PUBLISHED ON : ஏப் 22, 2018

மொபைலில் ஒளிர்ந்த பெயரை பார்த்தேன்... நண்பர் கிருஷ்ணதாஸ்; திடீர் திடீரென்று போன் செய்து பேசுவார். மூத்த குடிமகன்; நானும் தான். ஆனால், அவர், என்னை விட, 10 வயது மூத்தவர்.
நான்கு மாதத்திற்கு முன், நான், நெதர்லாந்தில் இருந்தபோது அழைத்தார்; கட்டணம் பழுத்து விடும் என்பதால் எடுக்கவில்லை. இந்தியா வந்ததும், திரும்ப அழைக்கலாம் என்றிருந்தேன்; மறந்து விட்டது.
போனை எடுத்து, ''வணக்கம்; டாக்டர் தாஸ்...'' என்றேன்.
''ஆஹா... உங்கள ஒரு வழியா பிடிச்சுட்டேன்,'' என்ற அவர் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.
எங்கள் உரையாடலை விவரிப்பதற்குள், எங்களைப் பற்றி கூறி விடுகிறேன்...
நான், டாக்டர் விசுவநாதன்; பிரபல ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். டாக்டர் கிருஷ்ணதாசும் விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர் தான். ஆனால், அவர், என்னைப் போன்று, ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரியவில்லை. பல தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்தவர்; நல்ல திறமைசாலி. அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்களும் நிறைய படித்து, அமெரிக்காவில் பெரிய வேலைகளில் இருக்கின்றனர். சென்னையில், சொந்த வீட்டில் தன் மனைவியுடன் வசிக்கிறார், கிருஷ்ணதாஸ்.
''சாரி தாஸ்... நீங்க போன் செய்தபோது, நான் இந்தியாவில் இல்ல; யூரோப்பில் இருந்தேன்,'' என்றேன்.
''அடடே... என்ன ஏதாவது வேலையா?'' என்றார் படபடப்புடன்!
''அப்படியெல்லாம் இல்ல; என் மாணவன் அங்க இருக்கான்; அழைச்சிருந்தான்; அதான், 15 நாட்கள், ஆம்ஸ்டர்டாம், பாரிஸ், ஜுரிச்ன்னு சுற்றிட்டு வந்தேன்.''
''பரவாயில்லயே... என் மாணவர்கள் கூட அங்கெல்லாம் இருக்கின்றனர்,'' என்றவர், ''அப்புறம் எப்படி இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.
''ஏதோ போகிறது; நீங்கள், யு.எஸ்., போகலயா?''
''போனோமே... போன வருஷம், நானும், என் மனைவியும் ஆறு மாசம் அங்குதானே இருந்தோம்... என் மனைவி கீழே விழுந்ததில், காலில் ப்ராக்சர்; அதற்கு, டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கோம். அதனால, இந்த வருஷம் போக முடியாது.''
''அடடா...''
''போனா மட்டுமென்ன... அது ஒரு ஜெயில்; அவங்க உதவி இல்லாம வெளியே எங்கயும் போக முடியாது,'' என்றார் அலுப்புடன்!
''நீங்க, பக்கத்தில் உள்ள யுனிவர்சிடிக்கு போய், அந்த நாட்டு விஞ்ஞானிகளுடன் பேசிப் பாக்கலாமே...''
''அவ்வளவு சுலபமாக, அவங்கள சந்திக்க அனுமதி கிடைச்சுடாது. நம்ம ஊர் விஞ்ஞானிக போல, அவங்களுக்கு அவ்வளவு ஓய்வு கிடையாது,'' என்று கூறி, சிரித்தார்.
அவர், என் நிறுவனத்தையும், அதில் குளிர் காயும் பல வேலையற்ற விஞ்ஞானிகளையும்... ஏன் என்னையும் சேர்த்து குத்திக் காட்டுகிறார் என்பது புரிந்தது; அதற்கு பதில் தரவில்லை.
ஒரு காலத்தில், எங்கள் நிறுவனத்துடன் கிருஷ்ணதாசுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. எங்கள் இரண்டு நிறுவனங்களும் இணைந்து, பெரிய தொழில் நிறுவனத்திற்கு ஒரு ரசாயனப் பொருள் தயாரிக்க வேண்டிய வழிமுறைகளை செய்து தந்தோம். ஆனால், கடைசியில் அந்த புராஜக்ட் தேறவில்லை. எங்கள் நிறுவனம், தாசின் நிறுவனத்தையும், தாசின் நிறுவனம் எங்கள் நிறுவனத்தையும் மாறி மாறி குறை கூறினர்.
