தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அறிந்தும் அறியாமலும்!

அறிந்தும் அறியாமலும்!

அறிந்தும் அறியாமலும்!


PUBLISHED ON : செப் 22, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டெக்கி, என்ற 25 வயது இளைஞன், பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை' என்ற, பரபரப்பான செய்தி, தமிழகத்தின் எல்லா பத்திரிகைகளிலும் வெளியாகி இருந்தது. அந்தப் பையன், அந்த துயரச் செய்தியின் மத்தியில், புகைப்படத்தில், புன்னகை செய்து கொண்டிருந்தான். நல்ல களையான முகம். தற்கொலை செய்து கொள்ளும், கோழையின் முகமாக தோன்றவில்லை. ஆயினும், நடந்தது என்னவோ நிஜம். சமீபத்தில், அவன் தாய், இறந்து போனதாகவும், வயதான தந்தை மட்டும் இருப்பதாகவும், திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அவன் தற்கோலைக்கு காரணம் காதல் தோல்வியா, அவன் விருப்பப்படி வாழ்க்கை அமையவில்லை என்ற விரக்தியா, தாயை இழந்த சோகமா, இல்லை வேலைப் பளு அதிகமானதாலா, தந்தையுடன் ஏதாவது பனிப்போரா என்று ஏகப்பட்ட கேள்விகள், விளக்கங்களை எதிர்பார்த்து விவாதிக்கப்பட்டிருந்தன. வயதான தந்தை, அவன் உடலை பார்த்து, கதறி அழுத காட்சி, நெஞ்சை உலுக்குவதாக இருந்தது என்றும், பத்திரிகைகள் எழுதியிருந்தன.

இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்...

அது பிரபல மனநல மருத்துவமனை. 'ஷ்...ஷ்...' என்று, ஒரு குழந்தை, வாயில் விரல் வைத்து, 'சத்தம் போடாமல் இருங்கள்' என்று, மிரட்டும் படம் மட்டுமே, நோயாளிகள் அமரும் வரவேற்பு அறையில் இருந்தது.

அந்த, 'கன்சல்டேஷன்' அறையில், இதமான ஒரு வாசம், அறை முழுவதும் பரவியிருந்தது. அவர், சென்னையில் பிரபலமான மனநல மருத்துவர். ஒரு நாளைக்கு ஐந்து பேருக்கு தான், 'கவுன்சிலிங்' செய்ய, நேரம் ஒதுக்குவார்.

அன்று, அந்த அறையில் அமர்ந்திருந்த ஐந்து பேர்களில், ஒருவர் மட்டுமே, 50 வயது மதிக்கத்தக்கவர். மற்ற நான்கு பேரில், மூன்று பேர் இளைஞர்கள். ஒருவர், 40 வயது பெண்மணி.

அந்த, 50 வயது மதிக்கத்தக்கவர், பார்க்க மிகவும் கண்ணியமாகவும், நல்ல வேலையில் இருப்பவர் போல தோன்றினார். ஆனால், அவரது முகத்தில், மிதமிஞ்சிய சோகம் படர்ந்திருந்தது. எதையோ இழந்தவர் போல, அவர் பார்வை, யார் மீதும், எதன் மீதும் பதியாமல், எங்கோ கண்ணுக்குப் புலப்படாத, ஒரு சூனியத்தை வெறிப்பது போல தோன்றியது.

டாக்டரின் அறையிலிருந்து, ஒரு தம்பதியர் வெளியேறிய பின், 'ரிசப்னிஸ்ட்' அந்தப் பெரியவரிடம் சென்று, 'டாக்டர் சபேசன், நீங்கள் போகலாம்...' என்றாள்.

'டாக்டர் சபேசன்' என்று, அழைக்கப்பட்ட அவர், எழுந்து உள்ளே சென்றார்.

'குட் ஈவ்னிங் டாக்டர்... ஐ'ம் டாக்டர் சபேசன். யுனிவர்சிடியில் புரொபசராக இருக்கிறேன்...' என்று, தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

டாக்டர் பிரேம்நாத் மனநல மருத்துவர். நாற்பது வயது மதிக்கத்தக்க தோற்றம். பார்த்தவுடனேயே நம்பிக்கை தரும் அழகான முகம்.

