sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அகவிளக்கு!

/

அகவிளக்கு!

அகவிளக்கு!

அகவிளக்கு!


PUBLISHED ON : டிச 06, 2020

Google News

PUBLISHED ON : டிச 06, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொளகில் கிடந்த கேப்பையை புடைத்து, திண்ணையில் வெயிலாத்திக் கொண்டிருந்தாள், பாக்கியம். 50ஐ கூட நிறைவு செய்திருக்காத வயசு... அதற்குள்ளே நீறு பூத்திருந்தது நெற்றி.

திருமணமாகி மூன்றே ஆண்டில் விதவைக் கோலம் பூண்டிருந்தாள்.

'மா...' என, கொட்டகையில் கேட்ட லட்சுமியின் குரல், பாக்கியத்தை என்னவோ செய்தது. காலையிலிருந்து தண்ணி வைக்கவில்லை என்ற, தன் தேவையை, அது அழகாக எடுத்துச் சொல்லியது. எழுந்து போய், தவுடு கலந்த தண்ணீரை எடுத்து வைத்தாள்.

வாசலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தாள். அன்னம் நின்று கொண்டிருந்தாள். அவள் ஏதோ சேதி சொல்ல வந்திருப்பது போல் தோன்றியது.

''வா அன்னம்...'' என்றபடி அகத்திக் கீரையை அள்ளி ஆட்டிக்குட்டிக்கு நீட்டினாள்.

சொளகில் கிடந்த கேப்பையை அள்ளி வாயில் போட்டபடியே, ''யக்காவ் விஷயம் தெரியுமா... அந்த ராசாத்தி புருஷனை போட்டு தள்ளிட்டாங்கக்கா... உன்னைப் படுத்தியதற்கு, விட்டுப் போயிடுமாங்கறேன்... எல்லாத்துக்கும் ஆண்டவன் கேட்காமயா போயிடப் போறான்,'' என்றாள், அன்னம்.

பாக்கியத்துக்கும் விஷயம் தெரியும் தான். துாணில் சரிந்து மெல்ல கண்களை மூடிக் கொண்டாள். அன்னத்தைப் போல அவள் மனசு குரூர சந்தோஷப்படவில்லை.

புடம் போட்ட பின் தங்கம், அழுக்கு நீங்குவது தான் முதிர்வு. முதிர்ந்து கிடந்ததாலே அவள் மனம், இந்த முறையற்ற சந்தோஷங்களை சுகிர்க்க தயங்கியது.

இவள் சுவாரஸ்யம் காட்டாததால், அன்னம்மாவிற்கு சுள்ளென்று வந்தது.

''அப்ப நான் வர்றேன் பாக்கியம்,'' என்று எழுந்து போய் விட்டாள்.

நடந்து முடிந்த விஷயங்கள் அவள் மனக்கூட்டிற்குள் ஏதேதோ நினைவுகளை கூராய்ந்து கொண்டிருந்தது.

இருபது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அப்போது, ஓச்சனுாரில், வில் வண்டிக்காரர் வீடென்றால் அத்தனை பிரசித்தம். நாகரிக கார்கள் அணிவகுத்த காலங்களிலும், பெருமைக்காக, வில் வண்டியை வீட்டில் நிறுத்தி வைத்திருந்த பெருத்த பரம்பரைக்காரர்கள்.

அவர்கள் காட்டுக்கு பக்கத்தில் இருந்த பூபதியின் காட்டுக்கு, மடை திறப்பில் எப்போதும் தகராறு இருந்து கொண்டே தான் இருக்கும்.

இந்தக்கால சண்டையில், தலைமுறைக்கு ஒரு உயிராவது தறி கெட்டு, காவு வாங்கிக் கொண்டு தான் இருந்தது. ஆனாலும், அது நின்றபாடில்லை.

பாக்கியத்தின் அப்பா பாண்டியனுக்கு வருகிற நீர்ப்பாதை, பூபதியின் வரப்புக்கு சொந்தமானது. அதை தாண்டி வர விடாமல் அவன் அடைப்பைப் போட, அந்தக் காலச் சண்டை தான், தீராமல் தொடர்கிறது.

ஒருமுறை, காட்டில் இருந்து புளி உலுப்பிவிட்டு போகும்போது, இரண்டு தரப்பிற்கும் பெரும் சண்டை மூண்டது. அதில், பாக்கியத்தின் புருஷன் அழகு, பூபதியின் ஆட்களால் சரமாரியாய் வெட்டப்பட்டு, செத்துப் போனான்.

