
ஏப்ரல் 26, அட்சயதிரிதியை
தங்கமோ, வெள்ளியோ வாங்கும்போது, என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் தெரியுமா?
அதற்கு முன், தங்கம் பற்றிய சில உண்மைகளை அறிந்துகொள்வோம். 24 காரட் என்பது, சுத்தமான தங்கம். ஜுவல்லரி பாஷையில், 999. அதாவது, தங்கத்தை, ௧,௦௦௦ என்கிற விகிதமாக பிரித்தால், அதில், 999 என்கிற விகிதத்தில் தங்கம் இருக்கும். கிட்டத்தட்ட, ௧,௦௦௦ கிராமும் தங்கம் என்று பொருள். 100 கிராம் என்றால், 99.9 என்று வரும்.
அதேபோல், 916 என்பது...
சுத்தமான தங்கத்திற்கு நெகிழும் தன்மை அதிகம் என்பதால், 24 காரட்டில், ஆபரண தங்கம் செய்ய முடியாது. அதில், 8.4 சதவீதம் செம்பும், வெள்ளியும் கலப்பர். ஆக, ௧,௦௦௦த்தில், 8.4 போனால், 91.6. அதுதான், 916. அதேபோல் 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) என்று, காரட்டுக்கு தகுந்தபடி, 'ஹால்மார்க்' முத்திரை இடப்படும்.
தங்கத்தை ஒட்ட வைக்க, செம்பு கலக்கப்பட்டது. அதை விடவும், 'கேட்மியம்' குறைவான அளவில் கலந்தாலே போதும் என்பதால், அதை, செம்புக்கு மாற்றாக பயன்படுத்தினர். தங்கத்தின் தரமும் உயர்ந்தது. இதுதான், 'கேடிஎம்' நகைகள்.
'ஹால்மார்க்' என்பது...
இந்திய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பி.ஐ.எஸ்., அதாவது, 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்டு' எனும் தரக்கட்டுப்பாடு அமைப்பு சோதனை செய்து, முத்திரையிடப்பட்ட நகைகளையே வாங்க வேண்டும். அந்த முத்திரையில், ஐந்து அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
அவை:
* பி.ஐ.எஸ்., தர நிர்ணயத்தின் சின்னம் - லோகோ
* தங்கத்தின் துாய்மையை குறிக்கும், 3 டிஜிட் எண் (916 = 22 காரட்)
* மதிப்பீட்டு மையத்தின் சின்னம்
* 'ஹால்மார்க்' செய்யப்பட்ட ஆண்டு (2000 என்றால் ஏ, 2001 என்றால், பி)
* நகை வணிகம் செய்யும் நிறுவனத்தின் சின்னம்.
நகையை, முதலீடாக வாங்குபவர்களுக்காக, நகை வியாபாரி ஒருவர் கொடுத்த டிப்ஸ்:
அதிக வேலைப்பாடுகள் உடைய நகைகள் வாங்குவது பயன் தராது. செய்கூலி, சேதாரம் என்று புரியாத கணக்கெல்லாம் சொல்வர். வேலைப்பாடு குறைந்த, சாதாரண நகைகள் வாங்குவதே புத்திசாலித்தனம். செய்கூலி, சேதாரம் குறைவு என விளம்பரம் செய்வது, கல் அல்லது அரக்கு வைத்த நகைகளாகத் தான் இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு பின், மறு விற்பனை அல்லது அவசர தேவைக்காக அடகு வைக்கும்போது தான், கல்லின் எடை தெரிந்து அதிர்ச்சி அடைவர். எனவே, கல் நகையை வாங்கும்போதே, எடையை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
இதுதவிர, நகையில், 'ஹால்மார்க்' முத்திரை உட்பட மற்ற ஐந்து அம்சங்களும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளலாம்.
விற்பனை சீட்டு வாங்கும்போது, அதில், நகைக்கான மதிப்பு, செய்கூலி எவ்வளவு என்பதை கேட்டு தெளிவு பெறுங்கள்.
'ஹால்மார்க்' முத்திரை உட்பட, மேலே சொன்ன அனைத்தும், வெள்ளிக்கும் பொருந்தும். வெள்ளி, கறுத்து போகிறதென்றால், நல்ல வெள்ளி என்பர்.
மாதம் ஒருமுறை அல்லது குறைந்தபட்சம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, நகைகளை எல்லாம் எடுத்து வெள்ளை துணியால் துடைத்து பராமரிக்கவும். அப்படி பராமரிப்பதன் மூலம் கண்ணிகள் விட்டிருந்தாலோ, டாலர் நெகிழ்ந்திருந்தாலோ கவனித்து, சரி செய்து கொள்ளலாம்.
- நித்யா