PUBLISHED ON : நவ 26, 2023

முக்கூடல், சொக்கலால் ராம்சேட்
பீடி கம்பெனியின் அதிபர், ஹரிராம் சேட். அந்தக் காலத்தில், சிலோன் ரேடியோவில், இவரது, சொக்கலால் பீடி விளம்பரம் அலாதியாய் இருக்கும்.
இவர் முதலில், நடிகர் பி.யூ.சின்னப்பாவின் ரசிகராக தான் இருந்தார். பாகவதரின் ஒரு கச்சேரியை கேட்டார். அவ்வளவு தான், பாகவதரின் பரம ரசிகராக மாறி விட்டார்.
ஸ்ரீராமனுக்கு கிடைத்த அனுமன் போல், பாகவதருக்கு அவர் அமைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவர், பாகவதர் மேல் கொண்ட பற்றும், பாசமும், பக்தியும் அளவிட முடியாது. அதுபோன்றே, பாகவதரும், அவரை தன் மகன் போன்றே பாவித்தார்.
தனக்கு உதவுவதாக சொல்லி, யார் வந்தாலும் மறுத்த பாகவதர், சேட்டின் விஷயத்தில் மட்டும் மறுக்கவே முடியவில்லை. அப்படிப்பட்டதோர் பரிசுத்த அன்பை, பாகவதர் மேல் பொழிந்தார், ஹரிராம் சேட்.
பாகவதரின், பவளக்கொடி படம் வெளியான, 1934ல் தான், ஹரிராம் சேட் பிறந்தார்.
பாகவதரின், ராஜமுக்தி படம், 1948ல் வெளியானபோது, 14 வயதான ஹரிராம், தன், 20 கார்களில், நண்பர்கள் புடைசூழ, கோயம்புத்துார் சென்று, அப்படத்தை பார்த்துள்ளார்.
ஒருமுறை, நெல்லை சங்கீத சபாவில், கச்சேரி நடத்தினார், பாகவதர். அங்கு, பாகவதரை சந்தித்து, 'என் சொந்த ஊருக்கு வந்து, எங்கள் அனைவரையும் தாங்கள் கவுரவிக்க வேண்டும்...' என்று, அவரிடம் வேண்டுகோள் வைத்தார், ஹரிராம் சேட்.
இவரது பாசத்தையும், பக்தியையும் கண்ட பாகவதருக்கு, மறுப்பு சொல்ல முடியவில்லை. அவரும் சென்றார்.
முக்கூடல் கிராமமே திரண்டு வந்திருந்தது. அனைவருக்கும், இந்திரலோகத்தின் விருந்து போல், 60க்கும் மேற்பட்ட பதார்த்தங்கள் செய்து பரிமாறப்பட்டது.
அப்போது, பாகவதரிடம், 'ராஜமுக்தி படம் எடுத்ததில், தங்களுக்கு, 2 லட்சம் ரூபாய் நஷ்டம் என்று கேள்விப்பட்டேன். அந்த கடனை நான் அடைக்க அனுமதி தரவேண்டும்...' என்று கேட்டார், ஹரிராம் சேட்.
'நஷ்டம் எல்லாம் ஒன்றுமில்லை. அப்படியே இருந்தாலும், அதை நான் தான் அடைக்க வேண்டும்...' என்று, சொல்லி மறுத்து விட்டார், பாகவதர்.
பாகவதரை சங்கீத குருவாக ஏற்று, தகுந்த குருதட்சணை தந்து, அவரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டார், ஹரிராம் சேட். அதுமட்டுமல்ல, பாகவதரோடு சேர்ந்து, ஏராளமான கச்சேரிகளையும் நடத்தியுள்ளார்.
தன் உத்தம சீடனின் திறமையை கண்டு மகிழ்ந்த பாகவதர், 'இன்னிசை இளவரசு' என்ற பட்டத்தை, ஹரிராம் சேட்டிற்கு வழங்கினார். எத்தனையோ பெரிய மனிதர்கள் உதவி செய்ய முன் வந்தபோதும், அவைகளை மறுத்த பாகவதர், ஹரிராம் சேட்டின் அன்பிற்கு கட்டுப்பட்டார்.
