PUBLISHED ON : மே 03, 2020

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பாவ, புண்ணிய கணக்கு உண்டு. அறிந்தும், அறியாமலும் பாவங்களைச் செய்கின்றனர். இதற்குரிய பலனையும், தண்டனையையும் தருவதற்காக, சிவனால் நியமிக்கப்பட்ட பணியாளரே, சித்திரகுப்தர்.
ஒரு தங்கப் பலகையில், இளைஞனின் சித்திரம் ஒன்றை வரைந்தார், சிவன். அதுகண்டு மகிழ்ந்த சிவனின் மனைவி பார்வதி, அதற்கு உயிரூட்ட வேண்டினாள்; சித்திரம் உயிர் பெற்றது. அந்த இளைஞனை, தன் மகனாக்கிக் கொண்டனர், சிவ - பார்வதி. அவருக்கு, உயிர்களின் பாவ, புண்ணியத்தை கணக்கெடுத்து, எமதர்மராஜாவிடம் ஒப்படைக்கும் பணி தரப்பட்டது. சித்திரகுப்தர் பிறந்தநாள், சித்ரா பவுர்ணமி.
அன்று, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம், தென் மாவட்டங்களில் உண்டு. ஒருவர் இறந்து போனால், காரியம் நடத்துவர். அன்று இரவில், எண்ணெய் தேய்த்து குளித்து காரியத்தை நிறைவு செய்வர். 'இதோடு எல்லாம் போகட்டும்' என்பதே எண்ணெய் குளியலின் தத்துவம்.
நரகாசுரன் மறைவு நாளான தீபாவளியன்று, எண்ணெய் தேய்த்து குளிப்பதும், இதனால் தான். பாவம் செய்பவர்கள், இவனோடு தொலையட்டும் என்பதே அதன் தாத்பர்யம்.
சித்ரா பவுர்ணமி - மே 7 அன்று, நம் பாவங்கள் நீங்க, காலையிலேயே எண்ணெய் குளியல் முடித்து, சித்திர புத்திரரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பாவம் செய்யாத அளவுக்கு வாழ்க்கை சூழல் அமைய வேண்டிக் கொள்ள வேண்டும். அன்று காலையில், அவலை பாலில் நனைத்து, சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஒரு காலத்தில், சித்திர வடிவில் வணங்கப்பட்ட சித்திர புத்திரருக்கு, பிற்காலத்தில் சிலைகள் வடிக்கப்பட்டன. சித்திர புத்திரருக்கு தனி கோவில்கள், காஞ்சிபுரம் மற்றும் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில், சித்திர புத்திரருக்கு சன்னிதி உள்ளது. ராமனும், லட்சுமணனும் சீதையை தேடி அலைந்த போது, சிவலிங்கம் வடித்து வணங்கினர். அவர்களிடம், சீதையை மீட்பது சத்தியம் என, வாக்களித்தார், சிவன். சத்தியம் செய்து கொடுத்ததால், 'சத்தியவாகீஸ்வரர்' என, பெயர் பெற்றார். இங்கு, கோமதி அம்பாளும் அருள்புரிகிறாள்.
'கோ' என்றால் பசு. இந்திரனுக்கும், இந்திராணிக்கும் குழந்தை இல்லை. அவர்களுக்கு குழந்தையாக வளர, காமதேனு பசுவின் வயிற்றில், சித்திரபுத்திரன் பிள்ளையாகப் பிறந்தார். சிறிது காலம் இந்திரனிடம் வளர்ந்த பிறகு, பார்வதியிடம் திரும்பினார். இந்த அடிப்படையில் அம்பாளுக்கு, 'கோமதி' என, பெயர் சூட்டப்பட்டது.
சித்ரா பவுர்ணமியன்று, களக்காடு சென்று, சித்திர புத்திரரை வணங்கி, புண்ணிய கணக்கை துவங்கலாம்.
தி. செல்லப்பா