தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முகத்தைப் பார்த்தால் பாப்பா! உடலமைப்போ அப்பப்பா!

முகத்தைப் பார்த்தால் பாப்பா! உடலமைப்போ அப்பப்பா!

முகத்தைப் பார்த்தால் பாப்பா! உடலமைப்போ அப்பப்பா!


PUBLISHED ON : செப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கட்டுமஸ்தான உடல் அமைப்பு உடையவர்களுக்கு, முகம் அவ்வளவாக அழகாக இருக்காது' என, கூறப்படுவதுண்டு. அதிலும், தடகளம், குத்துச் சண்டை, பளு தூக்குதல் போன்ற போட்டிகளிலும், மிஸ்டர் யுனிவர்ஸ், மிஸ்டர் ஒலிம்பியா போன்ற உலக அழகன் மற்றும் அழகி போட்டிகளிலும், பங்கேற்போரின் உடலமைப்பு, இரும்பில் செய்த தூண் போல இருக்கும். ஆனால், அவர்களின் முகங் கள், அவ்வளவு லட்சணமாக இருக்காது.

கடினமான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றால், அவர்களின் முகங்கள், ஒட்டிப் போய், பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும். பெண்களும், இதற்கு விதி விலக்கல்ல. காலம் காலமாக உள்ள, இந்த நடைமுறையை உடைத் தெறிந்திருக்கிறார், ரஷ்யாவைச் சேர்ந்த, அழகான, இரும்பு பார்பி டால்.

இவர் பெயர், ஜூலியா வின்ஸ், 17 வயது. பார்பி பொம்மையை பார்த்திருக்கிறீர் களா... அப்படியானால், ஜூலியாவின் முகத்தை பார்க்க வேண்டிய அவசியமில்லை. அச்சு, அசலாக, அப்படியே பார்பி டால் போன்ற, அழகான முகம் இவருக்கு.

இவரின் முகத்தை பார்ப்பவர்கள், 'இந்த பூனையும் பால் குடிக்குமா' என, நினைப்பர். ஆனால், இதெல்லாம், அவரின் ஒரு அவதாரம் தான். இவரின் மற்றொரு அவதாரம், மிகவும் கரடு முரடானது. ஆம், ஜூலியா, பளு தூக்கும் வீராங்கனை. இன்னும் பெரிய அளவிலான போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், உள்ளூர் போட்டிகளில், வெற்றிகளை குவித்துள்ளார்.

இவரின் உடல் அமைப்பை பார்த்தால், பேட்டை ரவுடிகள், தாதாக்கள், குத்துச் சண்டை வீரர்களுக்கே, பீதி ஏற்படும். இவரின் புஜங்கள், கைகள், தோள், கால்கள் ஆகியவை, மாஜி மிஸ்டர் யுனிவர்சும், பிரபல ஹாலிவுட் நடிகருமான, அர்னால்டுக்கு, சவால் விடும் வகையில் உள்ளன. பளு தூக்கும் போட்டிகளில், ஜூலியா களத்துக்கு வந்தால், அவருடன் போட்டியிடும் சக வீராங்கனைகளுக்கு, கிலி ஏற்படும். அந்த அளவுக்கு, இரும்பில் உருக்கியது போல இருக்கிறது, அவரின் உடல்.

அவரிடம், 'உங்கள் முகத்தை பார்த்தால், பச்சிளம் குழந்தை போல் இருக்கிறது. ஆனால், உடலமைப்பு, அர்னால்டு போலிருக்கிறது. இந்த இளம் வயதில், எப்படி சாத்தியமாயிற்று' என கேட்டால், சின்ன உதடுகளை குவித்து, அழகாக சிரிக்கிறார்.

'எங்கள் ஊரில், ரோமியோக் களின் தொல்லை அதிகம். அவர்களை சமாளிப்பதற்காக, விளையாட்டாக உடற்பயிற்சி செய்தேன். பின், அதில் ஆர்வம் வந்ததால், தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகளை செய்தேன். அதனால், என் உடல், இப்படி இரும்பு போல், உறுதியாகி விட்டது. ஆனால், என் முகத்தை பார்ப்பவர்கள், பொம்மை போல் இருப்பதாக கூறுகின்றனர். அதற்கு என், தாய் தான், காரணம். அவர், மிகவும் அழகாக இருப்பார். அதனால், அவரின் முக அமைப்பு, எனக்கும் அமைந்து விட்டது...' என்கிறார்.

'இப்போது, ரோமியோக்கள் தொல்லை கொடுப்பது இல்லையா' என, கேட்டபோது,'என் புகைப்படங்கள், இணையதளங்களில் வெளியான தால், பிரபலமாகி விட்டேன். என், முறுக்கேறிய உடலை பார்த்த பின்னும், எனக்கு தொல்லை கொடுக்க, அவர்களுக்கு தைரியம் வருமா... பார்ப்பதற்கு பாப்பா போல் இருந்தாலும், ஓங்கி அடித்தால், ஒன்றரை டன் வெயிட்டுடன் அடி விழுவது நிச்சயம்...' என, புஜத்தை தடவி கொடுத்தபடியே பேசுகிறார்.

இதைக் கேட்டதும், நமக்கே, பேஸ்மட்டம், வீக்காகி, கிடு கிடுவென ஆட்டம் கண்டது. இதற்குமேலும், நாம் ஏன், அங்கு நிற்க போகிறோம்... ஜூட்.

***

சி. சண்முகநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us