அப்போது தான் பாக்கியத்துக்கும், அழகிற்கும் திருமணமாகி, மூன்றாண்டு முடிந்திருந்தது. கையில், ஒரு குழந்தை முரளி. வாழ்க்கை முடிந்து போனது.

முற்றாய் வேரறுந்து போனாள். இதுதான் வாழ்க்கை என்ற இயல்பு தெரிவதற்குள், எல்லாம் முடிந்து போனது. பாண்டியன் ஒன்றும் லேசான ஆளில்லை... மேல் கோர்ட் வரை போய், அழகுவை வெட்டிய பூபதியின் சகலைக்கு, ஆயுள் தண்டனை வாங்கித் தந்து தான் ஓய்ந்தார்.

ஆனால், பாக்கியத்தின் வாழ்க்கை, இதில் திரும்ப வரப் போகிறதா என்ன... மனசு நொடிந்து போனாள். இந்த பாதகங்களைக் கடந்து தள்ளி வாழவே, தன் மகனைத் தோளில் போட்டு அங்கிருந்து துாரமாய் வந்து விட்டாள்.

குடும்பத்தில் எல்லாரும் வருத்தப்பட்டாலும், அதைப்பற்றி கவலை கொள்ளாமல், மகனை படிக்க வைத்து, நல்ல வேலைக்கு அனுப்பி, அமைதியாகி இருந்தாள்.

அடிக்கடி ஊர் பக்கம் போய் வருவதுண்டு. சண்டைக்கு வித்திட்ட வேர்கள் எல்லாம் வீழ்ந்து விட்டபோதும், விழுதுகள் இன்னும் அதைப் பிடித்து, தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, அவள் மனசு அல்லாடும்.

தாத்தா ஆரம்பித்த சண்டையை, தன் அண்ணன், தம்பி மகன்கள் கூட இன்னும் எடுத்து திரியும் வேதனையால், அவள் ஊர் பக்கம் போவதை நிறுத்தி, பல ஆண்டு ஆகிறது.

எடுத்துச் சொன்னால், புரிந்து கொள்ள இங்கே யாருக்கும் விருப்பம் இல்லை. சொல்லிப் பார்த்து நொந்து போனதால், தள்ளி நின்று கொண்டாள்.

இப்போது, அவளைப் போலவே, அங்கே ஒரு குருத்து, தன் வாழ்க்கையை இழந்திருக்கிறது. அதற்கு எது காரணமாக இருந்தாலும், அந்தக் காரியத்தின் மீது அவளுக்கு துளி கூட உடன்பாடில்லை தான்.

வேறு ஒரு பகைக்காக, ராசாத்தி புருஷனை யாரோ வெட்டி இருக்கின்றனர். பூபதியின் மகள் வயிற்றுப் பேத்தி அவள். அவளை நினைக்கையில், மனசு அனிச்சையாய் பொங்கியது. இன்னும் எத்தனை கனிகள், மரங்களை ஈனாமல் மடிந்து போக வேண்டும்?

மலைக் கோவிலில் கூட்டம் பொங்கிச் சாய்ந்தது. பூஜையை முடித்து, வெளியில் வந்த பாக்கியம், இருட்டத்துவங்கி இருந்த பாதையில் நடக்கத் துவங்கினாள்.

ஒத்தையடிப் பாதையைத் தாண்டி, மேற்கில் சில மீட்டர்கள் நடந்தால் தான், பேருந்து நிலையம் வரும். சோளிங்கர் கிணத்தை ஒட்டி வருகையில், அங்கே தென்பட்ட சின்ன பரபரப்பில் கவனத்தை திருப்பியவள், வேகமாய் அங்கே விரைந்தாள்.

கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள இருந்த ஒரு பெண்ணை, அங்கே கூடி இருந்தவர்கள் சேர்ந்து காப்பாற்றி இருந்தனர். பக்கத்தில் போய் நின்று உற்றுப் பார்த்தவளுக்கு, கண்களில் கடல் நீர் கரித்தது.

தொப்பலாய் நனைந்து, எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள், ராசாத்தி... இவளைப் பார்த்ததும், தலை தன்னால் தாழ்ந்து கொண்டது. பெரியவர்கள் வளர்த்த பகை இன்னும் அவள் மனசில் செழிப்பாய் இருப்பது, அந்த முகத்திருப்பத்தில் புரிந்தது.

சிரித்துக் கொண்டாள், பாக்கியம். குற்றம், விதையில் தான் அன்றி, இந்த கனியை நொந்து என்ன செய்ய?