அப்போதிலிருந்து தான், எங்கள் இருவருக்குமிடையே பழக்கம் ஆரம்பித்தது.
எங்கள் நிறுவனத்தில் வேலை செய்த விஞ்ஞானிகளிடம், நெருங்கி பழகியுள்ளார், கிருஷ்ணதாஸ். அதனால், அவர்களை பற்றி என்னிடம் விசாரித்தார். பின், எங்கள் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தவரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் எங்கிருக்கிறார் என்று வினவினார்.
''உங்களுக்கு எப்படி தெரியாமல் இருக்கும்... அவர் தான் டில்லியில் மிகப்பெரிய பதவியில் இருக்கிறாரே...'' என்றேன்.
''ஓய்வுபெற்ற பின்னுமா...''
''ஆமாம்... அவருக்கு நிறைய தொடர்புகள் உண்டு; அதோட, அவர் புத்திசாலி வேறு...''
''ரொம்ப சரி; அவர், மகா சாமர்த்தியக்காரர் தான். மத்திய அரசில் அவருக்கு நல்ல செல்வாக்கு. ஒருமுறை, எனக்கு வேலை இல்லாமல் போனபோது, அவரிடம், உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று கேட்டேன். அதற்கு, அவர் என்ன சொன்னார் தெரியுமா...'' என்று கேட்டார்.
இதை, பலமுறை என்னிடம் சொல்லியுள்ளார். இருந்தாலும், 'ம்' கொட்டினேன்.
''அவர் 'நான் சொல்றேன்னு தப்பாக நினைக்காதீங்க... உங்களுக்கு வேலை தரணும்ன்னா, நான் தான் என் பதவியிலிருந்து இறங்கி, அந்த நாற்காலிய உங்களுக்கு தரணும்'ன்னு சென்னார்...''
''உண்மை தான்; மிகச் சாதுரியமான பதில்...''
''போகட்டும்; நீங்க சாப்பாட்டுக்கு என்ன செய்றீங்க... நீங்க தான் கல்யாணம் ஆகாதவர் ஆயிற்றே...''
''ஒரு பெண்மணி வந்து சமைத்து வைச்சுட்டு போறார்.''
''தேவலையே... என்ன சம்பளம்...'' என்று கேட்டார். சொன்னதும், ''பரவாயில்லயே... என் மனைவியால் இப்போ சமைக்க முடியல; தினம் வீட்டில் கொண்டு வந்து தர்றோம்ன்னு விளம்பரங்கள் வருதே... அதில் தான் அவ்வப்போது வாங்கிக்கிறோம்; சாதம் மட்டும் குக்கரில் வைச்சுக்குவோம்,'' என்றார்.
''பரவாயில்லயே...''
''என்ன பரவாயில்ல... அவங்க தரும் சாம்பார், ரசம், பொரியல் வாயில் வைக்க முடியல. ஏகப்பட்ட காரத்தையும், மசாலாவையும் போட்டு வச்சுடறாங்க. கேட்டால் எல்லாரும், 'ஸ்பைசி'யாக வேணும்ன்னு தான் கேட்கிறாங்கன்னு சொல்றாங்க.''
''சிரமம் தான்...''
''போதாக்குறைக்கு ஏகப்பட்ட வைத்திய செலவு வேறு... உங்கள போல் எனக்கு, 'பென்ஷன்' கிடையாதே...''
அடுத்த அம்பு இது; நானும், பதிலுக்கு ஓர் அம்பை எய்தேன்.
''ஏன்... உங்க பிள்ளைக உதவி செய்ய மாட்டாங்களா...''
ஒரு வினாடி மவுனத்திற்கு பின், ''பணம் அனுப்புறாங்க தான்... இருந்தாலும்...'' என்று வாக்கியத்தை முடிக்காமல் தொங்க விட்டார்.
எனக்கு புரிந்தது; 'கேட்டால் தான் கொஞ்சமாவது கிடைக்கும்...' என்ற உண்மை.
தான் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், தன்மானம் என்ற ஓர் உணர்வு இடையில் இருக்கிறதே...
அவரே பேச்சை திசை மாற்ற, ''என்னை பற்றியே பேசிக்கிட்டிருக்கேனே... நீங்க எப்படி பொழுது போக்குறீங்க... கன்சல்டன்சி என்று, துபாய், குவைத் எல்லாம் போனீர்கள் போல...'' என்றார்.
''அதெல்லாம் ரெண்டு வருஷத்துக்கு முன்... இப்போ, அதைச் செய்ய எனக்கு மனசோ, பொறுமையோ இல்ல,'' என்றேன் சிரித்தபடி!
''ஓ... அப்புறம்...''
