
அடுத்தவர் செய்ய முடியாததைச் செய்து, சிந்திக்காததை சிந்தித்து, மனித குலம் வாழப் பாடுபட்டோர் தான் இப்பூவுலகில், உயர்ந்தவர்களாகவும், உத்தமர்களாகவும் மதிக்கப்பட்டு, போற்றப்படுகின்றனர். காலத்தால் மறக்கக்கடிக்கப்படாத அத்தகைய உத்தமரின் வாழ்வில் நடந்த நிகழ்வு இது:
ராமு என்ற சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு தாயாரிடம் மிகுந்த அன்பு உண்டு. தாயாருக்கும், ராமுவிடம் எல்லையில்லாத அன்பு. ஒருநாள் ராமுவின் காலில் ரத்தம் வழிவதைப் பார்த்து, பதறியவள், 'ராமு... எப்படி உன் கால்ல காயம் ஏற்பட்டது? இப்படி ரத்தம் கொட்டுகிறதே...' என்றபடியே வேக வேகமாக, ரத்தத்தைத் துடைக்க ஆரம்பித்தாள்.
'அம்மா... என் காலை, நானே கோடரியால் வெட்டிக் கொண்டேன்...' என்று அமைதியாக பதில் சொன்னான் ராமு.
தாயாருக்கு ஒன்றும் புரியவில்லை. 'ஏன் அப்படிச் செய்தாய்?' எனக் கேட்டாள்.
'கோடரியால் காலைக் வெட்டினால், எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளத் தான் அவ்வாறு செய்தேன்...' என்றான்.
'என்னடா உளறுகிறாய்...' என்றாள் கோபத்துடன் தாய்.
'அம்மா... அன்றொரு நாள் நீங்கள் பலா மரத்தோட பட்டை வேணும்ன்னு கேட்டீர்களே... அதற்காக நான் ஒரு பலா மரத்தை கோடரியால் வெட்டினேன். அப்போது, 'கோடரியால் மரத்தை வெட்டுகிறோமே, அதற்கு வலிக்குமா, வலிக்காதா...' என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தெரிந்து கொள்வதற்காகத் தான், காலை வெட்டிக் கொண்டேன். இப்போது, எனக்கு வலிப்பதை போல தான், அன்று மரத்திற்கும் வலித்திருக்கும் என்று புரிந்து கொண்டேன்...' என்று அமைதியாக கூறினான் ராமு.
தாயின் உள்ளம் நெகிழ்ந்தது. 'அப்பா ராமு... உன்னையும், மரத்தையும் ஒன்றாகப் பாவிக்கிறாயே... இந்த எண்ணம் எல்லாருக்கும் வராது; ஞானிகளுக்கு மட்டும் தான் வரும். நீயும் எதிர்காலத்தில் பெரிய ஞானியாக வருவாய்...' என்று வாழ்த்தினாள். அது அப்படியே பலித்தது.
மரத்தையும், தன்னையும் ஒன்றாகப் பாவித்த அந்த ராமு தான் ராமதேவர். இவருடைய பக்தியையும், பக்குவத்தையும், 'பக்த விஜயம்' விரிவாகவே பேசுகிறது.
நம்மால் அப்படி இருக்க முடிகிறதோ இல்லையோ... அப்படிப்பட்ட உத்தமர்கள் வாழ்ந்த பூமி இது என்று நினைத்தாலே போதும்; நாமும் நலம் பெறுவோம்!
பி.என்.பரசுராமன்
திருமந்திரம்!
ஏழ இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந் தன்பு செய்து அருள் கூர வல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் மருளதுவாமே!
கருத்து: அன்பு வழியில் நடப்போரையும், அன்பை விட்டு இகழ்ந்து நடப்போரையும் ஈசன் அறிவான். அன்பு வழியில் நடந்து அருள் நிலையில் நிற்பவருக்கே அருள் புரிவான் ஈசன். காரணம், அன்பை உவந்து, அதன் மேல் அவன் கொண்ட பித்தேயாகும்.