
இரவு மணி, 7:00ஐ நெருங்கியது; கணவர், கிஷன் வரும் நேரம். சப்ஜியை கிளறி இறக்கி, சப்பாத்தியை போட்டு எடுத்தால், வேலை முடிந்தது. அழைப்பு மணி ஓசை கேட்கவே, பரபரப்புடன் கதவை திறந்தேன்.
பக்கத்து வீட்டு அம்மாவின் மருமகள், சித்ரா நின்று கொண்டிருந்தாள். அலுவலகத்திலிருந்து நேராக, இங்கு தான் வருகிறாள். உள்ளே அழைக்கவும், சமையலறை சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
''காபியா, சப்பாத்தியா... ரெண்டும் ரெடி!''
''காபி மட்டும் குடுக்கா.''
''ரெண்டு சப்பாத்தி சாப்பிடுன்னா, மீன மேஷம் பார்க்கிற,'' பிடிவாதமாக கையில் தட்டை திணித்தேன்.
''லேடி ஹிட்லர் வாசல்லயே நிக்கிறாங்க, பார்த்தியா?''
சமையலறை ஜன்னலிலிருந்து பார்த்தால், சித்ரா வீட்டு வாசல் நன்றாக தெரியும். அவள் வருகையை எதிர்பார்த்து, நின்று கொண்டிருந்தார், மாமியார் மீனாட்சி அம்மாள்.
''உங்க கையால சப்ஜியும், சப்பாத்தியும் சாப்பிட, மறுபடியும் பிறந்து வரணும்க்கா.''
''தாங்க்ஸ்... இன்னும் ஒண்ணே ஒண்ணு!''
''போதும்கா, இதைப் பிடிங்க,'' என, பரிசு பொருளை கொடுத்தாள்.
''என்ன திடீர்னு?''
''அடிக்கடி நெனைச்சுப்பேன், உங்களுக்கு எதாவது தரணும்ன்னு... பிடிச்சிருக்கா?''
மயில் வடிவத்தில் அழகான வெள்ளி குங்குமச்சிமிழ் இருந்தது.
''எதுக்கும்மா இவ்வளவு விலை உயர்ந்த குங்குமச் சிமிழ்?''
''அதுலயிருந்து குங்குமம் எடுக்கும் போதெல்லாம் என் நினைப்பு வரும்ல்ல, அதுக்காக...'' என்றவள், சமையலறை ஜன்னல் வழியாக எட்டி பார்த்து, ''அக்கா, 'லேடி ஹிட்லர்' உள்ளே போறாங்க; நான் ஓடறேன்.''
அன்று, ஆடி வெள்ளிக்கிழமை, ஆதலால், குங்குமத்துடன் ரவிக்கை வைத்து கொடுத்தேன். அதை கைப்பையில் வைக்க திணறியபோது, வெளியே குதித்தது, 'டிக் 20' அட்டைப் பெட்டி.
''வீட்ல மூட்டைப்பூச்சியா?''
அவள் முகம் வெளிறி, இயல்பு நிலைக்கு திரும்பியது.
''ஆமாம்கா... பூச்சிகளிடமிருந்து இனிமே விடுதலை தான்.''
அவளை அனுப்பி வைத்து, கதவை தாழ் போட்டு உள்ளே வந்தேன். சித்ராவின் அப்பாவிற்கு ஆறு குழந்தைகள். நான்கு பெண்கள், கடைசி இரண்டும் பிள்ளைகள். சுமாரான உத்தியோகம்.
என் பள்ளித்தோழி பாலா, சித்ராவிற்கு ஏதோ வகையில் உறவு. அதனாலோ, வேறு எதனாலோ, சித்ராவிற்கும் என்னை பிடித்து, மனம் விட்டு பேச வேண்டும் என்றால், என் வீட்டிற்கு வந்து விடுவாள்.
'எங்க வீட்டுல தரித்திரமா இருந்தாக்கூட ஜாலியா இருப்போம். இங்க, சிக்கனம் தலையை சுத்துதுக்கா. நாப்கின் வாங்குவதற்கு கூட கணக்கு கேட்கிறாங்க. நாக்கை பிடுங்கிக்கணும் போல இருக்கு.