'ப்ளீஸ் உட்காருங்கள்... உங்கள் சப்ஜெக்ட் என்ன...' என்றார்.

'நான், கெமிகல் இன்ஜினியரிங் படிச்சு, டாக்டரேட் முடிச்சது, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பர்தூ யுனிவர்சிட்டியில்...' என்றார் சபேசன். அதைச் சொல்லும் போது, அவர் குரலில் பெருமை தொனித்தது.

'இதுவரை, நூறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். பத்து ஆராய்ச்சி மாணவர்கள், என்னிடம் பயின்று, டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். இப்போது கூட, மூன்று மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்...' இவ்வாறு தொடர்ந்த உரையாடல், பொதுவாக நகர்ந்தது.

பிரேம்நாத் எந்த நிலையிலும், 'உங்கள் பிரச்னை என்ன?' என்று, கேள்வி எழுப்பவில்லை. மிக நாசூக்காக, உரையாடலை தொடர்ந்த போது, ஒரு இடத்தில் சபேசன் முகம் இருண்டது.

'ஆர் யு, டிஸ்டர்ப்ட் அபவுட் எனி திங்க்... டாக்டர் சபேசன்?' என்றார் பிரேம்நாத்.

'ஆமா டாக்டர்... நான், ஒரு நல்ல அப்பாவாக இல்லையோ என்ற எண்ணம், என் மனதில் அடிக்கடி வந்து அச்சுறுத்துகிறது...' என்றார்.

'ம்... சொல்லுங்கள். எதனால, அப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்...' என்று, மென்மையாக கேட்டார் டாக்டர் பிரேம்நாத்.

'என் மனைவி, இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து விட்டாள். அன்றிலிருந்து, என் மகன் என்னிடமிருந்து, அடியோடு விலகி விட்டான். இதுநாள் வரை, இவ்விஷயத்தை எவருடனும் நான் விவாதித்ததில்லை. ஆனால், கடந்த ஒரு வாரமாக, இதை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று, தோன்றிக் கொண்டே இருந்தது. அதனால் தான், உங்களை போன்ற ஒருவரிடம், மனம் விட்டுப் பேசினால், தீர்வு கிடைக்கலாமோ என்று எண்ணி, வந்தேன்...'

'உங்கள் மகன் பெயர் என்ன, என்ன செய்கிறார்?'

'அவன் பெயர் திலீபன். இருபத்தி ஐந்து வயதாகிறது. நல்ல பையன் தான்... ஆனால், ரொம்ப, 'மூடி' டைப். அதிகம் பேச மாட்டான்; ஐ.டி., கம்பெனியில் வேலை செய்கிறான்...'

'ம்... சொல்லுங்கள். நீங்கள் எப்போதுமே அதாவது, சின்ன வயதிலிருந்தே அவனிடமிருந்து விலகி இருந்தீர்களா அல்லது பையனுக்கு பதினேழு, பதினெட்டு வயதுக்கு பிறகா...' என்றார் பிரேம்நாத்.

'கிட்டத்தட்ட, எங்களுக்கு இனி குழந்தைகள் இல்லை என்ற முடிவுக்கு வந்த நிலையில், எங்கள் வாழ்க்கையில் வந்தவன் திலீபன். ஆனால், ரொம்பவும் அமைதியானவன். விஷமங்கள் செய்ய மாட்டான். என் மனைவிக்கு, அவன் மீது உயிர்; அவனும் அப்படித்தான். என்னிடம் அவ்வளவாக ஒட்ட மாட்டான். எனக்கும், குழந்தைகளிடம், அந்த அளவுக்கு நெருங்கத் தெரியாது.

'பள்ளி நாட்களிலிருந்தே, திலீபனுக்கு பாடத்தை விட, பாட்டு, நடனம், இவற்றில் ஆர்வம் அதிகம். அதை என்னால் சகித்துக் கொள்ள முடிய வில்லை. அந்த சின்ன வயதிலேயே, கேள்வி ஞானத்தில் நன்றாகப் பாடுவான்; பள்ளியில் நடக்கும், நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவான்; பரிசுகள் கூட வாங்கி இருக்கிறான். இவையெல்லாம், என் மனைவிக்கு பெருமையாக இருந்ததே தவிர, எனக்கு இல்லை...'

