PUBLISHED ON : செப் 26, 2010

வளைந்து, வளைந்து செல்லும் மலைப் பாதை வழியாக சென்றால், ஒரு அரை மணி நேர பயணத்திற்கு பின், பச்சை பசேல் என பசுமைப் புல்வெளி காணப்படுகிறது. அந்தப் பகுதியில், சிறிது தூரம் ஒத்தையடிப் பாதை வழியாக போனால் வருகிறது சகல மரங்களும், செடிகளும் பூத்தும், காய்த்தும் குலுங்கும் விவசாய காடு. அந்தக் காட்டின் நடுவில் கையில் விவசாய கருவியோடு நின்று வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார் இந்த கட்டுரையின் நாயகன் சந்திரன்.இருபது வருடங்களுக்கு முன், பட்டப்படிப்பு படித்த கையோடு பல வேலைகள் தேடிவந்த போதும், அதில் எல்லாம் நாட்டம் இல்லாமல், மலை விவசாயத்தில் இறங்கி, இன்று அந்தப் பகுதி மக்களின் விவசாய தோழனாக, வழிகாட்டியாக, புதுமை விரும்பியாக, நவீன விவசாயியாக, இயற்கை காவலராக, வனத்தை நேசிப்பவராக, அவ்வளவு ஏன்... காடே என் வீடு என சொல்பவராக மட்டுமின்றி, வாழ்பவராகவும் விளங்குகிறார்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் தாலுகாவில் உள்ள பாச்சாலூர் மலைப்பகுதியில் உள்ள வடகாட்டில் இருப்பவரான சந்திரன், தன் வடகாட்டை 20 வருடங்களுக்கு முன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட போது, அந்த இடம் ஒரு மண் மேடாகத்தான் இருந்தது.
கஷ்டப்பட்டு உழைத்தார் என்பதை விட, இஷ்டப்பட்டு உழைத்ததன் பேரில், இன்று பொன் விளையும பூமியாக தன் நிலத்தை மாற்றி வைத்துள்ளார். சுமார் 30 ஏக்கர் பரப்பளவு உள்ள இவரது காடு, பலருக்கு பாடம் சொல்லித்தரும் அற்புத பூமி.விதை இல்லா நாவல்பழ மரம், விதை இல்லா மாதுளை, ஒட்டு மாங்கனிகள், சப்போட்டா, பெரு நெல்லிக்காய், பெரிய அளவிலான செவ்விளனீர், தேக்கு மரம், பாக்கு மரம், மாமரம், புளியமரம், இலந்தை மரம் என்று எல்லாவிதமான மரங்களையும், செடி கொடிகளையும் வைத் துள்ளார். கிணற்று தண்ணீரை வெளியே கொண்டு வர காலம், காலமாக இருந்த கடினமான, பழமையான முறையை மாற்றியவர் இவர். இவர் கண்டுபிடித்த பெல்ட் முறையால், இவர் மட்டுமல்ல, இந்த பகுதி விவசாயிகளும் பலன் பெற்று வருகின்றனர். படித்தவர் என்பதால் எந்த சீசனுக்கு எதைப் போடலாம், எங்கே நல்ல விலை கிடைக்கும் என்பதை சொல்லியும் கொடுப்பவர். இவர் இலவ மரம் போடலாம் என்று சொன்னபோது சிரித்தவர்கள், இப்போது அது தரும் லாபத்தை பார்த்துவிட்டு, மலை எங்கும் இலவமரம் போட்டு வருகின்றனர்.விவசாய காட்டிற்குள் புகுந்து, விளை நிலங்களை நாசம் பண்ணும் காட்டு விலங்குகளிட மிருந்து பயிர்களைக் காக்க, சூரிய சக்தியிலான மின் வேலி அமைப்பது மட்டு மல்ல, அதை பராமரிப்பதன் அவசியம் குறித்து இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நடுவே பாலமாக இருந்து செயல்படுகிறார்.இவரது காட்டில் மயில் முட்டை போட்டு குஞ்சு பொரிக்கட்டும் என்பதற்காக அந்தப் பகுதியில் விவசாய வேலையையே தொடங் காமல் இருந்தவர்.
தூக்கனாங்குருவி கூடு கட்டும் அழகை இவர் விவரிக்கும் அழகே தனி. காட்டில் உள்ள ஒவ்வொரு பறவைகள் மட்டுமல்ல, வண்டினங் களின் சத்தத்தைக் கூட ரசித்து கேட்க சொல்கிறார்.தன் காட்டை அங்குலம், அங்குலமாக நேசிப்பது மட்டுமல்ல, விருப்பமுள்ளவர்களுக்கு அதைப் பற்றி விலாவாரியாக எடுத்தும் சொல்கிறார். நகரத்து நெரிசலில் இருந்து விடுபட்டு, சுத்தமான காற்று, பன்னீர் போன்ற தண்ணீர், அமைதியான சூழல், பறவைகளின் கீதம், வண்டினங்களின் பல்வேறு வித ஒலி, கிராமத்து மக்களின் கள்ளம் கபடமற்ற வெள்ளந்தியான பேச்சு, 'இன்னும் இரண்டு இளநீர் சாப்பிடு ராசா...' என்ற அந்த அன்பும், பாசமும் நிறைந்த காட்டில் வாழ்வது சந்திரனுக்கு மட்டுமல்ல, சில மணி நேரம் இருந்தால் எல்லாருக் குமே பிடிக்கும்.
***
