PUBLISHED ON : மார் 06, 2011

மார்ச் 10- திருவாலங்காடு கோவில் விழா ஆரம்பம்!
நடராஜர் நாட்டியமாடிய பஞ்ச சபைகளில், முதல் தலம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில். திருவள்ளூரில் இருந்து, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது; இது, ரத்தின சபை எனப்படுகிறது. இங்கு, பங்குனி உத்திர உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேவர்களை, அசுரர்கள் கொடுமை செய்த போது, தவத்தில் இருந்த சிவனை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மன்மதனை, அவர் மீது மலர் அம்பு வீசச் செய்தனர். கோபத்துடன் அவர் நெற்றிக் கண்ணைத் திறக்க, மன்மதன் பஸ்பமானான். சிவனின் உக்கிரம் தாங்காத தேவர்களும், மகரிஷிகளும் கோபம் தணியும்படி வேண்டினர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், ஒரு ஆலமரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளினார். இதனால், இந்த ஊருக்கு, 'திருவாலங்காடு' என்றும், சுவாமிக்கு, 'வடாரண்யேஸ்வரர்' (ஆலங்காட்டு அப்பர்) என்றும் பெயர் ஏற்பட்டது.
நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, 'சிதம்பர ரகசியம்' என்பது போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவனைத் தரிசிக்க, கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார் காரைக்கால் அம்மையார். சிவன் அவரை, 'அம்மா!' என்றழைத்து, 'என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்க, அவர், 'எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்...' என்றார்; கேட்ட வரத்தை அருளினார் சிவன்.
அத்துடன், அவ்வூர் மன்னன் கனவில் தோன்றி, காரைக்கால் அம்மையார், தன் கோவிலில் தங்கப் போவதாகவும், தனக்கு பின்புறம் அவருக்காக ஒரு சன்னிதி எழுப்பும்படியும் கூறினார். அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பினான். அதனுள், ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார். தற்போதும், இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதையே, 'ஆலங்காட்டு ரகசியம்' என்கின்றனர்.
இங்குள்ள அம்பாளை, 'சமிசீனாம்பிகை' என்பர். 'சமிசீனம்' என்றால், 'ஆச்சரிய பாவனை!' இவளது விக்ரகம், நடராஜரின் நடனத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ள தால், இப்படி ஒரு பெயரை சூட்டினர்.
பஞ்ச சபைகளில் நடராஜர், இங்கு மட்டுமே எட்டு கைகளுடன் காட்சி தருகிறார். பங்குனி உத்திரத்தன்றும், மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்றும் மட்டுமே நகருக்குள் பவனி வருவார் நடராஜர். இது, சிவன் கோவிலாக இருந்தாலும், பெருமாள் கோவில்களைப் போல தீர்த்தம் தருகின்றனர்.
காளியுடன் சிவன் போட்டி நடனம் ஆடியபோது, அதன் உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து, அவர்களை எழுப்பினார் சிவன். இதனடிப்படையில் தீர்த்தம் தரப்படுகிறது. பிரகாரத்தில் எட்டு கணபதிகளை தரிசிக்கலாம். அஷ்ட கணபதி எனப்படும் இவர்கள், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருபவர்களாக உள்ளனர். நாய் வாகனம் இல்லாத பீஷண பைரவர், உபதேச தட்சிணாமூர்த்தி ஆகியோரும் இங்குள்ளனர்.
பிரகாரத்தில் சனீஸ்வரரின் மகனான மாந்தி வழிபட்ட மாந்தீஸ்வரர் இங்கு அருள் புரிகிறார். இவரை வணங்கினால் தீர்க்காயுள் கிடைக்கும். சிறப்புமிக்க இந்தக் கோவிலில் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவைக் காண கிளம்பி விட்டீர்களா!
***
- தி. செல்லப்பா