'ஏன்... அப்படி ஒரு எண்ணம்...'

'நான், மிகவும் படித்த குடும்பத்திலிருந்து வந்தவன். எங்கள் குடும்பத்தில், யாருக்கும் இந்த மாதிரி கலைகளில் ஈடுபாடு கிடையாது. இன்னும் சொல்லப் போனால், என் அப்பா, பாட்டு, நடனம் போன்றவற்றை வேலையற்ற ஆடம்பர செயல் என்றே கருதுவார். அதே போல், நாங்கள் எல்லாருமே படித்து, அகாடெமிக்காக சிறப்பு பெற வேண்டும் என்றே அவர் விரும்பினார். நானும், என் சகோதரர்களும் அதே மாதிரி தான் ஆனோம். எனக்காவது, புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டு. என் அண்ணன்களுக்கு அதுகூட இல்லை. ஆனால், நாங்கள் எல்லாருமே டாக்டர் பட்டம் பெற்றவர்கள். என் சகோதரியும், ஒரு டாக்டரேட் தான்...'

'ஓ... அப்படியா!'

'எங்கள் கருத்துப்படி, படிப்பில் சிறந்து விளங்கி, தேர்வுகளில் பாஸ் செய்து, முதல் மார்க் வாங்கி, இன்ஜினியரிங், டாக்டர், அறிவியல் போன்ற துறைகளில் மேம்படுவது தான், வாழ்க்கையில் உண்மையான சாதனை, வெற்றி என்று கருதினோம்...'

' திலீபன் அப்படி இல்லையா?'

'ஆமா. அவனுக்கு, படிப்பு ரொம்ப சுமாராக தான் வந்தது. கணக்கில், மகா மோசம். தோவில் ஜஸ்ட் பாஸ் தான் செய்வான். அவனது பத்து வயதில், முறையாக பாட்டு, நடனம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டான்...'

'ம்... நீங்க சம்மதிக்கவில்லை...'

'ஆமாம்... எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை. 'என்னடா பொம்பள பசங்க மாதிரி பாட்டு, டான்ஸ்ன்னு... ஏதோ கிரிக்கெட், டென்னிஸ், புட்பால் கூடனா பரவாயில்லை. ஆம்பளப் பசங்களுக்கு, இதெல்லாம் எதுக்கு...' என்று தடுத்தேன்...'

'அப்புறம்?'

'அவன் ஒப்புக் கொள்ளவில்லை; பிடிவாதம் அதிகம். இரண்டு நாட்கள் சாப்பிடாமல், அடம் பிடித்தான். நான், அதுவரை அவனைக் கண்டித்திருந்தேனே தவிர, கை நீட்டி அடித்ததில்லை. அப்போது, அடிக்கவும் செய்தேன்...'

'அடடா...'

'ஆனால், அவன் கேட்கவில்லை. கடைசியில் சாரதாவின் கெஞ்சலும், கண்ணீரும், அவன் பிடிவாதமும் ஜெயித்தன. நான், தோற்றுப் போனேன்...'

இந்த இடத்தில் இடைமறித்தார் பிரேம்நாத்...

'நீங்க ஏன் அதை,தோல்வின்னு நினைச்சீங்க? இந்தக் காலத்துல, தங்கள் பசங்கள, ஒவ்வொரு பெற்றோரும், எத்தனை ஆக்டிவிடிசில் ஈடுபடுத்தறாங்க...'

'நான் தான் சொன்னேனே... எனக்கும், என் குடும்பத்துக்கும், படிப்பு தான் முக்கியம் என்று...' எனக் கூறி, பெருமூச்செறிந்தார்.

'அவன் ப்ளஸ்2 முடித்த பின், இன்ஜினியரிங் சேர்க்க முயற்சி செய்தேன். ஆனால், அவனோ கலாஷேத்ரா போன்ற நிறுவனத்தில் சேர்ந்து, பாட்டு, நடனத்தை தொடர விரும்பினான். நான் ஒப்புக் கொள்ளவில்லை. பல சண்டைகளுக்கு பின், காபிடேஷன் பீஸ் கொடுத்து, அவனை ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்தேன்...'

