PUBLISHED ON : ஆக 06, 2023

ஆக., 9 - ஆடிக்கிருத்திகை
கிருத்திகை, கார்த்திகை என்று போற்றப்படும் நட்சத்திரம், ஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பாக கருதப்படுகிறது. இதில், ஆடி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்துக்கு, மிகுந்த சிறப்பு உண்டு. இந்த நாளில் தான், இது நட்சத்திர அந்தஸ்து பெற்றதாக சொல்வர்.
முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். இவர்கள், பார்வதியின் அம்சம் என்று ஒரு சாராரும், சப்தரிஷிகள் எனப்படும் ஆங்கிரஸ், கிருது, மரீசி, புலஹர், புலஸ்தியர், அத்ரி மற்றும் வசிஷ்டர் ஆகியோரில், வசிஷ்டர் மனைவி அருந்ததி நீங்கலாக, மற்றவர்களின் துணைவியர் என்று, மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.
ஆங்கிரஸ் மனைவியை சுரூபா, கிருதுவின் மனைவியை கிரியா என்ற சந்ததி, மரீசியின் மனைவியை கலா, புலஹரின் மனைவியை க் ஷாமா. புலஸ்தியரின் மனைவியை மனினி என்ற ஹவிர்பு, அத்ரியின் மனைவியை அனுசூயா என, அழைப்பர்.
சிவனின் நெற்றிக்கண்களிலிருந்து புறப்பட்ட ஆறு நெருப்பு பொறிகள், சரவணப் பொய்கை எனும் குளத்தில், அக்னி பகவான் மூலம் சேர்க்கப்பட்டது. அவை ஆறு குழந்தைகளாக மாறியது. அவற்றை பார்வதி தேவி ஒன்று சேர்க்க, அது ஆறுமுகம் கொண்ட குழந்தையானது.
ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை, ஆறு ரிஷி பத்தினிகளுக்கும் அளித்தார், சிவன். அப்போது இவர்களுக்கு, நிதர்த்தினி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா மற்றும் துலா என்ற பெயர்கள் ஏற்பட்டன.
முருகனையே வளர்க்கும் பேறு பெற்ற இவர்களை, வான மண்டலத்தில் நட்சத்திரமாக ஒளிரும் வாய்ப்பளித்தார், சிவன். இந்த நிகழ்வு ஆடி கிருத்திகையன்று நிகழ்ந்ததால், இந்த நாள் முருகனுக்குரிய விசேஷ நாளாயிற்று. அத்துடன் முருகனுக்கு, கார்த்திகேயன் என்ற பெயரும் ஏற்பட்டது.
தட்சிணாயண காலமான, சூரியனின் தெற்கு நோக்கிய பயண காலத்தின் துவக்க மாதமான, ஆடியில் வரும் கார்த்திகை, இதே காலத்தில் வரும் கார்த்திகை மாத திருக்கார்த்திகை, உத்ராயண காலமான, சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தின் துவக்க மாதமான, தை மாத கார்த்திகை ஆகியவை விசேஷம் பெற்றுள்ளன.
ஆண்டில் மூன்று மாதங்கள் சிறப்பு பெறும் ஒரே நட்சத்திரம், கார்த்திகை மட்டுமே. இந்நாட்களில் சிவ வழிபாடும், முருகன் வழிபாடும் முக்கியமானவை.
ஆடிக்கிருத்திகையன்று, நம்மைப் பெற்ற தாய்மார்களுக்கும், வளர்ப்பு தாய்மார்களுக்கும் உரிய மரியாதை செய்து, முருகனின் அருள் பெறுவோம்.
தி. செல்லப்பா
