PUBLISHED ON : ஜூன் 28, 2015

'அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்பது ஆன்றோர் வாக்கு.
பெற்றோருக்கு பணிவிடை செய்து, அதன் மூலம் உயர்ந்த நிலையை அடைந்த உத்தமர் ஒருவரைப் பற்றிய புராண கதை இது:
துவாரகையில், சிவசர்மா என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். அவர் வேத, வேதாதங்களில் கரை கண்டவர். அவருடைய பிள்ளை சோமசர்மா. அவன் கல்வி, கேள்விகளில் தலை சிறந்து விளங்கியதோடு, பெற்றோரைத் தெய்வமாகப் பாவித்து, அவர்களுக்கு தொண்டு செய்து வந்தான்.
சிவசர்மாவிற்கு, தன் மகனை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அதனால், சோமசர்மாவை அழைத்து, 'மகனே... தெய்வ அனுக்கிரகத்தால், எனக்கு அமிர்த கலசம் கிடைத்துள்ளது; நானும், உன் தாயும், புண்ணிய தீர்த்தங்களுக்கும், புனித ஸ்தலங்களுக்கும் யாத்திரை செல்லவிருக்கிறோம். அதனால், அமிர்த கலசத்தை சுமப்பதற்கும், எங்களுக்கு பணிவிடை செய்யவும் நீயும் எங்களோடு வர வேண்டும்...' என்றார்.
அதை ஏற்ற சோமசர்மா, அமிர்த கலசத்தோடு பெற்றோரை பின் தொடர்ந்து, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தான்.
இந்நிலையில் ஒருநாள், தன் தவ வலிமையால், தன் உடலிலும், தன் மனைவியின் உடலிலும் குஷ்டரோகத்தை வரவழைத்துக் கொண்டார் சிவசர்மா. இதனால், அவர்கள் மீது கடுமையான துர்வாடை வீசியது.
அதை எல்லாம் பொருட்படுத்தாமல், பெற்றோருக்கு பணிவிடை செய்து வந்தாலும், அவனுடைய ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடித்து, அவனை திட்டினார் சிவசர்மா.
ஆனால், அதையெல்லாம் பெரிதுபடுத்தாத சோமசர்மா, 'மிகவும் உத்தமர்களான நம் பெற்றோருக்கு, இந்நோய் ஏன் வந்தது...' என்று வருந்தினான், திடீரென, கலசத்தில் உள்ள அமிர்தம் ஞாபகத்திற்கு வந்து, வேகமாக ஓடிப்போய் கலசத்தை திறந்து பார்த்தான். அதில் அமிர்தம் இல்லை. இதனால், கவலையடைந்த சோமசர்மா, 'இறைவா... என் பெற்றோருக்கு நான் செய்த தொண்டுகள் உண்மை என்றால், இக்கலசத்தில் அமிர்தம் நிறையட்டும்...' என வேண்டினான். உடனே, கலசத்தில் அமிர்தம் நிறைய, அதை எடுத்துச் சென்று பெற்றோரிடம் கொடுத்தான்.
மனம் மகிழ்ந்த சிவசர்மா, 'மகனே சோமசர்மா... அமிர்த கலசத்தை உன்னிடம் கொடுத்த போது, அதில், அமிர்தம் இல்லை. எங்களுக்குத் தொண்டு செய்வதிலேயே, உன் மனம் ஈடுபட்டிருந்ததால், கலசம் காலியாக இருந்ததை நீ கவனிக்கவில்லை. இப்போது, நீ கொண்டு வந்த அமிர்தம், உன் முயற்சியால் கிடைத்தது; வேண்டும் வரத்தைக் கேள்...' என்றார்.
பெற்றோரை வணங்கிய சோமசர்மா, 'நீங்கள் இருவரும், நோய் நீங்கி, சுகமாக இருக்க வேண்டும்...' என, வேண்டினான்.
அதன்படி, சிவசர்மாவின் தவ வலிமையால், ஆரோக்கியமாக காட்சி அளித்தனர். பின், மகனுக்கு ஆசி வழங்கிய பெற்றோர், விஷ்ணு பதம் அடைந்தனர்.
சோமசர்மாவோ, பெற்றோர் காட்டிய வழியில், முனிவர்களின் ஆசிரமங்களில் தங்கி, விஷ்ணுவைத் தியானித்து வந்தவன், உயிர் பிரியும் காலத்திற்காகக் காத்திருந்தான்.
ஒருநாள், அவன் நிஷ்டையில் இருந்தபோது, அசுரர் கூட்டம் ஒன்று ஆசிரமத்திற்குள் புகுந்தது. அவர்களுடைய கூச்சலில், சோமசர்மாவின் நிஷ்டை கலைய, 'அசுரர்கள் அசுரர்கள்...' என்ற அங்கிருந்தவர்களின் கூச்சல் அவனது காதில் விழுந்தது.
உயிர் பிரியும் வேளையில் அசுரர் என்ற வார்த்தை காதில் விழுந்ததால், மறு பிறவியில் அசுரனாகப் பிறந்தான் சோமசர்மா. விஷ்ணுவை தியானித்து வந்ததால், சிறந்த விஷ்ணு பக்தனாகவும் திகழ்ந்தான். அப்போது, அவன் பெயர் பிரகலாதன்.
திருமந்திரம்!
மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
நவத்திடை யாறொளி தன்னொளி ஆமே!
கருத்து: மனமாகிய உறையில் உள்ள ஞானமாகிய வாளை கொண்டு, ஐம்புலன்களால் விளைகிற ஆசைக் கயிற்றை இரு துண்டாக வெட்ட வேண்டும். ஐம்பொறிகளாகிய பசுக்களை அவற்றின் விருப்பப்படி திரியாமல் மடக்கி வைத்தால், தவத்தால் பெறப்படும் ஆறு ஒளிகளும், அவனுக்குள் ஒளிர்ந்து பலன் தரும்.
பி.என்.பரசுராமன்