PUBLISHED ON : பிப் 24, 2019

'நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் பார்த்தால், நாட்டில் நல்லவர்களே இல்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது...' என்று பலரும் நினைக்கலாம்; பேசலாம். ஆனால், அந்த எண்ணமே வேண்டாம்.
நல்லவர்கள், உத்தமர்கள் பலர் இருக்கின்றனர். நமக்கு தெரியவில்லை என்பதால், நல்லவர்கள் இல்லாமல் போகவில்லை. அப்படியென்றால், அந்த நல்லவர்கள், தீமை செய்பவர்களை தண்டனை கொடுத்தோ, சாபம் கொடுத்தோ, ஒரு வழி பண்ணக் கூடாதா?
உத்தமர்களான ஞானிகள், ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்பதை விளக்கும் கதை இது:
அங்கீரர் எனும் முனிவர் இருந்தார்; ஆங்கீரசர் என்றும் சொல்வது உண்டு. அருந்தவம், நற்பண்புகள் என, அனைத்தும் நிறைந்தவர்; இல்லறத்தில் இருந்து மக்களை பெற்ற பின், தவ வழியை பின்பற்றி, சீரிய தவத்தால், சப்த ரிஷிகளில் ஒருவராக ஆனதாக தகவல்களும் உண்டு.
அப்படிப்பட்ட அங்கீரர், காட்டில், கடுந்தவத்தில் இருந்தபோது, பகுரதன் எனும், அரக்கர் மன்னன் ஒருவன் வந்தான். வந்தவன், தவம் செய்யும் முனிவரை பார்த்தான்.
'யார் நீங்கள், பெயர் என்ன, எந்த ஊர், எதற்காக தவம் செய்கிறீர்கள்...' என்றெல்லாம், கேள்விகளை அடுக்கினான்.
எந்த கேள்விக்கும், வாயை திறக்கவில்லை முனிவர்; சிரித்தபடியே இருந்தார்.
ஏற்கனவே அரக்கன்; அரசன் எனும் பதவி வேறு; கேட்க வேண்டுமா... பகுரதனுக்கு கோபம் வந்தது.
'ஹ... மன்னன் நான், கேள்வி கேட்கிறேன். இவன் ஒரு சாதாரண முனிவன்; பதிலேதும் சொல்ல மாட்டேன் என்கிறானே... சிரிப்பு வேறு... நம்மை அவமானப்படுத்துகிறான் போலிருக்கிறது...' என்று முணுமுணுத்த, பகுரதன், கொடிய நடவடிக்கைகளில் இறங்கினான்.
வில்லை வளைத்து, ஏராளமான அம்புகளை முனிவர் மீது செலுத்தினான். அம்புகள் அனைத்தும் அழிந்து போயின. அவைகளால் முனிவருக்கு எந்த தொல்லையும் விளைவிக்க முடியவில்லை.
அரக்கனின் கோபம் அதிகமானது; இடுப்பில் இருந்த உடைவாளை உருவி, முனிவரை வெட்ட வந்தான்.
அப்போது, 'படீர்' என்ற ஓசையுடன் நிலம் வெடித்தது. அரக்கன் பயந்து நடுங்கினான்; வெடிப்பில் விழுந்து மறைந்து போனான்.
நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முனிவரின் உள்ளம், இரக்கத்தால் இறங்கியது; எழுந்தார்; கைகளை கூப்பி, 'நிலமகளே... பகுரதனிடம் இரக்கம் கொள்... தயவுசெய்து, அவனை வெளியில் விடு...' என்று, வேண்டினார்.
முனிவரின் அருள் உள்ளம் கண்டு, பூமாதேவி வியந்தாள்; கொடியவனான பகுரதனை வெளிப்படுத்தி, முனிவரின் திருவடிகளிலே தள்ளினாள்.
முனிவரின் திருவடிகளில் வீழ்ந்த பகுரதன் எழுந்தான். கைகளை கூப்பியபடியே, மறுபடியும் முனிவரின் திருவடிகளில் விழுந்தவன், 'மாமுனிவரே... மன்னியுங்கள் அடியேனை...' என, வேண்டினான்.
அவனுக்கு அன்போடு அருள் உபதேசம் செய்து அனுப்பி வைத்தார், முனிவர்; நல்லறிவு பெற்றுச் சென்றான், பகுரதன்.
பெரியவர்கள் எப்போதும் தங்கள் நிலையில் இருந்து இறங்க மாட்டார்கள். உத்தமர்களான அவர்களிடம் போய் வாலாட்டும்போது, தெய்வமே தண்டிக்கும்; ஒருபோதும் தப்ப முடியாது.
நம்புகிறோமோ இல்லையோ... இது தான் உண்மை!
பி.என். பரசுராமன்
ஆலய அதிசயங்கள்!
திருவண்ணாமலை கோவிலில், உற்சவர், ராஜ கோபுரம் வழியாக, வெளியே வராமல், பக்கத்து வாசல் வழியாக தான் வருவார்.