
மே 12, சர்வதேச செவிலியர் தினம்
ஒரு காலத்தில், போர் நடந்தாலும், கொள்ளை நோய் வந்தாலும், மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர் என்பது தான் வரலாறு.
நுாறு ஆண்டுகளுக்கு முன், பேருக்காகத் தான் இருந்தன, மருத்துவமனைகள். இப்போது போல் அப்போது, பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லை. பெண்கள், மருத்துவர்களாக ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்த காலத்தில், செவிலியர் படிப்புக்கு சேர வருவரா!
இந்நிலையில் தான், ஐரோப்பிய நாடான இத்தாலியில், பணக்கார குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, செவிலியர் படிப்பு படித்தார்.
இங்கிலாந்தில், கிரிமிலேயர் போர் முடிந்த பின், ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்துக்கு, போரில் கலந்துகொண்ட பலரை அழைத்திருந்தனர். அப்போது, அவர்களிடம், போர் நடந்த சமயத்தில், மிகவும் நினைவுக்கு வரக்கூடிய ஒருவரது பெயரை, ரகசியமாக எழுதி தரும்படி கேட்டிருந்தனர்.
அங்கே கலந்து கொண்ட அனைவருமே, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயரை எழுதி இருந்தனர். கையில் விளக்கை ஏந்தி, அடிபட்ட வீரர்களை கவனித்த விதமே, நைட்டிங்கேலை நன்றியுடன் நினைக்கத் துாண்டியது.
மே 12, 1820ல், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். வரும், 12ம் தேதி, அவருடைய, 200வது பிறந்தநாள். அதை கவுரவிக்கும் விதமாக தான், உலக செவிலியர் தினம், அன்று கொண்டாடப்பட உள்ளது.
இவருடைய சேவையை அங்கீகரித்து, விருது வழங்கியது, பிரிட்டன் அரசு.
* 1860ல், புனித தோமையர் மருத்துவமனையில், முதன் முதலாக, செவிலியராக பயிற்சி வகுப்பை துவக்கினார்
* இன்றைய நர்ஸ்களில், 90 சதவீதம் பெண்கள் தான். இது போதாது. இன்னமும், 5௦ - 9௦ லட்சம், கூடுதல் நர்ஸ்கள் உலகிற்கு தேவை என்கிறது, உலக நர்ஸ் கவுன்சில்
* சர்வதேச கவுன்சில் அமைப்பில், 130 நாடுகளின் தேசிய நர்ஸ் சங்கங்கள் இணைந்துள்ளன. இதில், 20 லட்சம் கோடி உறுப்பினர்களாக உள்ளனர்
* மொத்த சுகாதார பணியாளர்களில், இந்தியாவில், 50 சதவீதத்திற்கு மேல் செவிலியர் மற்றும் 'மிட் ஒய்ப்'கள் தான்
* உலகில், செவிலியராக வேலை பார்க்கும் பெண்களுக்கு, மிக அதிக சம்பளம் கொடுக்கிறது, ஐரோப்பிய நாடான, லக்சம்பர்க். இங்கு, இவர்களுக்கு, மாதம், 60 ஆயிரம் முதல், 1.௨௫ லட்சம் டாலர் (1 டாலர் = 73 ரூபாய்) தரப்படுகிறது. அடுத்து, ஆஸ்திரேலியா, வட அமெரிக்க நாடான கனடா, விர்ஜின் தீவுகள் என, பல நாடுகளில் செவிலியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது
* ஒரு காலத்தில், திருமணமான பெண்களை, நர்ஸ் வேலைக்கு தேர்வு செய்ய மாட்டார்கள். அதுமட்டுமல்ல, ஆரம்ப காலத்தில், நர்ஸ் தொழிலில் ஆண்களே அதிகம் இருந்தனர்
* ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய தரை கடல் நாடுகள், லத்தின் அமெரிக்க நாடுகள் என, பலவற்றில் நர்ஸ்களுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன
* இந்தியாவை பொறுத்தவரை, ஆண்டுக்கு, 60 ஆயிரம் புது நர்ஸ்கள் வருகின்றனர். உண்மையில், இந்தியாவில், 79 ஆயிரத்து, 850 டிப்ளமோ நர்ஸ்களையும், 41 ஆயிரத்து, 650 பட்டதாரி நர்சுகளையும்,1940 பட்ட மேற்படிப்பு நர்ஸ்களையும் உருவாக்கும் வசதி உள்ளது.
கடந்த, 1867ம் ஆண்டு, இந்தியா வந்து, டில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீவன்ஸ் மருத்துவமனையில் நர்சுகளுக்கான முதல் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.
சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவ மனை, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆலோசனையின்படி தான் கட்டப்பட்டது. இந்தியாவில், சுகாதார திட்டம் மற்றும் சாக்கடை நீக்கும் பல திட்டங்களை வடிவமைத்து கொடுத்த பெருமையும் இவரையே சாரும்
இன்று, உலகில், 3 கோடி செவிலியர்கள் உள்ளனர்.
தொகுப்பு: ராஜி ராதா

