வர். இந்தக் கோவில் ஏழாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. விஜயநகர பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசர் லக்கண்ணா என்பவரால் விரிவுபடுத்தப்பட்டது.
சிவனிடம் பெற்ற சாபத்தின் காரணமாக பூலோகத்தில் பிறந்தாள், பார்வதிதேவி. பம்பாதேவி என்ற பெயரில், ஓரிடத்தில் அமர்ந்து, தன் சாபம் நீங்க தவம் செய்தாள். சிவனும் அவளை மன்னித்து மணந்து கொண்டார். பம்பாதேவி அமர்ந்த ஷேத்திரம் என்பதால், அப்பகுதி பம்பா ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது.
சிவனின் ஆசைப்படி, மக்களின் தாகம் தீர்க்க துங்கபத்ரா நதியின் துணை நதியாக பம்பா என்ற பெயரில் ஓடினாள். இந்தக் கோவிலின் ராஜகோபுரம், 165 அடி உயரம் உள்ளது. தமிழக கோபுரங்களைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மதிய நேரத்தில் இதன் நிழல் தலைகீழாக தெரிவது அதிசயமாக உள்ளது.
கோபுரத்தின் கீழுள்ள மண்டபத்தில் ஒரு பெரிய துளை உள்ளது. இதன் வழியாக விழும் நிழல் தலைகீழாக விழுவது போல் வடிக்கப்பட்டிருப்பது, கட்டடக் கலைக்கு சான்று.
இதுபோன்று இந்தியாவில் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை. இங்கு விருபாட்சரின் துணைவியாக புவனேஸ்வரி (பார்வதி) அருள்பாலிக்கிறாள். மற்றொரு சன்னிதியில் அவளது அவதாரமான பம்பாதேவி காட்சி தருகிறாள்.
டிசம்பர் மாதத்தில் சிவனுக்கும், பம்பாதேவிக்கும் திருக்கல்யாணம் நடத்தப்படும். பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடத்தப்படும். இந்த கோவிலுக்குள் துங்கபத்ரா நதியிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய் ஒன்று வருகிறது. அது மடப்பள்ளியை (கோவில் சமையலறை) சுற்றி, கோவிலுக்கு வெளியே செல்கிறது.
கோவில்களுக்குள் நதிகள் திருப்பி விடப்படும் அதிசயம், ஒரு சில கோவில்களில் மட்டுமே இருக்கும். திருச்சி, திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலஸ்தானத்தில், காவிரியின் ஒரு பகுதி வருவதைக் காணலாம்.
இந்த கோவிலில் சிறிய கால்வாயே வருவது விசேஷம். கோவில் சேதமடைந்துள்ளதால், தொல்பொருள் துறை பராமரிக்கிறது. பெங்களூரில் இருந்து ஹோஸ்பெட் வழியாக, 350 கி.மீ., சென்றால் ஹம்பியை அடையலாம்; ரயில் வசதி உள்ளது.
தி. செல்லப்பா