'தலைவலி மண்டையை உடைச்சா கூட சாயந்திரம் காபி கிடையாது. தினமும் காலையில் முதல் நாள் மீந்த சோறு தான். அவருக்கு, ஆபீஸ்ல டிபன் கிடைக்கும். மதியம் ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு மீதி வெச்சது தான் எல்லாருக்கும் ராத்திரிக்கு... காஸ் செலவை கட்டுப்படுத்த, ஒருவேளை தான் சமையல்...'
இவையெல்லாம், சித்ரா அவ்வபோது கூறும் செய்திகள் தான். புதுக்கல்யாண பெண்ணின் எந்த துடிப்பும், சிரிப்புமில்லாத அவளை பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.
சித்ராவை பற்றி யோசித்துக் கொண்டே சமையலறை வேலைகளை முடிக்கவும், கிஷன் வந்தார்.
சாப்பிடும்போது அவரிடம் குங்குமச்சிமிழை காட்டினேன்.
''சப்ஜி எப்படி?''
''ஏன், வழக்கம் போலதான் இருக்கு.''
''இதான் உங்கள்ட்ட. 'உங்க சப்பாத்தி, சப்ஜியை சாப்பிட, இன்னொரு முறை பிறந்து வரணும்க்கா' என்றாள், சித்ரா.''
''அப்படியா... வேறென்ன சொன்னா?''
''டிக் 20 வாங்கி வெச்சிருக்கா. 'மூட்டைப்பூச்சிகிட்ட இருந்து இனி விடுதலைக்கா'ன்னு, சொன்னாள். நம் வீட்டுலயும் மூட்டைப்பூச்சி இருக்கு... நானும் எவ்வளவோ தடவை, 'டிக் 20' வாங்கிட்டு வாங்கன்னு சொல்றேன், நீங்க மறந்துடறீங்க.''
கையலம்பி வந்தவர், ''யோசிச்சுப் பாரு... ஒரு காரணமும் இல்லாம, வெள்ளி சிமிழ் பரிசு. உன் சமையலை சாப்பிட மறுபிறவி எடுக்கணும்ன்னு பேசறா... மூட்டைப்பூச்சியிடம் இருந்து இனி விடுதலை... இதையெல்லாம் சேர்த்து பார்த்தா, தப்பா எதையோ உணர்த்தலை?''
''ஐயோ, ஆமாங்க... நீங்க சொல்லும் வரை, எனக்கு அப்படி தோணவே இல்லையே.''
''என்னாலும் நிச்சயமா அப்படி சொல்ல முடியாது, சின்ன யூகம் தான். சரியாவும் இருக்கலாம் தப்பாவும் இருக்கலாம்.''
''ஐயோ, இப்ப என்னங்க செய்யறது?''
''யூகம் தான்... உன் ப்ரெண்டு, சந்தோஷமா இல்லைன்னு நீயே சொல்ற. கோவிச்சுக்கிட்டு பொறந்த வீட்டுக்கு போற அளவுக்கு அங்கேயும் வசதி இல்ல. அந்த பொண்ணுக்கு வேறேதும் பிரச்னை இருந்து, அவ இந்த முடிவுக்கு வந்திருந்தா... அவளோட பேசிப் பாரு!''
ஆபீஸ் டூர் விஷயமாக வெளியூர் சென்றார், கணவர்.
'பாவி, என்ன காரியம் செய்ய துணிந்திருக்கிறாள். இந்த இரவு வேளையில் சித்ராவை அழைத்து பேச முடியுமா... அவள் மாமியாரிடம் என்ன காரணம் சொல்வது? போக வர பஸ்சிற்கான சில்லரையை எண்ணித் தரும் மாமியாரிடம், என்ன சொல்லி பணத்தை பெற்றாள்...' என, எண்ணினேன்.
அந்த சிமிழை எடுத்துப் பார்த்தேன். மயில் தோகையின் வளைவில் சிறியதாக அவளது பெயர் காணப்பட்டது. ஆக, தன்னுடைய சிமிழை, இனி தனக்கு தேவையிருக்காது எனும் முடிவில் எனக்கு பரிசளித்திருக்கிறாள். மனதார, வயலுார் வேலவனை வேண்டினேன்.
வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்தேன்.
''சார், ஊருக்கு போயிட்டாருன்னு, 'வாக்கிங்' வந்தீங்களா?'' சித்ராவின் மாமியார்தான் கேட்டாள்.
''வீட்டுக்கு போனா தனியா துாங்கணும். குடித்தனக்காரங்களும் ஊரில் இல்லை. பயமா இருக்கு. அதான், துணைக்கு யாரையேனும் படுக்க வர...''
''அதுல என்ன அத்தனை யோசனை... அடுத்தடுத்த வீட்டுல இருக்கிறவங்க சமயத்துக்கு உதவணும்தான். ஆனா, நான் மாத்திரை போட்டா, மறுநா காலையில் தான் எழுந்திருப்பேன். மருமக இருக்காளே... எம்புள்ளை கூட இன்னிக்கு ஆபீஸ் வேலையா, 'டூர்' போயிருக்கான். சித்ராவை அனுப்பறேன்,'' என்றபடி, சித்ராவை அழைத்து, என்னுடன் அனுப்பினாள், மீனாட்சி அம்மாள்.
''ப்ளீஸ் வாயேன்... கொஞ்ச நேரம் பேசினால் எனக்கும் துாக்கம் வந்துடும்.''
மறவாமல் உள்ளே போய், கைப்பையை கொண்டு வந்தாள். கதவை பூட்டி, படுக்கையை போட்டு, 'ஏசி'யை இதமாக்கினேன்.
''ம், சொல்லு!''
''என்னக்கா?''
''ஏன் அப்படி செய்யணும்ன்னு நினைச்சே... உன்னிடம் தனிமையில் பேசணும்ன்னுதான் இங்கே அழைச்சிட்டு வந்தேன்.''
திகைப்பும், அச்சமும் அவள் முகத்தில் தில்லானா ஆடியது.
''எத்தனை அழகான பொண்ணு... அம்மா, அப்பா, தம்பி, தங்கைகள், கட்டின புருஷன் அத்தனை பேரும் இருக்கையில், போகணும்ன்னு உனக்கு யோசனை வந்ததே... எனக்கு மட்டும் சமயத்துல தோணியிருக்கலைன்னா, உன் கதி என்னவாகியிருக்கும்?''
விசும்பினாள், அழுது முடிக்கும் வரை காத்திருந்தேன்.
''அக்கா, நான் ரொம்ப பாவம் செஞ்சிருக்கேங்கா. பிறந்த வீட்டுல வயிறார சாப்பிட மட்டும் தான் வசதி இல்லை. ஆனா, சந்தோஷமா இருப்போம். இங்கே வாழ்க்கையே இல்லைக்கா.''
''வாழ்க்கையே இல்லைன்னா, ரமேஷோட படுக்கையறை பிரச்னை ஏதாவதா? அப்படி இருந்தா டாக்டர்ட்ட காட்டலாம்; சரி செஞ்சிடுவாங்க.''
''படுக்கையறை பிரச்னை இல்லைக்கா, படுக்கையறையே பிரச்னைதான்!''
''என்ன சொல்றே?''
''சமையலறைக்கு அப்புறம் கூடம். அங்கதான் நாலு பேரும் படுப்போம். அவங்களுக்கும் எங்களுக்கும் நடுவே மரத்தடுப்பு ஒண்ணு இருக்கும். அதுதான் மறைப்பு, போதுமா?''
''சீ, என்ன மனுஷங்க இவங்கள்ளாம்... உங்க வீட்டுக்காரர் இதை ஒப்புக்கிட்டாரா; உங்கம்மா, அப்பா யாரும் இது பத்தி பேசலையா?''
''கல்யாணத்தப்பவே, 'பெட் ரூம் இல்லையே'ன்னு, அம்மா கேட்டாங்க. 'திடுதிப்புன்னு கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து. வீடு மாற்ற நேரமில்லை. தனி படுக்கையறை உள்ள வீட்டை பார்த்திட்டு இருக்கோம். சீக்கிரம் போயிடுவோம்'ன்னு சொன்னாங்க, மாமியார்.