'ம்...படித்து டிகிரி வாங்கினாரா?'

'வாங்கினான். ஆனால், அந்த நான்கு ஆண்டுகளில், அவனுக்கு என் மேல் இருந்த வெறுப்பு, பல மடங்காகப் பெருகிவிட்டது. அதை, என்னால் உணர முடிந்தது...'

'எப்படி?'

'என்னோடு சரியாகப் பேச மாட்டான்; பழக மாட்டான்; வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. அவனுடைய, அப்போதைய நண்பர்கள் வட்டமும், சரியாக இல்லை. அதையெல்லாம், நான் அவ்வளவாக பொருட்படுத்தவில்லை...'

'நீங்கள், அவனுடன் உட்கார்ந்து பேச, முயற்சி எடுக்கவில்லையா?'

சபேசன் தலையசைத்து, 'எங்கள் சிறு வயதில், நாங்கள், எங்கள் அப்பா முன் உட்கார்ந்து, பேச பயப்படுவோம்...' என்றார்.

புன்னகை செய்தார், டாக்டர் பிரேம்நாத்...

'அது அந்தக் காலம், டாக்டர் சபேசன். மகனை தோழனாகப் பாவித்து, பேச வேண்டியது, இந்தக் காலம்...'

பதில் சொல்லவில்லை சபேசன். தொடர்ந்தார் பிரேம்நாத்...

'அப்புறம்?'

'ராத்திரி லேட்டாக வருவான். சிகரெட், குடி போன்ற பழக்கங்கள், அவனைப் பற்றிக் கொண்டன...'

'உங்க மனைவிகிட்டக் கூட நெருக்கம் இல்லையா?'

'இருந்தது... இருந்தாலும், ஓரளவுக்குத் தான். அவன் தன்னை, ஒரு தனித் தீவாக மாற்றிக் கொண்டான். அதிர்ஷ்டவசமாக, அவன் படிப்பை முடித்ததுமே, ஐ.டி.,யில் வேலை கிடைத்து விட்டது. 'கொயட் எ ஸ்மார்ட் பாய்' ரொம்ப சிவப்பு இல்லை. மாநிறந்தான்... பழுப்பு கண்கள், பார்க்க, 'ஹாண்ட்சமா' இருப்பான்...' இந்த இடத்தில், சபேசனின் குரல் இடறியது.

மவுனமாக இருந்தார் பிரேம்நாத்.

'வேலை கிடைத்த மறு வருஷமே, அவனைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினோம். ஆனால், முதலில் மறுத்தான். சாரதாவுக்கு அப்போது, 'ஹார்ட் அட்டாக்' வந்து, அதிலிருந்து தப்பிப் பிழைத்தாள். அதைக் காரணமாகக் காட்டி, அவனை நாங்கள் சம்மதிக்க வைத்தோம்...'

'கல்யாணம் நடந்ததா...'

'இன்னும் இல்லை. திலீபன் வேறொரு பெண்ணைக் காதலிப்பதாக எங்களுக்கு, அவன் நண்பன் மூலம் தகவல் வந்தது. அதனால் தான், அவன் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளான்...'

'ஏன்... நீங்கள் காதலுக்கு எதிரியா?'

சபேசன் சற்று தயங்கி, 'ஆமாம்... எங்கள் குடும்பத்தில், அவை நிகழ்ந்ததில்லை. தவிர, அந்தப் பெண் எங்கள் குலம் அல்ல. அவளை மணம் செய்து வைத்தால், எங்கள் குடும்ப மானம் பாதிக்கப்படும் என்று நினைத்தோம்...'

'அடடே... உங்களைப் போன்ற, நிறைய படித்த வர்கள் மத்தியில் கூடவா... இத்தகைய மனத் தடைகள்...'

தலையைக் குனிந்து கொண்டார் சபேசன் .

