PUBLISHED ON : செப் 27, 2015

செப்., 28 மகாளய பட்சம் ஆரம்பம்
ஜென்மங்களிலேயே உயர்ந்தது மனித ஜென்மம்; மனித பிறவியில் மட்டுமே நாம் பிறவிப் பிணியில் இருந்து மீள முடியும். ஆனால், பிறந்தால் இறந்தாக வேண்டும், நோயில் சிக்கியாக வேண்டும், கஷ்டங்களை அனுபவித்தே தீர வேண்டும். இதில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லை.
ஒரு சிலர், பணக்காரர்களைப் பார்த்து, அவருக்குள்ள வசதி நமக்கு இல்லையே என, ஏங்குவர். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பணக்காரர்கள் காபியில் சர்க்கரை சேர்த்து குடிக்காதவர்களாக இருப்பர். ஏங்குகிற நீங்களோ, காபி போதாதென்று கேசரியையும் சேர்த்து விழுங்கிக் கொண்டிருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள்... யார் கொடுத்து வைத்தவர்!
மானிடப் பிறவி உயர்ந்தது தான்; அதை தாழ்த்துவது அவரவர் எண்ணங்களும், செயல்களுமே! கோடி ரூபாய் சம்பாதித்தாலும், சாப்பிடப் போவது இரண்டு இட்லி தான் என்ற சிந்தனை மட்டும் இருந்து விடுமானால், நம் பிறவி, அர்த்தமுள்ளதாகி விடும்.
பல பிறவிகளின் புண்ணியத்தால் நமக்கு கிடைத்துள்ளதே மானிடப் பிறவி. இந்தப் பிறவியை நமக்கு வழங்கியவர்கள் நம் பெற்றோர். அந்த பெற்றோரை வழங்கியது அவர்களது பெற்றோர். இப்படியே நம் முந்தைய தலைமுறை விரிவடைந்து கொண்டே செல்கிறது. அந்த தலைமுறையை வணங்கவும், அவர்களது வாழ்த்தைப் பெறவும், ஆண்டில், 15 நாட்கள் மகாளய பட்சம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
'மகாளயம்' என்றால், கூட்டமாக வருதல்; புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று நம் முன்னோர், கூட்டமாக நம்மை காண வருவதாக ஐதீகம். அன்று நாம், அவர்களை வரவேற்று தர்ப்பணம் செய்து, அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படைத்து வணங்க வேண்டும். அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்கள், தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இது ஒன்றும் பெரிய விஷயமல்ல; அவர்கள் பெயரைச் சொல்லி சிறிது எள்ளும், தண்ணீரும் நீர் நிலைகளிலோ, கால் படாத இடங்களிலோ விட்டாலே போதும். புரோகிதர் மூலமாகச் செய்தால் மிகவும் நல்லது. வசதிப்படுவோர் கங்கை, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களுக்கு ஒரு நாளாவது சென்று தர்ப்பணம் செய்து வரலாம். பெற்றோர் இறந்த திதியன்று புண்ணியத் தீர்த்தங்களுக்கு செல்வது மிகவும் நல்லது. இந்நாட்களில் பசுவுக்கு கீரை, பழம் கொடுக்க வேண்டும். சக்திக்கேற்ப தான தர்மம் செய்யலாம்.
நமக்காக, பெற்றோரும், தாத்தா, பாட்டிகளும் எத்தனையோ தியாகங்களை செய்துள்ளனர். அவர்கள் ஆத்மசாந்தி பெறவும், நம் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கவும், இந்த வழிபாட்டை செய்து வரலாம்.
இந்த ஆண்டு செப்.,28 துவங்கி, அக்.,12 வரை, மகாளய காலம். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டு விடாதீர்கள்!
தி.செல்லப்பா