''அப்புறம், 'அண்ணன் தம்பி ஆறு பேர் உள்ள குடும்பம் எங்களுது. அந்த காலத்துல, யாருக்கும் தனி அறை இருக்காது... எங்களுக்கெல்லாம் குழந்தை பிறக்கலையா? பிளாட்பார்ம்ல படுக்கிறவங்க கூட பிள்ளை பெத்துக்கிறாங்க... எந்த அரண்மனையில் இருந்து உங்கம்மா ஆறு பேரை பெத்தா? அப்படி உனக்கு கஷ்டம்ன்னா, உங்கப்பாவை வீடு வாங்கி தரச்சொல்லேன் நானா வேண்டாங்கிறேன்?' என்றாங்க.
''இப்படி பேசி பேசி, எந்த பிரச்னைன்னாலும் வந்து முடியறது, எங்கப்பாவோட ஏழ்மையை குத்திக் காட்டறதுலதான்...'' பேச முடியாது மீண்டும் விக்கினாள்.
''உன் கணவர் என்ன சொல்றார்?''
''அவர், நுாற்றுக்கு நுாறு அம்மா பிள்ளை. 'அம்மா, அப்பா நம்ம நல்லதுக்குதான் சொல்றாங்க. சொந்த வீடு வாங்கணும்ன்னு நினைக்கிறாங்க. அதனாலதான், அதிக வாடகை வீட்டுக்கு போக வேண்டாம்ன்னு முடிவெடுத்திருக்காங்க'ன்னு பேசறார். யார்கிட்ட சொல்லக்கா... கல்யாணத்துக்கு பிறகு எங்களுக்குள்ள, 'அதெல்லாம்' நடக்கவே இல்லைக்கா.''
அவள் குரலில் ஆற்றாமையும், அழுகையும் பொங்கியது.
''சீ, இப்படிக் கூடவா இந்த காலத்து பிள்ளை இருப்பான்.
எங்கேயானும், 'ஹனிமூன் டூர்' போக வேண்டியது தானே?''
''அபச்சாரம், என்ன வார்த்தை பேசறீங்க... காசு செலவாயிடாதா?''
''காபி கலந்துட்டு வரேன்,'' என்றவாறு, அவள் கைப்பையிலிருந்து, 'டிக் 20'ஐ உருவினேன்.
'இந்த பெண்ணிற்கு நம்பிக்கையை, ஆறுதலை எப்படி கொடுப்பது...' யோசித்தவாறே காபி கலந்தேன்.
''குடிச்சுட்டு துாங்கு.''
தலைவலியோ, மனதை பகிர்ந்து கொண்ட ஆயாசமோ, கண்கள் அவள் உறக்கத்தை தழுவின.
எனக்கு தான் சிவராத்திரி ஆயிற்று. குடும்பப் பிரச்னை, அதுவும் மிக அந்தரங்கமான பிரச்னை. இதை வெளியே விவாதிப்பது, சித்ராவிற்கு அவமானம். ஆனால், தனியாக நான் என்ன செய்ய முடியும்?
புரண்டு படுத்த சித்ரா, ''அக்கா துாங்கலையா?'' என்றாள்.
''எப்படிம்மா துாங்க முடியும். நீ என்ன செஞ்சிருக்கணும் தெரியுமா? கணவனிடம் மனசு விட்டு பேசியிருக்கணும். வீட்டுல பேசினாதானே, மாமியார் ஒட்டு கேப்பாங்க... 'பீச், பார்க்'குக்கு வரமாட்டாங்கல்ல... மாமியார், மாமனாரோட சண்டை போட்டிருக்கலாம். உன் கோபம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
''அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினா, உன் மனசு அவங்களுக்கு எப்படி புரியும்? அஞ்சு வருஷம் வேலை பார்த்து, சேர்த்து வெச்சு, கல்யாணம் செஞ்சிட்டிருக்கிற சமர்த்து பொண்ணு, நீ. புருஷனும் சம்பாதிக்கிறார், தனிக்குடித்தனம்ன்னு மிரட்டியிருக்கலாம்.