''படிக்கிறேன், எழுதுறேன், சினிமா பார்க்கிறேன்... சங்கீத கச்சேரிகளுக்கு போறேன்.''
''இந்த வயசில சினிமா பாக்கிறீங்களா...''
''ஏன் பாக்கக் கூடாதா... தங்கல்ன்னு அமீர்கானின் இந்தி படம் ஒன்று பார்த்தேன். சமீபத்தில், ஸ்ரீதேவி நடித்த, மாம் படம் பார்த்தேன். மல்டி ப்ளக்ஸில் போய் படம் பார்ப்பது நல்ல அனுபவம்,'' என்றேன் ரசனையுடன்!
''என்னவோ போங்க... அந்த ஆசையெல்லாம் போய் எத்தனையோ காலம் ஆகிடுச்சு; சினிமாவாவது, டிராமாவாவது... எனக்கு தெரிந்தது எல்லாம் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி தான்,'' இதை சொல்லும்போது, அவர் குரலில் பெருமை ஒலித்தது.
''அதுவும் சரிதான்; உங்க சப்ஜெக்ட் நாலெட்ஜ் யாருக்கு உண்டு...''
''அது சரி... உங்களுக்கு கூட ஒரு ரோடு ஆக்சிடென்டில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் நடந்ததே... இப்போ, எப்படி இருக்கு,'' என்றார் அக்கறையாக!
''அது, எட்டு வருஷத்துக்கு முன் நடந்தது; அதனால், எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆர்த்ரைடிஸ் ஆரம்பிச்சுட்டது. நடப்பது சிரமமாகத் தான் இருக்குது,'' என்றேன். இது, அவருக்கு ஓரளவு திருப்தி தந்திருக்கும்.
''அடடா... வயசானாலே பிரச்னை தான்; வெளியில் போவதென்றால், உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமோ... கார் இருக்கிறதா?''
''கார் ஓட்ட தெரியாது; ஊபர், ஓலா இல்லன்னா, ஆட்டோ தான்...''
''ஊபர், ஓலா பயன்படுத்தணும்ன்னா ஸ்மார்ட் போன் உபயோகிக்கணுமே... உங்களுக்கு அதை பயன்படுத்த தெரியுமா?'' என்று கேட்டார், ஆச்சரியத்துடன்!
''கத்துக்கிட்டேன்.''
''பரவாயில்லயே... நான், ஒருநாள் உங்கள நேரில் பாத்து பேசணும்,'' என்றார்.
''கட்டாயம், வாங்க; ஆனா, எங்க பில்டிங்கில், 'லிப்ட்' கிடையாது; 40 படிகள் ஏறணும்,'' என்றேன் சிரித்தபடி!
''அதனால் என்ன... ஏறினால் போச்சு; ஆமாம்... தனியாக இருக்கிறீங்க... உங்களுக்கு என்ன ஸ்வீட் இல்ல காரம் பிடிக்கும்... நான் வாங்கிட்டு வர்றேன்,'' என்றார் அன்புடன்!
வாய் விட்டுச் சிரித்தேன்.
''ஒண்ணும் வேணாம்; நீங்க வாங்க அது போதும். அட்ரஸ் தெரியும் தானே...''
''தெரியும்; அடுத்த வாரம் போன் பண்ணிட்டு வர்றேன்,'' என்று பேச்சை முடித்துக் கொண்டார்.
நான் போனை வைத்து, புன்னகையுடன் பெருமூச்செறிந்தேன்.
எனக்கு தெரியும்... கிருஷ்ணதாஸ் வரமாட்டார் என்று! எப்படி என்கிறீர்களா... அவர், இதுபோல் என்னிடம் ஆறு மாதமோ, ஒர் ஆண்டு இடைவெளியிலோ இப்படி உரையாடுவது வழக்கம். காரணம்...
முதுமை, தனிமை!
இரண்டுமே தவிர்க்க முடியாத வழித்தடங்கள்.
இவற்றிலிருந்து தப்பிக்கதான் எல்லாரும் எப்படி எப்படியோ முயற்சி செய்கிறோம்; இதுபோன்று பழைய, அதிகம் நெருக்கம் இல்லாத நண்பர்களுடன் பேசுவதும் ஒரு வழி போலும்!
நான் இதுபோல் யாருக்கு மெனக்கெட்டு போன் செய்து அறுக்கிறேன் என, என் நண்பர்களை கேட்டால் சொல்வர்.
என் நண்பர்கள் யாரையாவது உங்களுக்கு தெரிந்தால் கேட்டுப் பாருங்களேன்!
ஜி.சுவாமிநாதன்