'சில எழுதப்படாத கட்டுப்பாடுகள், எல்லா சமூகத்திலும் உள்ளது டாக்டர். எங்களுக்கு, அவன் போக்கு, அறவே பிடிக்கவில்லை. அவன், கல்யாணத்திற்கு சம்மதித்தது கூட கட்டாயத்தினால் தான்...'

'ம்... மேலே சொல்லுங்கள்...'

'திடீரென்று... ஒருநாள் என்னிடம் வந்து, 'உங்கள் இஷ்டப்படி கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்றால், சொத்தைப் பிரித்துத் தரவேண்டும்...' என்று, தகராறு செய்ய ஆரம்பித்தான்...'

'ம்...'

'அவனுக்கு, என் மேல் உள்ள எதிர்ப்பையும், வெறுப்பையும் காட்டத்தான், இப்படி நடந்து கொண்டான் என்று தோன்றியது...'

'அதனால், நீங்கள் என்ன செய்தீர்கள்?'

'அந்த விஷயம் பெரிய வாக்குவாதத்தில் முடிந்தது. அர்த்த ராத்திரியில், 'நான் செத்தால் தான் உங்களுக்கு என் அருமை புரியும்' என்று கத்திவிட்டு, பைக்கை எடுத்து வெளியே போனான். குடித்து விட்டு வண்டி ஓட்டியதால், ஆக்சிடெண்டில் முடிந்தது...'

'அடடா... அவனுக்கு என்ன ஆயிற்று...'

'அவனுக்கு, ஒன்றும் ஆகல்லை. சிறு காயங்கள் தான். சாலையில் சென்ற, ஒரு பெரியவரின் மேல் மோதி, அவர் கால், 'ப்ராக்சர்' ஆகிவிட்டது. நான் தான், அவனை மீட்டு, அந்தப் பெரியவரின் வைத்தியத்திற்குப் பணம் கொடுத்துவிட்டு வந்தேன்...'

'இப்போது சமாதானம் ஆகிவிட்டாரா திலீபன் ?'

'தெரியவில்லை. அவன் கோபத்தையும், வார்த்தைகளையும் கண்டு, திருமணத்தை தற்சமயத்திற்கு நிறுத்தி வைத்துள்ளேன். ஆனால், என் மனைவி, இரண்டு மாதம் முன், திடீரென்று இரண்டாவது, 'அட்டாக்'கில் இறந்து விட்டாள்...'

இப்போது, சபேசன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக ஆரம்பித்தது. டாக்டர் பிரேம்நாத், ஒரு கிளாஸ் தண்ணீரை சபேசன் முன் வைத்து, 'கூல்... தண்ணீர் குடியுங்கள்...' என்றார்.

'ஐ ம் சாரி...' என்று, கண்களைத் துடைத்துக் கொண்டவர், 'மனைவியை இழந்த எனக்கு, என் மகனையும் இழந்து விடுவேனோ என்று, பயமாக இருக்கிறது டாக்டர். நான், என் கடமையில் தவறி விட்டேன் என்று, உங்களுக்கும் தோன்றுகிறதா?' என்று கேட்டார் சோகத்துடன்.

சிறிது மவுனத்திற்கு பின், டாக்டர் பிரேம்நாத் பேசினார்...

'கடமை, உரிமை என்றெல்லாம், நான் விவாதிக்க விரும்பவில்லை. ஒரு பிரச்னையை நீங்களும், உங்கள் மகன் திலீபனும், அவரவர் கோணத்தில் அணுகி இருக்கிறீர்கள். மற்றவரின் மனசையோ, ஆசையையோ, திறமைகளையோ கவனிக்க தவறி இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது...'

கொஞ்சம் யோசனைக்குப் பின், பதிலளித்தார் சபேசன்...

'இருக்கலாம்... நீங்கள் சொல்வது, ஒரு வகையில் உண்மை தான்...'

'இன்னொரு கேள்வி... திலீபனுக்கு இசை, நடனம் இவற்றில் எதனால், அத்தனை ஆர்வம், உண்டானது?'

'தெரியவில்லை... ஏன் கேட்கிறீர்கள்?'

