/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை! - ஆணி வேர் அறுப்போம்!
/
கவிதைச்சோலை! - ஆணி வேர் அறுப்போம்!
PUBLISHED ON : ஜன 24, 2021

இது
மகாத்மா
ராட்டை சுழற்றி சுழற்றி
வெள்ளையரை வெளியேற்றி
வெற்றி கண்ட தேசம்!
அகிம்சையும்
ஒத்துழையாமை இயக்கமும்
ஒருமித்தபோது
உருவான சுதந்திர பூமி!
இங்கே -
காந்திஜி சுற்றிய
ராட்டையின் வேகத்துக்கு
ஈடுகொடுக்க இயலாமல்
பிரிட்டிஷ் பீரங்கிகள்
பின்வாங்கிப் போனது!
பாட்டுக்காரன் பாரதியின்
பேனா முனைக்கு முன்
தாக்குப் பிடிக்க முடியாமல்
ஆங்கிலேய ஏகாதிபத்தியம்
முனை மழுங்கிப் போனது!
காந்தியின் கடிதங்கள்
கல்லாதவனையும்
கனல் கொண்டு எழ வைத்தது!
காந்தியின் கைத்தடியோ
சத்தமில்லாமல்
தேசத்தின் முதுகெலும்பானது!
காந்தியின் கதராடை தான்
பாரத மாதாவின்
அடையாளச் சின்னமானது!
காந்தியின்
மூக்குக் கண்ணாடியோ
காலனி ஆதிக்கத்தின்
அதிகார கம்பெனிகளுக்கு
சிம்ம சொப்பனமாக இருந்தது!
மொழி காக்க
விழி இழந்த - எங்கள்
தியாகிகள் வாழ்ந்த தேசம் இது!
சுயநலம் பாராமல்
சுயராஜ்யம் பெற்றுத் தந்த
சுதேசிகள் பிறந்த மண் இது!
சகிப்பும், சமதர்மமும்
பாரத தேருக்கு
இரு சக்கரங்கள் என்று
முழங்கிய முன்னோர் பூமியிது!
இந்த
காந்திய மண்ணில்
மதவாதமும், மதுவாதமும்
முளைக்குமென்றால்
மண்ணுக்குள் புதைப்போம்
தீவிரவாதமும், விதண்டாவாதமும்
வேர் விடுமென்றால்
ஆணி வேர் அறுப்போம்!
என். ஆசைத்தம்பி, சென்னை.