''இது எதுவும் முடியலைன்னா, விவாகரத்து கேட்கிறேன்னு சவால் விடலாம். இது எதையும் யோசிக்காம, யாரிடமும் கலந்து பேசாம தற்கொலைன்னு முடிவு செஞ்சுட்டே... உயிரை மாய்த்துக் கொள்வதுதான் தீர்வா? தப்புன்னு நினைச்சா தட்டிக் கேட்கணும்...
''தற்கொலைங்கறது கோழைகளோட ஆயுதம்; சுயநலத்தின் வெளிப்பாடு; உன் செயல் ரெண்டு குடும்பத்தையும் நிலைகுலைய வெச்சிருக்கும். ஆபீஸ்ல அவளுக்கு யாரோடையோ தொடர்பு; அதன் விளைவு தான் இதுன்னு ஒரு வதந்தியை யாரேனும் கிளப்பினாங்கன்னா, உன் மரியாதை என்னாகறது?''
''இதையெல்லாம் யோசிக்கவே இல்லைக்கா,'' குற்ற உணர்வுடன் தலையை குனிந்தாள்.
''இனியொரு முறை இப்படி செய்ய மாட்டேன்னு, ஸ்வாமிகிட்ட சத்தியம் பண்ணு.''
என் நம்பிக்கையான வார்த்தை மின்சாரம், அவள் நரம்புகளில் பாய்ந்திருந்தது.
''மனசு தெளிஞ்சு போச்சு; ரொம்ப நன்றிக்கா!''
என்னை கட்டிக் கொண்டு, குழந்தை போல் துாங்கினாள்.
மறுநாள் காலை குளித்து, கோவிலுக்கு புறப்பட்டேன். 'தெய்வமே, என்ன செய்யணும்ன்னு வழி காட்டு...' சனீஸ்வரரை வலம் வரும்போது எதிரில், தெய்வ நாயகியை பார்த்தேன்.
'தெய்வா விபரமான பெண். துணிச்சலாக பேசுபவள். இவளை உதவி கேட்டால் என்ன?' என, யோசனை வந்தது.
''தெய்வா, வேலையெல்லாம் ஆச்சா?''
''ஆச்சு, போய் சாப்பிட வேண்டியதுதான்.''
''வீடு வரை வாயேன், கொஞ்சம் தனியா பேசணும்.''
வந்தவளிடம் நேற்றைய கதையை கூறி, 'டிக் 20' பாட்டிலை காட்டினேன்.
''இப்ப நாம அந்த பெண்ணுக்கு எப்படி உதவலாம்; யோசனை சொல்.''
''அந்த அம்மாவிடம், நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கலாம்.''
''அதுக்கு நீயும், நானும் மட்டும் போதுமா?''
''கூட்டம் வேணும், அப்பதான் பயம் இருக்கும். ஏழைப் பொண்ணு, இவளால் என்ன செய்ய முடியும்கிற திமிர்தானே அவளுக்கு?
''ராஜியை கூப்பிடலாம். வக்கீல்ட்ட வேலை பார்க்கிறா; லா பாயின்ட் பேசுவா. லக்ஷ்மி நல்லா சண்டை போடுவா, தன் மாமியாரை அடக்கினவளாச்சே!''
''தெய்வா, ஒண்ணு முக்கியம். அவ மாமியாரை அவமானப்படுத்துவது நம் நோக்கமல்ல; சித்ராவுக்கு நல்லது செய்யணும்,'' என்றேன்.
மேலும், என்னென்ன பேச வேண்டும், எப்போது அவர்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று, திட்டங்களை தீட்டினோம்.
''மாலை, 3:00 மணிக்கு, ஜானு குழந்தைக்கு பிறந்த நாள், அதுக்கு அழைக்கப் போகிறார் போல உள்ளே போய், வீட்டை பார்ப்போம். படுக்கையறை இல்லாம சின்னஞ்சிறுசுகள் எங்க படுக்கிறாங்கன்னு பேச்சை ஆரம்பிப்போம்.''
''மறக்காம பாட்டிலை துாக்கிட்டு போயிடுவோம்.''
அன்று மாலை, 3:00 மணி. திடுதிப்பென்று அனைவரும் சித்ரா வீட்டினுள் நுழைந்தோம்.