ஜப்பானுக்கு அழைத்துச் சென்று, பாகவதருக்கு, நவீன கண் வைத்தியம் செய்துள்ளார், ஹரிராம். அதுமட்டுமின்றி, 'செவர்லே' கார் ஒன்றை பரிசாக தந்தார். மேலும், 'பிரதி மாதமும், நான், தங்களுக்கு குருதட்சணை தருவேன்...' என்று சொல்லி, ஒவ்வொரு மாதமும், சரியாக, 1ம் தேதி, 'டிமாண்ட் டிராப்ட்' அனுப்பி விடுவார், ஹரிராம்.
பாகவதருக்காக, சகல வசதிகளுடன் கூடிய பங்களாவை, முக்கூடலில் கட்டினார். அதற்கு, 'ஏழிசை மாளிகை' என்றும் பெயர் சூட்டினார். 'நான், உங்களுக்காக கட்டியுள்ள பங்களாவில், நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும்...' என்று வேண்டினார், சேட். ஆனால், அன்புடன் மறுத்து விட்டார், பாகவதர்.
பாகவதருக்கு, இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர் மேல், அன்பும், மரியாதையும் உண்டு. தமிழிசையை பரப்புவதில், தேசிகரோடு சேர்ந்து பணியாற்றியவர், பாகவதர்.
அந்த காலத்தில், சினிமா பாடல்களை, 'ரிகார்டு பிளேயர்'களாக வெளியிடுவர். சிவகவி படத்தில், ஒரேயொரு பாடலை மட்டும், 'ரிகார்டு' ஆக வெளியிட மறுத்து விட்டார், பாகவதர்.
அது என்ன பாட்டு தெரியுமா?
'மனம் கனிந்தே சிவதானம்' என்ற பாடல்.ஏனென்றால், அதே ராகத்தில், ஜகஜ்ஜனனி என்ற பாடலை, தேசிகர் பாடி, ரிகார்டு விற்பனை சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது.
தன்னுடைய பாடலால், அவருடைய பாடல், 'ரிக்கார்டின்' விற்பனையில் குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணம் தான் காரணம்.
பாகவதரும், அண்ணாதுரையும் நல்ல நண்பர்கள். அண்ணாதுரை எப்போது திருச்சிக்கு வந்தாலும், பாகவதரை சந்திக்காமல் செல்ல மாட்டார். அதுபோன்றே, பாகவதரும், சென்னை வரும் போதெல்லாம், அண்ணாதுரையை சந்தித்து, அளவளாவுவது வழக்கம்.
பாகவதரின் கந்தர்வ கானத்தில் மயங்கியவர், அண்ணாதுரை என்றால், அண்ணாதுரையின் அடுக்குமொழி நடையழகால் மனம் ஈர்க்கப்பட்டவர், பாகவதர்.
ஒரு சந்திப்பின்போது, பாகவதரிடம், 'உங்களுக்காகவே ஒரு நாடகம் எழுதியுள்ளேன். அதை, நீங்கள் ஏற்று நடித்தால், உங்களால் எனக்கு பெருமை சேரும்...' என்று சிரித்தபடியே சொன்னார், அண்ணாதுரை.
மகிழ்வோடு சம்மதித்து, 'நாடகத்தை படித்துப் பார்க்கிறேன்...' என்று சொன்னார், பாகவதர்.
நாடக புத்தகம், பாகவதரிடம் தரப்பட்டது. படித்துப் பார்த்த பாகவதர், என்ன சொன்னார் தெரியுமா?
தமிழகத்திற்கு நேரு விஜயம் செய்தபோது, பாகவதர் வீட்டருகே, அவருக்கு, வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை முன்னின்று நடத்தியவர், பாகவதர் தான்.
கூட்டத்திற்கு கேட்க வேண்டுமா, பிரமித்துப் போன நேருஜி, காமராஜரிடம், 'காந்திஜிக்கு பிறகு, இப்படியோர் கூட்டத்தை கூட்டுகிற வல்லமை, இந்த மனிதருக்கு தான் உள்ளது.
'நீங்கள், பாகவதரிடம் பேசி, காங்கிரஸ் கட்சியில் இணைத்து விடுங்கள். அவருக்கு, நாம் நல்ல பொறுப்பை தருவோம். தென்னகத்தில், காங்கிரஸ் பலமாக வேரூன்றி நிற்கும்...' என்றார்.
பாகவதரிடம் விஷயத்தை சொன்னார், காமராஜர்.
'ஐயா, அரசியலுக்கும், எனக்கும் காத துாரம். எனவே, என்னை மன்னித்து விடுங்கள்...' என்று, பெரிய கும்பிடு போட்டார், பாகவதர்.
-தொடரும்.
- கார்முகிலோன்
