தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்!

விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்!

விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்!


PUBLISHED ON : ஜன 04, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்போதெல்லாம், கோவில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. உண்டியல் வசூல் பொங்கி வழிகிறது. இதைப் பார்க்கும் போது, பக்தியும், வளமையும் அதிகரித்திருப்பதாக தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல! மருத்துவமனைகளின் கூட்டம் அதிகரித்து, பணம் ஏராளமாக வசூலாகிறது என்றால் ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது என்பதா பொருள்? அதுபோல, கோவில்களில் கூட்டமும், உண்டியல் வசூலும் அதிகரித்திருக்கின்றன என்றால், அந்த அளவிற்கு பிரச்னைகள் அதிகரித்திருக்கின்றன என்பது தான் உண்மை. சரி! பிரச்னைகளில் இருந்து விடுபட என்ன தான் வழி? வியாச பாரதம் வழி சொல்கிறது...

பாண்டவர்களுக்காக பரிந்து பேசி, அவர்களுக்கு உண்டான பாதி ராஜ்ஜியத்தை பெறுவதற்காக கண்ணனே தூது வருகிறார். கண்ணனின் வருகையை பற்றிக் கேள்விப்பட்டதும், திருதராஷ்டிரன் பரபரப்படைந்து தன் தம்பி விதுரரை அழைத்து,'விதுரா... நாளை காலை கண்ணன் நம் அரண்மனைக்கு வருகிறார். மூன்று உலகங்களுக்கும் ஆதி முதல்வனான அவருக்கு, நான் செய்யப் போவதை கேள்...' என்று கூறி, 'மாயன் செய்த, 16 தேர்களை கொடுக்கப் போகிறேன். ஒவ்வொரு தேரிலும் வெவ்வேறு நிறமுள்ள குதிரைகளாக, நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். நீண்ட பருத்த தந்தங்களை உடைய எட்டு யானைகளை கண்ணனுக்கு கொடுத்து, ஒவ்வொரு யானைக்கும் எட்டு யானை பாகன்களையும் கொடுப்பேன். இளமையான, நல்ல சக்தியும், திறமையும் வாய்ந்த, ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் தலா நுாறு பேரை கொடுப்பேன். தொட்டாலே பரவசப்படுத்தும், 18 ஆயிரம் ஆட்டுக் கம்பளங்களையும் கண்ணனுக்கு கொடுப்பேன்...' என்ற திருதராஷ்டிரன், விலை மதிப்பில்லாத ஒரு மணியை காண்பித்து, 'விதுரா... மிகுந்த ஒளி கொண்டதும், தூய்மையானதும் இரவிலும், பகலிலும் பிரகாசிப்பதுமான இந்த மணியை, கண்ணனுக்கு கொடுப்பேன். துரியோதனனைத் தவிர, என்னுடைய மற்ற பிள்ளைகளும், பேரர்களும் நன்றாக அலங்கரித்து, ஒளிவீசும் தேர்களுடன் கண்ணனை எதிர் கொள்வர்...' என்று சொன்னார்.

அனைத்தையும் அமைதியாக கேட்ட விதுரர், 'அரசே... அனைத்தும் தெரிந்தும் தாங்கள், இப்படி தர்மம் தவறி, வஞ்சனை செய்ய பார்க்கிறீர்களே... கண்ணன் விரும்புவது சமாதானத்தை தானே தவிர, நீங்கள் அள்ளிக் கொடுப்பவைகளை அல்ல...' என்றார்.

அதையெல்லாம் கேட்கும் நிலையில் திருதராஷ்டிரனோ, அவன் பிள்ளைகளோ இல்லை. விட்டுக் கொடுத்து வாழ மறுத்ததால், பாரதப் போர் ஏற்பட்டு, பெரும் அழிவைச் சந்தித்தனர்.

'விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்பதற்கிணங்க, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் மட்டுமே, அமைதியான, நிம்மதியான, ஆனந்தமான வாழ்க்கை வாழ முடியும்.

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!

படமாடும் கோவில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடும் கோவில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடும் கோவில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடும் கோவில் பகவற்கு அது ஆமே

பொருள்
: இறைவன் எழுந்தருளியிருக்கும் கோவிலில், நாம் செலுத்தும் காணிக்கையானது, நடமாடும் கோவில்களான அடியார்களுக்கும், ஏழைகளுக்கும் வந்து சேராது; ஆனால், அந்த ஏழை எளியவர்க்கும், அடியார்களுக்கும் நாம் ஏதாவது தந்தால், அது கோவிலில் இருக்கும் இறைவனுக்கே செய்ததாக ஆகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us