முதலில் எங்களை பார்த்து திகைத்தார், மீனாட்சி அம்மாள். இயல்பாக பேசியவர், மருமகள் குறித்த விசாரணைகளுக்கு மட்டும் பட்டும், படாமலும் பதில் சொன்னார். அவரிடம், 'டிக் 20' விஷயத்தை சொன்னபோது, நிஜமாகவே அதிர்ந்தார்.
''இருபது வயசு பொண்ணு, வாழ்க்கையே வேண்டாம்ன்னு முடிவு செய்யறான்னா, அது எத்தனை பெரிய சோகம்ன்னு சொல்லுங்க?
''கணவனின் அரவணைப்பு என்பது, வெறும் பாலியல் உணர்வு மட்டுமில்லை. ஒருவருக்கொருவர் துணை இருக்கோம்ங்கிற ஆறுதல், அன்பு, பாதுகாப்பு, உரிமை. அவங்களுடைய ஏகாந்தத்தை பறிச்சுக்கிட்டதுல அவளுக்கு, தான் அனாதை, தனக்கு யாரும் இல்லைங்கிற எண்ணம் வந்துடுது பாவம்,'' என்றேன்.
மாமனார் - மாமியார் அதிர்ந்து போயிருந்தது, வெளிப்படையாக தெரிந்தது.
இத்தனை துணிச்சலாய் சித்ரா முடிவெடுப்பாள் என்பதும், அவளுக்கு ஆதரவாக தெருவே கிளம்பி வருவோம் என்பதும், அவர்கள் நினைத்தும் பார்க்காதது. 10 பெண்கள் என்றாலும், அதுவும் பெண் சக்தி தான்; மக்கள் சக்தி தான். அதன் உண்மையான வலிமை அப்போது தெரிந்தது.
''எனக்கும், இவருக்கும் உடம்பு நிறைய பிரச்னை. நாம இருக்கும்போதே பையனுக்கு வீட்டை வாங்கிக் கொடுத்துடணும்ன்னு ஆசைப்பட்டோம். வீடு இருந்துட்டா, ரெண்டு பேர் சம்பளத்துல சாப்பிடறதும், எதிர்காலத்துக்கு சேமிச்சு வைக்கிறதும் அவங்களால முடியும்ன்னு திட்டம் போட்டோம்.
''அது, அவளை அப்படி புண்ணாக்கியிருக்கும்ன்னு சத்தியமாகவே தெரியாது. உடனடியா தனியறையுடன் வீட்டை பார்க்கிறேன். ஊர்மி அம்மா, குடும்ப மானத்தை, என் குலக்கொழுந்துகளை காப்பாத்தினீங்க, உங்களுக்கு நன்றி,'' என, மேலும் பேச முடியாது அழுதாள், மீனாட்சி அம்மாள்.
''சில சந்தர்ப்பங்கள் புரிதல் இல்லாம போயிடுது. சின்னவங்கன்னாலும், அவங்க விவரமானவங்க. எல்லாரும் உட்கார்ந்து பேசியிருந்தீங்கன்னா, இத்தனை பிரச்னை வந்திருக்காது. இங்க யாரும் உங்களை தவறா நினைக்கலை,'' என்றபடியே, அவர் கண்ணீரை துடைத்தேன்.
இரண்டு வாரத்தில் அவர்கள் வேறு வீட்டிற்கு குடிபோனதும், இரண்டு ஆண்டில், குட்டி சித்ராவை துாக்கியபடி சித்ரா வந்தபோது, நாங்கள் கொண்டாடி குதுாகலித்தது, தனிக்கதை.
இயற்பெயர்: ஜி.ஜனனி சவுமியாபுனைப் பெயர்: ஜனனி ராம்வயது: 36படிப்பு: பி.டெக்.,பணி: இல்லத்தரசிசொந்த ஊர்: சென்னைஇதுவரை வெளியான படைப்புகள்: தினமலர் டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டி - 2020ல், ஆறுதல் பரிசும்; மங்கையர் மலர், ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப் போட்டி 2021ல் பரிசும் பெற்றுள்ளேன்.லட்சியம்: சமூக பொறுப்புள்ள கதைகளை எழுத விருப்பம்.கதைக்கரு பிறந்த விதம்: எனக்கு தெரிந்த குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வை கதையாக்கி உள்ளேன்.