'இந்த சின்ன வயசில், புருஷன் செத்துப் போறது பெரிய கொடுமை தான். அதுக்காக, நீயும் அதே முடிவைத் தேடிக்கிட்டு இங்கே வந்து நின்னா, உன்னை நம்பி நிற்கிற உன் புள்ளையோட நிலைமை என்னாகிறது... போ போய் ஒழுங்கா வீடு போய்ச் சேரு...' என, அங்கே நின்றவர்கள் அவளுக்கு அறிவுரை வழங்கி விலகினர்.

ஈரம் சொட்டச் சொட்ட அமர்ந்து கிடந்தவளின் அருகில் வந்து நின்றாள், பாக்கியம்.

''ஏய் ராசாத்தி... இந்தா புள்ளை... முட்டாளோட கடைசி ஆயுதம், தற்கொலை தான். நம்பளைக் கேட்டா எல்லாம் நடக்குது... உன்னைச் சுட்ட நெருப்பு, 25 வருஷத்துக்கு முன்னாடியே என்னை தீய்ச்சுடுச்சு... அன்னைக்கு, உன்னை மாதிரி நான் முடிவெடுத்திருந்தா, இன்னைக்கு, என் மகனை ஆபிசராக்கி கண் குளிர பார்த்திருக்க மாட்டேன்.

''உன் குடும்பத்துக்கும், என் குடும்பத்துக்கும் ஆயிரம் பிரச்னை தான். இருந்துட்டுப் போகட்டும். உனக்கும், எனக்கும் என்ன பிரச்னை... உன் அப்பாருக்கும், என் அப்பாருக்கும் என்ன பிரச்னை... பிரச்னை செஞ்சவங்க எல்லாம் போய் சேர்ந்துட்டாக... இன்னும் கூட பிரச்னை அப்படியே தான் நிக்குது, நம் ரெண்டு குடும்பதிலயும்.

''இனியாவது எல்லாத்தையும் துாக்கிப் போட்டுட்டு வெளியில வாங்க... ஏன்னா, கடவுள் மன்னிச்சுடுவாரு... ஆனா, கர்மா மன்னிக்காது... அதுக்கு கண் கூடா நிற்கிற சாட்சி நீயும், நானும் தான்... செஞ்ச பாவம் தலைமுறையைத் தாண்டி நம் வாழ்க்கையை வழிச்சுட்டு இருக்கு.

''போராடி வாழணும்... அதுதான் வாழ்க்கை... எங்க அப்பாரு சொன்னதை நான் கேட்டுகிட்டேன்... அப்ப நீ?'' பாக்கியம் பேசப் பேச, ராசாத்தியின் கண்களில் மின்னல் தெறித்தது.

திரும்பி நடக்க ஆயத்தமாக, ஒரு கணம் நின்று நிதானித்து, ராசாத்தியைப் பார்த்தாள், பாக்கியம்.

''நான் வைராக்கியமா வாழ்ந்து காட்டி, என் குடும்பத்து பவிசை ஊருக்கு காட்டிட்டேன்... நீயும் தான் வாழ்ந்து காட்டேன்... தைரியத்துல, இந்த ராசாத்தி, பாக்கியத்துக்கு கொறைஞ்சவ இல்லைன்னு...

''உன் முடிவுக்கு வர, ஒரு நிமிச தைரியம் போதும்; என் முடிவுக்கு வர ஒரு ஜென்மம் வேணும். பார்க்கலாம்... பூபதி ஐயா குடும்பத்து பொம்பளைப் புள்ளையும் குறைஞ்சவளா இல்லையான்னு,'' எகத்தாளமாய்ச் சொல்லி, எட்டு வைத்து நடந்தவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள், ராசாத்தி.

அவள், தன்னைத் திமிராய்ப் பேசி துாண்டிவிட்டுப் போகிறாள் என்று நினைத்த போது, கண்கள் பளபளத்தது. ஆம்...

அவள் தன் அகவெளிச்சத்தை கருத்துக் குச்சியால் துாண்டி, விளக்கேற்றி விட்டுப் போகிறாள்.

பட்டணத்தில் கட்டுக் கட்டாய் பணம் வாங்கி செய்யும் இந்த அறிவுரைக்கு, 'கவுன்சிலிங்' என்று பெயராம். ஆனால், அதிகாரமாய் அதை செய்துவிட்டு, கம்பீரமாய் கடந்து போன பாக்கியத்தை, முதன்முறையாய் பகை கழுவிய பார்வையில் கண்ணியமாய் பார்த்து நின்றாள், ராசாத்தி.

எஸ். பர்வின் பானு






      Dinamalar
      Follow us