தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மீண்டும் களம் காணுவேன்!

மீண்டும் களம் காணுவேன்!

மீண்டும் களம் காணுவேன்!


PUBLISHED ON : மே 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, தேனாம்பேட்டை அப்பல்லோ கேன்சர் மருத்துவமனையை ஒட்டியுள்ள, சிறிய விடுதி ஒன்றில், கேன்சர் நோயாளியாக தங்கியிருந்து, சிகிச்சை பெற்று வருகிறார், 'நெல் ஜெயராமன்!'

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த, கட்டிமேடு கிராமத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர், ஜெயராமன். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், மறைந்த, இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார் நடத்திய, ஒரு மாத விழிப்புணர்வு பயணத்தில் பங்கேற்று, அவரது அன்பையும், நம்பிக்கையையும் பெற்றார்.

பயணத்தின் நிறைவாக, காட்டுயாணம் வகை நெல் உள்ளிட்ட, ஏழு பாரம்பரிய நெல் ரகங்களை, ஜெயராமனிடம் வழங்கிய நம்மாழ்வார், இதை, 'மறு உற்பத்தி செய்து, விவசாயிகளிடம் பரப்ப வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டார். அன்றிலிருந்து கடந்த, 15 ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தில் ஈடுபட்டார் ஜெயராமன். இதுவரை, 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளவர், திருத்துறைப்பூண்டி அருகே, ஆதிரெங்கம் கிராமத்தில், பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார்.

நரசிம்மன் என்பவர் வழங்கிய, ஐந்து ஏக்கர் நன்கொடை நிலம், இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும், மிக சிறந்த ஆய்வு மையமாக இன்றும் திகழ்கிறது.

மேலும், 2006ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும், ஆதிரெங்கத்தில், பாரம்பரிய நெல் திருவிழாவை, நடத்தி வருகிறார் ஜெயராமன். இதன் காரணமாகவே, இவர், 'நெல் ஜெயராமன்' என்று அழைக்கப்படுகிறார்.

இரண்டு நாள் நடைபெறும் இவ்விழாவில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர். இங்கு வரும் ஒவ்வொருவருக்கும், இரண்டு கிலோ பாரம்பரிய நெல் விதை, இலவசமாக வழங்கப்படுகிறது. இதை, நான்கு கிலோவாக அடுத்த ஆண்டு திருப்பித் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

இத்திருவிழாவில், கடந்த ஆண்டு, 4,500 பேர் கலந்து கொண்டனர்; அதில், பெரும்பாலானோர் இளைஞர்கள். இன்னும், நிறைய இளைஞர்களை வரவழைத்து, அவர்களிடம், பாரம்பரிய நெல் குறித்த விஷயங்களை விதைத்து விட வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வரும் நிலையில் தான், ஜெயராமனை, புற்றுநோய் தாக்கியது.

நண்பர்கள் உதவியால், சென்னை, தேனாம்பேட்டை அப்பல்லோ கேன்சர் மருத்துவமனையில், சேர்க்கப்பட்டார்.

நூறு மில்லி மருந்து கொண்ட மருந்தின் விலை, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்! ஒரு அமர்வுக்கு, 100 மில்லி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்; சில நேரங்களில், 200 மில்லியும் தேவைப்படும். பின், இதற்கு இணையான விலை கொண்ட மருந்து, மாத்திரை, மருத்துவ செலவு மற்றும் தங்கும் செலவு என்று, மூன்று லட்ச ரூபாய் முதல், நான்கு லட்ச ரூபாய் வரை செலவாகும். இந்த செலவு, ஒரு அமர்வுக்கு மட்டுமே! இதேபோல, மொத்தம், எட்டு அமர்வுகள் வர வேண்டும்.

மருத்துவமனை நிர்வாகம், ஜெயராமனை பற்றி கேள்விப்பட்டு, மருத்துவர்கள் கட்டணம் மற்றும் தங்கும் கட்டணம் வாங்குவது இல்லை. பொதுமக்கள் அளித்து வரும் நன்கொடையால், இதுவரை, மூன்று அமர்வுகளை முடித்து விட்டார்; மிச்சமிருக்கும் அமர்வுகளுக்கும், கடவுள் வழி காட்டுவார் என, நம்புகிறார்.

ஜெயராமன் கூறும்போது, ''நாடே, தற்போது வறட்சியில் உள்ளது. காவிரி டெல்டா பகுதியில், சுத்தமாக விவசாயம் போச்சு. இந்நிலையிலும், பாரம்பரிய நெல் விதைத்த திருத்துறைப்பூண்டி பகுதியில், நெல் எல்லாம் பிழைச்சுக்குச்சு. காரணம், பல ஆண்டுகளாக, இங்கு, பாரம்பரிய நெல் மட்டுமே விதைக்கப்படுகிறது.

''நான் குணமாகி, மீண்டும் பழைய நெல் ஜெயராமனா களத்தில் இறங்குவேன். வரும், ஜூன் மாதம், 11ம் தேதி நெல் திருவிழா நடத்துவேன்; இந்த நெல் திருவிழா, விவசாயத்தை விரும்பும், இளைஞர்களின் திருவிழாவாக இருக்கும்.

''பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், கோவை வேளாண் கல்லுாரியில் சேர்ந்து, 'இளநிலை பண்ணை தொழில்' என்ற பட்டயப்படிப்பை படிக்கலாம்; நம்மாழ்வாரால் நடந்த பல நல்ல காரியங்களில், இதுவும் ஒன்று. எங்கள் அனுபவ அறிவும், கல்லுாரியில் வழங்கப்படும் அறிவியல் அறிவும் இணையும் போது, நிச்சயம், இயற்கை வேளாண்மை மேம்படும். எனக்கு, இது மூன்றாமாண்டு; இதுவரை, எந்த அரியர்சும் இல்லை. வருகிற மே மாதம், கடைசி தேர்வு; அதற்கு படித்துக் கொண்டிருக்கிறேன்.

''பாரம்பரிய நெல் விவசாயத்தை, சிக்கிம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக் கொண்டு விட்டன; தமிழகமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இளைஞர்கள், கையில் தான், பாரம்பரிய நெல் விவசாயம் இருக்கிறது...'' என்றார்.

ஜெயராமனின் உதவியாளர், ராஜுவின் மொபைல்

எண்: 99527 87998.

எல்.முத்தப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us