PUBLISHED ON : செப் 10, 2017

'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்பர். பக்தியில் நம் மனம் தோயத்தோய எல்லாவிதமான துயரங்களில் இருந்தும் விடுபடுவோம்.
முன்னொரு காலத்தில், கோவன்புதூர் என்று அழைக்கப்பட்ட கோயம்புத்தூருக்கு அருகில், வேலப்ப கவுண்டர் - ஆண்டாளம்மை தம்பதியர் வாழ்ந்து வந்தனர். குழந்தைச் செல்வம் இன்மையால், அருகில் உள்ள ரத்தினக்குன்றில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானிடம் முறையிட்டு, வழிபாடு செய்து வந்தனர்.
அத்தம்பதியருக்கு, புரட்டாசி 26, 1858ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு, 'ராமக்குட்டி' என, பெயரிட்டனர்.
சிறுவயதிலிருந்தே, விநாயகரையும், முருகப் பெருமானையும் வழிபட துவங்கினார், ராமக்குட்டி. அவ்வப்போது, அவரது கனவில் தெய்வக்காட்சிகள் வெளிப்பட்டன. ஒருமுறை கனவில் தோன்றிய கருட பகவான், சூரியன், சந்திரன், நட்சத்திர மண்டலங்களின் தன்மைகளை விளக்கி அருளினார்; மற்றொரு சமயம், கனவில் விநாயகப் பெருமான் தோன்றி, அண்டங்களின் தன்மைகளை விளக்கினார்.
இந்நிலையில், அவரது, 20வது வயதில் திருமணம் நடைபெற்றது; பற்றின்றி வாழ்ந்தாலும், ஒருநாள், 'எல்லாரையும் போல நாமும் இல்வாழ்வில் கட்டுண்டோமே...' என, கலங்கிய மனதோடு உறங்குகையில், கனவில், விநாயகர் பெருமான் தோன்றி, 'திருச்செந்தூருக்கு வா, வருந்தாதே...' என்றார்.
அதன்படி திருச்செந்தூரை நோக்கி தல யாத்திரை சென்றார், ராமக்குட்டி. திருச்செந்தூரை அடைந்த போது, மாலையாகி விட்டது. 'முன்பின் தெரியாத ஊரில், இந்நேரத்தில் எங்கு போவது...' என, அவர் வருந்தினார். பக்தரின் துயர் தீர்க்கும் திருச்செந்தூர் பெருமான், 'சுப்பையா' எனும் பெயருடன், சிறுவனாக தோன்றி, ராமக்குட்டியை அன்போடு அழைத்துச் சென்று, தரிசனம் செய்ய வைத்து, ஒரு வீட்டில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார்.
'முருகனருள் இது...' என, மகிழ்ந்த ராமக்குட்டி, திருச்செந்தூரில் தங்கி, சிறுவன் உதவியுடன், நாள்தோறும் தரிசனம் செய்து வந்தார்.
ஒருநாள், சிறுவனிடம், 'தம்பி... நீ யார், எங்கு இருக்கிறாய்...' எனக் கேட்டார், ராமக்குட்டி.
'என் பெயர் சுப்பையா; இங்கிருப்பவன் தான். எப்போதும் உன்னை விட்டுப் பிரியேன்...' என்று சொல்லி, மறைந்தான், சிறுவன்.
வியப்பிலாழ்ந்த ராமக்குட்டி, 'ஆறுமுக பெருமான் உடன் இருந்து வழிகாட்டியும், உணராமல் போய் விட்டோமே...' என, வருத்தமடைந்தாலும், தெய்வ தரிசனம் பெற்ற மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார்.
நாட்கள் பல சென்றன. பழனிக்கு தரிசனம் செய்யச் சென்றார் ராமக்குட்டி. 'பழனியாண்டவா... அடியேனை ஆட்கொள்ள வேண்டும்...' என, உள்ளம் உருகி வேண்டும் போது, தன் பாத சுவடுகளை காட்டி, 'ஊருக்கு திரும்பி செல்; மற்றொரு முறை வா...' என, அசரீரியாக கூறினார், பழனி முருகன்.
அதன்படி, ஊர் திரும்பிய ராமக்குட்டி, மறுமுறை பழனி சென்ற போது, அங்கே, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை தரிசித்து, உபதேசமும், தெய்வீக ஞான அனுபவங்களையும் பெற்றார்; அதன்பின், அவர் பெயர், 'ராமானந்த அடிகள்' என, வழங்கலாயிற்று.
ராமானந்த அடிகள், பழனியாண்டவர் அருளால் குரு உபதேசமும், ஞானானுபவமும் பெற்ற ஆனந்தத்தில் ஊர் திரும்பி, சிரவணபுரத்தில் ஆலயம் மற்றும் மடம் நிறுவி, மக்களுக்கு நல்லுபதேசம் செய்து, வழிகாட்டி வந்தார்.
சூரிய சந்திரர்களின் தோற்றம் - ஒடுக்கம், பஞ்ச பூத அண்டங்களின் அமைப்பு, ஆறாதாரங்களின் விளக்கம், முக்குணங்களின் நிலை ஆகியவற்றை அனுபவ பூர்வமாக உணர்ந்து, அவற்றை எளிமையாக வெளிப்படுத்தவும் செய்த மகான் இவர்!
முருகப் பெருமானை நேராக தரிசித்து, அவர் அருளால், குரு உபதேசமும் பெற்ற இவர், டிசம்பர், 21, 1956ல், ஆறுமுகன் திருவடிகளை அடைந்தார்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை நிரூபித்து காட்டிய இப்படிப்பட்டவர்களின் வரலாறுகள் உலவும் காலம் வரை, கவலைகளுக்கு இடமில்லை!
பி.என்.பரசுராமன்
தெரிந்ததும் தெரியாததும்!
யாருடைய கால்களில், செல்வம் வந்து குவியும்?
உறுதியுள்ள மனதில், கவலை நுழையாது; குன்றின் மீது, கட்டப்பட்ட கோட்டையைப் போல, கலங்காத மனதை உடையவன் மற்றும் கவலைப்படாமல், நேர்வழியில் செயல்படுபவன் காலின் கீழ், அம்பை போல, செல்வம் பாய்ந்து வந்து விழும்.
