PUBLISHED ON : அக் 27, 2013

புராணங்களெல்லாம் கட்டுக்கதை என்போர் உண்டு. அவர்களது அறிவுக்கு, அப்படி தோன்றலாம். அவை, உண்மையில் நடந்த சம்பவங்களா, கட்டுக்கதையா என்பது முக்கியமல்ல. அதில் காணப்படும், வாழ்வியலுக்கு தேவையான நீதி கருத்துகள் தான் முக்கியம். மனிதனின் நல்வாழ்வுக்கும், மன ஒருமைபாட்டிற்கும், ஆன்ம பலத்திற்கும் புராணங்கள் துணை செய்கின்றன.
பிரகலாதனை பாடசாலையில் சேர்த்தனர். 'இரண்யாய நம' என்று, தன்னைப் போற்ற வேண்டும் என்பது, பிரகலாதனின் தந்தை, இரண்யன் உத்தரவு. ஆனால், பிரகலாதன், நாராயண நாமத்தை சொல்லி பஜனை செய்தான். மற்ற பிள்ளைகளையும் அந்த பஜனையில் ஈடுபட வைத்தான். மற்ற பிள்ளைகள் எல்லாம், 'நாம் இந்த சிறுவயதில் ஓடி ஆடி விளையாடலாம். பஜனை வழிபாட்டை எல்லாம், ஐம்பது அறுபது வயதுக்கு மேல் வைத்துக் கொள்ளலாமே...' என்றனர். அதற்கு பிரகலாதன், 'அட அசடுகளா... நாம் எந்த வயது வரை உயிரோடு இருப்போம் என்று எப்படி சொல்ல முடியும். மேலும், வயதான பிறகு, பஜனை வழிபாடுகளில் ஈடுபட நேரமிருக்குமோ, இருக்காதோ... அதனால், சிறுவயது முதலே இதில் ஈடுபடுவதுதான் நல்லது...' என்று, உபதேசம் செய்தான்.
இவன் சொன்னதிலும் உண்மை இருக்கிறது. ஒரு சிலர், காலை எழுந்தது முதல், இரவு வரை, ஏதாவது ஒரு வேலை விஷயமாக வெளியே போவது, வருவது என்று, வீட்டு நலனுக்காகவே பாடுபட்டுக் கொண்டு இருப்பர். 'என்ன சார்... ஒரு கோவில் குளம், பூஜை என்று வைத்துக் கொள்ளக்கூடாதா' என்றால், 'அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. எல்லாம், 'ரிடையர்' ஆன பிறகு தான்' என்பர். அப்படியே, 'ரிடையர்' ஆகிவிட்டாலும் இந்த பூஜை, கோவில், வழிபாடுகளில் புத்தி சொல்லாது. வேறு எங்கேயாவது, 'பார்ட் டைம்' வேலை கிடைக்குமா என்று அலைவர். அதுவுமில்லை என்றால், இருக்கவே இருக்கு வீட்டு வேலைகள்.
இது தான், 'ரிடையர்டு' வாழ்க்கை. 'ரிடையர்' ஆன பின், கோவிலாவது, குளமாவது, சாமியாவது, பூஜையாவது! அதனால் தான், சிறுவயது முதலே இறைவழிபாடு செய்வதை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும் என் கின்றனர் பெரியோர். இதைத் தான் பிரகலாதனும் சொன்னான். அவன் சொன்னதில், எவ்வளவு உண்மையிருக்கிறது பார்த்தீர்களா!
***
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
* அன்புருவான, அருளுருவான, இன்பத்தின் எழிலுருவான இறைவனை, நாம் மண்ணால், மரத்தால், கல்லால், உலோகத்தால் உருவமைத்து வழிபடுகிறோமே, அது ஏன்?
இந்தக் கேள்வி எல்லா மதத்துக்கும் பொருந்தும். அன்புருவான தாய் - தகப்பனின் ஓவியத்தை, ஏன் வீட்டில் வைத்துக் கொள்கிறீர்கள்? ஏதோ ஒரு பிரதிமை, தெய்வம் இருப்பதற்கு சாட்சி சொல்கிறது; அவ்வளவு தான்.
***
வைரம் ராஜகோபால்