'இல்லை... பொதுவாக இதுபோன்ற கலைகளில், அதிகமான ஆர்வம், நூற்றில், ஒருவருக்குத் தான் ஏற்படும் அல்லது அவர்கள் குடும்பத்தில் யாராவது அந்தத் திறமை உள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்...'

சற்று திடுக்கிட்டு சபேசன், 'திரும்பச் சொல்லுங்கள்' என்றார்.

டாக்டர் திரும்பச் சொன்னார்.

'உங்கள் அல்லது உங்கள் மனைவியின் குடும்பத்தில் அதாவது, ஜீன் என்பார்களே...'

சில நிமிடங்கள், பேச்சற்று அமர்ந்திருந்தார் சபேசன்.

'இருக்கலாம்...'

'அப்படி யாராவது உங்கள் நினைவுக்கு வருகின்றனரா?'

தலையசைத்தார் சபேசன்.

'என்னுடைய சாரதாவின் குடும்பங்களில் எவருமில்லை... ஆனால், அவனுக்கு இருந்திருக்கலாம்...'

'அது எப்படி?'

'திலீபன் எனக்கும், சாரதாவுக்கும் பிறந்த பிள்ளையில்லை. இனி, எங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த பின், அனாதை ஆசிரமத்திலிருந்து எடுத்து வந்து வளர்த்த பிள்ளை. அவன் பூர்வீகம் எங்களுக்குத் தெரியாது...'

மெதுவாகப் பேசினார் பிரேம்நாத்...

'இவ்வளவு படித்த உங்களுக்கு, இந்தச் சின்ன விஷயம் ஏன் கவனத்திற்கு வரவில்லை. 'லாடரல் திங்கிங்' வித்தியாசமான சிந்தனை, அறிவியலில் ஆராய்ச்சி படிப்பு படித்த, உங்கள் மனசுக்குத் தோன்றியிருக்க வேண்டுமே... நீங்கள் கொண்டு வந்தது, ஒரு ஜடப்பொருள் அல்ல. அறிவு, திறமை, தனக்கென்று, ஒரு தனித் தன்மை உள்ள ஒரு மனித உயிர்...

'இப்போதும் ஒன்றும் குடி முழுகி விடவில்லை. திலீபனை அழைத்து, அன்புடன் உரையாடுங்கள். அவன், வாழ்க்கையில் என்ன செய்து, பெயர் பெற நினைக்கிறான் என்று கேளுங்கள். அவன் விருப்பத்திற்கு எதிரான பெண்ணை கல்யாணம் செய்து வைத்து, அவனுக்கு விருப்பமில்லாத வாழ்க்கையில் தள்ளாதீர்கள். தொடர்ந்து வரும் தோல்விகள், ஒரு இளைஞனை மாற்றவும் கூடும்; வீழ்த்தவும் கூடும். அவன் உங்களை, மிரட்டும் ஆயுதமாக பயன்படுத்தும் தற்கொலைக்கு, நிஜமாகவே தூண்டி விடாதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்குத் தான்; வீழ்வதற்கு அல்ல...'

'நல்லது டாக்டர்... நிலமை மிகவும் மோசமாவதற்கு முன், நான் திலீபனிடம் மனம் விட்டுப் பேசுகிறேன். என் பிடிவாதங்களை தளர்த்திக் கொள்கிறேன்...'

'நல்லது... குட்லக். அடுத்த முறை வரும்போது, உங்கள் மகன் திலீபனையும் உடன் அழைத்து வாருங்கள்...' என்று, விடை கொடுத்தார் பிரேம்நாத்.

ஒரு மாதம் சென்றதும், பிரேம்நாத் கிளீனிக்குக்கு, சபேசன், தன்னுடன் திலீபனையும், அவன் காதலிக்கும் பெண் நளினியையும் அழைத்து வந்தார். மூவரின் முகத்திலும் மகிழ்ச்சியும், நிறைவும் தென்பட்டது.

அது சரி, கதையின் ஆரம்பத்தில் படித்த செய்தி என்ன என்கிறீர்களா...

அது வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ தவறிய அல்லது தவறிழைக்கப்பட்ட, வேறொரு இருபத்து ஐந்து வயது இளைஞன்.

***

ஜி. சுவாமிநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us