PUBLISHED ON : ஜூலை 01, 2018

சமஸ்கிருத காவிய நூலாசிரியர்களில் புகழ் பெற்றவர்களில் ஒருவர் கவி பாரவி. இவருடைய தந்தையும் தலைசிறந்த கல்விமான் தான். இருந்தாலும், பாரவி, சாஸ்திரங்களுக்கு விளக்கம் சொல்வதில் அனைவரையும் விட தலைசிறந்தவராக விளங்கினார். ஆனாலும், தன்னை விட சிறந்த மேதாவி கிடையாது என்ற எண்ணம் எப்படியோ அவருக்கு ஏற்பட்டு விட்டது பாரவிக்கு. இதை, அவரது தந்தை அறிந்தார். 'முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக இருக்குமே இது...' என, சிந்தித்த தந்தை, சமயம் வாய்க்கும்போதெல்லாம், 'என்ன தெரியும் உனக்கு?' என்று அடுத்தவர் முன், அவமானப்படுத்துவார்.
பாரவிக்கு கல்யாணம் ஆகி, அவர் மனைவி பிறந்தகத்திற்கு போயிருந்த நேரம். தந்தை படுத்திய அவமானங்களால், கோபம் தலைக்கேறிய பாரவி, 'எப்படியாவது தந்தையை கொன்று விட வேண்டும்...' என்ற முடிவிற்கு வந்தார்.
வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த பாரவி, ஒருநாள் இரவு, 'தந்தை உறங்கிய பின், அவர் கதையை முடித்து விட வேண்டியது தான்...' என்று தீர்மானித்து, வீட்டில் ஒளிந்திருந்தார்.
அப்போது, அவரது தாயும், தந்தையும் பேசிக் கொண்டிருந்தது, பாரவியின் காதுகளில் விழுந்தது.
'பாரவி காலை முதல் எதுவுமே சாப்பிடவில்லை. எதையோ பறிகொடுத்தவன் போல் இருக்கிறான். காரணம், நீங்கள் தான். எப்போது பார்த்தாலும் அடுத்தவர் முன், அவனை மடையன், ஒன்றும் தெரியாதவன் என்றெல்லாம் திட்டி வறுத்தெடுக்கிறீர்கள். பாரவி என்ன மடையனா... பண்டிதன் இல்லையா அவன்?' எனக் கேட்டார் தாய்.
தந்தை என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை கேட்க, பாரவி சுறுசுறுப்பானார்.
தந்தை பதில் சொல்லத் துவங்கினார், 'வெறும் பண்டிதன் அல்ல; பாரவி மிகப்பெரிய பண்டிதன். அவனை விட சிறந்த பண்டிதன், இன்று யாருமே கிடையாது...' என்றார்.
'அப்படியென்றால், அவனை, ஏன் எப்போதும் மட்டம் தட்டியே பேசுகிறீர்கள்?'
'காரணமாகத் தான். பாரவி இன்னும் சிறந்து விளங்க வேண்டும். அதற்காகத் தான் அப்படிச் செய்கிறேன். அவனுக்கு கொஞ்சம் கர்வம் கூடி விட்டது. அது அதிகமானால், அது, அவனது வளர்ச்சிக்கு பெரும் தடையாகி விடும். அந்த குறை நம் பிள்ளைக்கு வந்துவிடக் கூடாதே என்பதற்காகத் தான் அவ்வாறு செய்கிறேன். நம் பிள்ளை பாரவியின் பாண்டித்தியத்தை பற்றி, எனக்கு பெருமை இல்லையா என்ன; என் பாரவியைப் போல், இன்னொரு கல்விமானை பார்க்க முடியுமா?' என்று ஒரு கதாகாலட்சேபமே செய்து விட்டார்.
தந்தையை கொல்வதற்காக மறைந்திருந்த பாரவி, தந்தையின் பேச்சை கேட்டார். சிந்தை கலங்கியது; மனம் உருகியது. 'ஆகா ஆகா... இப்படிப்பட்ட தந்தையையா நாம் கொல்லப் பார்த்தோம்?' என்று கண்களில் கண்ணீர் வழிய, மறைவிடத்தில் இருந்து மெல்ல நழுவினார். இரவு முழுதும் துாக்கமே இல்லை பாரவிக்கு.
மறுநாள் பொழுது விடிந்ததும், ஏதோ சந்தேகம் கேட்பவரை போல, 'அப்பா... ஒருவன், தன் தந்தையை கொல்ல நினைத்தால், அவனுக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டும்?' என தந்தையிடம் கேட்டார்.
'மாமனார் வீட்டில் ஆறு மாதம் தங்குவது தான், அவனுக்கு தண்டனை...' என்றார் தந்தை.
அந்த காலத்தில், மாமனார் வீட்டில், நீண்ட காலம் தங்குவது அவமானமாக கருதப்பட்டது. . தந்தையின் வாக்கை கேட்ட பாரவி, தந்தையின் திருவடிகளில் விழுந்து வணங்கி, தான் அவரை கொல்ல நினைத்ததை சொல்லி, 'மாமனார் வீடு செல்ல அனுமதி கொடுங்கள் எனக்கு...' என வேண்டினார்.
'அதற்கு அவசியமில்லை. நீ செய்ததை பற்றி, நீயே எப்போது வருந்தினாயோ, அப்போதே, அந்த பழி தீர்ந்து விட்டது...' என்றார் தந்தை.
பாரவியோ, பிடித்த பிடியாக நின்று மாமனார் வீடு சென்று விட்டார்.
மாபெரும் அறிஞரின் வாழ்வில் நடந்த இந்நிகழ்வு, நமக்கும் பலப் பல படிப்பினைகளை தருகிறது அல்லவா!
பி.என்.பரசுராமன்
அறிவோம் ஆன்மிகம்!
நெய் விளக்கு ஏற்றுவது ஏன்?
நெய் விளக்கினால் மட்டுமே துாய்மையான வெள்ளை ஒளி ஒரே சீராக கிடைக்கும். இந்த ஒளி வெள்ளத்தில் அந்த இடத்திலுள்ள காற்று துாய்மையாகி, பிராண வாயு சுத்தமாக கிடைக்கும்.
