தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்!

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்!

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்!


PUBLISHED ON : ஏப் 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனிமை மற்றும் தீண்டாமையுமே தங்கள் வாழ்வின் சீதனங்களாக கொண்டு வாழும் திருநங்கைகளின் வாழ்க்கைக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வந்திருக்கிறார், சட்டம் ஒழுங்கு பிரிவு

சப் - இன்ஸ்பெக்டர், பிரித்திகா யாஷனி.

சேலம், கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கலையரசன் - சுமதி தம்பதியருக்கு, இரண்டு ஆண் வாரிசுகள்; இரண்டாவது மகன், பிரதீப் குமார்.

இவர், பிளஸ் 2 படிக்கும் போது, தனக்குள் பெண்மை மலர்வதை உணர்ந்து, தான் ஒரு ஆண் இல்லை என்பதை குடும்பத்தாரிடம் கூறியிருக்கிறார்.

அவர்களுக்கு இது புரியாமல் மந்திரவாதியை கூப்பிட்டு மந்திரிக்க செய்துள்ளனர். அவரும் வாங்கிய காசுக்கு, பிரதீப்குமாரை அடி அடியென அடித்து, உடலை ரணமாக்கி விட்டார்.

இந்த போராட்டத்திற்கு நடுவில் கல்லூரியில் சேர்ந்து, பி.சி.ஏ., முடித்து, பட்டதாரியாகவும் ஆனார். 'பெற்றோர் நல்லவர்கள்; ஆனால், புரியாதவர்கள். நம்மால் அவர்களுக்கு எதற்கு அவமானமும், தொல்லையும்...' என்று எண்ணி, வீட்டை விட்டு வெளியேறி, சென்னை வந்து சேர்ந்துள்ளார்.

திருநங்கைகளை அன்புகாட்டி அரவணைக்கும், 'தோழி' அமைப்பு, இவருக்கு அடைக்கலம் தந்து, விடுதி வார்டன் வேலைவாய்ப்பும் வாங்கிக் கொடுத்தது. சிறுகச் சிறுக சேமித்து, ஆஸ்பத்திரியில் சேர்ந்து, அறுவை சிகிச்சை செய்து, முழுமையான பெண்ணாக மாறினார். பின், சான்றிதழில் உள்ள பிரதீப்குமார் உள்ளிட்ட ஆண் அடையாளத்தை மாற்ற விரும்பி, வழக்கறிஞர் பவானியை சந்தித்தார். அவரது உதவியுடன், பிரதீப்குமாராக இருந்தவர், பிரித்திகா யாஷினியானார். இவரது வாழ்க்கையில், சிரித்ததை விட, அழுததே அதிகம். அப்போதெல்லாம் ஆறுதலாக இருந்து, அன்பு செலுத்திய தன் தோழி, யாஷினியின் பெயரையே, தன் பெயருக்கு பின் வைத்து, தோழிக்கு பெருமை சேர்த்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து, பல்வேறு தடைகளைத் தாண்டி, உதவி ஆய்வாளருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்த பிரித்திகா யாஷனிக்கு, தற்போது, தர்மபுரி காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு சப் - இன்ஸ்பெக்டராக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில், இந்த பதவி வகிக்கும் முதல் திருநங்கை இவர் தான். தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து, பணி ஆணையையும், வாழ்த்தையும் பெற்ற போது, அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி!

'நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய கிடைத்த அற்புதமான வாய்ப்பு; இதை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வேன். என் அடுத்த கனவு ஐ.பி.எஸ்., தான்...' என்கிறார்.

அதுவும், விரைவில் நனவாக வாழ்த்துவோம்!

எல்.எம்.ராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us