PUBLISHED ON : ஆக 09, 2020

பொட்டுக்கடலை உருண்டை!
தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை, பாகு வெல்லம் பொடித்தது - தலா, 200 கிராம். ஏலக்காய் துாள் சிறிதளவு.
செய்முறை: பொட்டுக்கடலையை லேசாக சூடுபடுத்தி கொள்ளவும். வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து, லேசாக கொதிக்க விட்டு வடிகட்டவும். பின்னர், அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி, சிறிது தண்ணீரில் போட்டு பார்க்கவும். நன்கு உருட்ட வரும் பதத்தில் பாகு இருக்க வேண்டும்.
அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலையை போட்டு, சிறிதளவு ஏலக்காய் துாள் சேர்த்து, வெல்லப்பாகை ஊற்றி கலந்து கொள்ளவும். பின்னர், சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
முள்ளு முறுக்கு!
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 50 கிராம், கடலை மாவு - 200 கிராம், வெண்ணெய் - எலுமிச்சை அளவு, சீரகம் ஒரு தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: நான்கு பங்கு கடலை மாவுக்கு, ஒரு பங்கு அரிசி மாவு சேர்த்து, அதனுடன், உப்பு, சீரகம், வெண்ணெய், சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
இந்த மாவை, முள் முறுக்கு அச்சுள்ள நாழியில் நிரப்பி சூடான எண்ணெயில் முறுக்குகளாக பிழியவும். இருபுறமும் நன்றாக திருப்பி விட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
பால் கோவா!
தேவையான பொருட்கள்: பால் - 1 லிட்டர், சர்க்கரை - 150 கிராம்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கிளறிக் கொண்டே இருக்கவும். 250 மி.லி., அளவுக்கு பால் சுண்டி கெட்டியானதும், சர்க்கரையை சேர்த்து, கோவா பதம் வரும் வரை கெட்டியாக கிளறி இறக்கவும்.
நெய் அப்பம்!
தேவையான பொருட்கள்: கோதுமை, பொடித்த வெல்லம் - தலா 100 கிராம், பச்சரிசி, தேங்காய் துருவல் - தலா 2 தேக்கரண்டி, நெய் - 100 கிராம், ஏலக்காய் துாள் சிறிதளவு.
செய்முறை: கோதுமையுடன் பச்சரிசியை சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து மிக்சியில் போடவும். இதனுடன் வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். பின்னர், ஏலக்காய் துாள் கலந்து கொள்ளவும்.
அடுப்பில் பணியார கல்லை வைத்து, எல்லா குழிகளிலும் சிறிதளவு நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பின்னர், ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும், மறு பக்கத்தை திருப்பி போடவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். நெய் மணத்துடன் ருசியாக இருக்கும்.