sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

லாராவின் கருணை உள்ளம்; அது கடவுள் வாழும் இல்லம்!

/

லாராவின் கருணை உள்ளம்; அது கடவுள் வாழும் இல்லம்!

லாராவின் கருணை உள்ளம்; அது கடவுள் வாழும் இல்லம்!

லாராவின் கருணை உள்ளம்; அது கடவுள் வாழும் இல்லம்!


PUBLISHED ON : டிச 01, 2013

Google News

PUBLISHED ON : டிச 01, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குற்றாலம் பக்கம் உள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கம்-

கழுத்திற்கு கீழுள்ள உறுப்புகள் செயல்படாத ராமகிருஷ்ணன், சங்கரராமன் போன்றோரை தலைவராகவும்,செயலாளராகவும் கொண்டு செயல்பட்டுவரும் இந்த சங்கம், உடல் ஊனமுற்றோரை முன்னேற்றும் மையமாக உள்ளது.

இந்த மையத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் ஊனமுற்ற நிலையில் உள்ள பல்வேறு வயதினரும், அவரவர் உடல் குறைபாட்டிற்கு ஏற்ப, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு, முதுகு தண்டு பாதிப்படைந்தவர் களுக்காக சிறப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது. மரம் ஏறும் போதும், கட்டட வேலை செய்யும் போதும் தவறி விழுந்த தொழிலாளர்கள் தான், பெரும்பாலும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.

முதுகுத் தண்டு பாதிப்படைந்தவர்களால், படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது. சிறுநீர், மலம் வெளியேறும் உணர்வே இல்லாமல் இருப்பர். இக்காரியங்களை செய்ய மற்றவர் துணை வேண்டும். கொசு கடித்தால் கூட பார்த்துக் கொண்டு இருக்க முடியுமே தவிர, அடிக்க முடியாது; யாரையாவது கூப்பிட்டுதான் அடிக்க சொல்ல வேண்டும்.

இதற்கு, நீண்ட கால சிகிச்சை தேவை. கொஞ்சம் சோர்ந்து போனாலும், படுக்கை புண் ஏற்பட்டு மரணம் வரை, கொண்டு போய் விட்டுவிடும். இதனால், பெரும்பாலோர் இறந்து விடுவதே மேல் என்று, எண்ணுவர். அந்த அளவிற்கு, நோயின் தன்மை இருக்கும்.

இவர்களுக்கு சிகிச்சை வழங்க, தேவையான சிகிச்சை மையங்களும், மிகக்குறைவாகவே உள்ளன. தவிர, மிகவும் செலவும் ஆகும். இந்நிலையில், முதுகு தண்டு வட சிகிச்சையை, சிறப்பான முறையில் இலவச சேவையாக செய்கிறது அமர் சேவா சங்கம்.

இதைக்கேள்விப்பட்டு, கடந்த வாரம், நேரில் போய் பார்த்த போது, அந்த சிகிச்சை மையத்தில், இளைஞர்கள் சிலர், வேரறுந்த மரம் போல கிடந்ததை பார்க்க, மிகப் பரிதாபமாக இருந்தது.

கண்களையும், கழுத்தையும் அசைத்து அசைத்து, தங்களுக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவங்களை, பகிர்ந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம். கால், கை, பாதம், விரல்கள் நீவி, மெலிதாக மடக்கி நீட்ட வேண்டும்.

'யார் இதைச் செய்யப் போகிறார்' என்று எண்ணியிருந்த போது தான், தென்றல் போல, ஒரு வெளிநாட்டு பெண் உள்ளே வந்தார்.

அவர் பெயர் லாரா; லண்டனைச் சேர்ந்தவர். அங்குள்ள பிரபலமான மருத்துவமனையில், சீனியர் பிசியோதெரபிஸ்டாக உள்ளார். இணையதளத்தில், அமர் சேவா சங்கம் பற்றி கேள்விப்பட்டு, இங்குள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை செய்வதற்காக, தன், சொந்த செலவில், அடிக்கடி வந்து செல்கிறார்.

இளம் வயது, கை, கழுத்து, விரல் என்று எந்தவிதமான அணிகலன்களும் இல்லாத எளிமையான தோற்றத்துடன் காணப்பட்ட லாரா, வளாகத்தில் உள்ள சாதாரண விருந்தினர் விடுதியில் தங்கி, பொது சாப்பாட்டை சாப்பிட்டு, கருணை உள்ளத்துடன் நோயாளிகளுக்கு சேவை செய்து வரும் இவர், நோயாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், தட்டுத்தடுமாறி, தனக்கு தெரிந்த தமிழிலேயே பேசுகிறார்.

அவர் பேசுவது, சில இடங்களில் புரியாவிட்டாலும், அவரது கண்களிலும், முகத்திலும் கொப்பளிக்கும் அன்பு மொழி அனைவருக்கும் புரிகிறது.

எந்தவித கூச்சமும், தயக்கமும் இல்லாமல், சொந்த சகோதரனின் காலை பிடிப்பது போல, சிகிச்சை அளித்து கை, கால்களை பிடித்து, பயிற்சி கொடுப்பதை பார்க்கும் போது, நெஞ்சம் நெகிழ்ந்தது.

சிரித்த முகத்துடன், ஒவ்வொரு நோயாளிகளிடமும், அவரவர் நோய் தன்மைக்கு ஏற்ப, சிகிச்சை அளித்து கிளம்பும் போது, இரண்டு மணி நேரத்திற்கு மேலாகி விடுகிறது. இது போல, அதிகாலை மற்றும் மாலை வேளையிலும், தேவைப்பட்டால், மதியமும் பயிற்சி தருகிறார். இவர் தரும் பயிற்சி, பெரிதும் பயன்படுவதாக, இங்குள்ளோர் நன்றி யோடு குறிப்பிடுகின்றனர்.

ஆனால், நன்றியைக் கூட எதிர் பார்க்காமல், தான் சார்ந்த மனித சமூகத்திற்கு, தனக்கு தெரிந்ததை செய்வதை, ஒரு கடமையாகவே கருதும் இவர், தன் பெயரை சொல்லக் கூட முதலில் தயங்கினார்.

'நான், இந்த ஏழை எளியவர்களுக்கு சிகிச்சை செய்வதை, பெருமையாக நினைக்கிறேன்.லண்டனில், ஆறு மாதம் மருத்துவமனையில் வேலை பார்த்து, இந்தியா வந்து செல்லும் செலவிற்கு பணத்தை தயார் செய்து கொண்டதும், என் குடும்பத்தினர் அனுமதியோடு, இங்கு வந்து செல்கிறேன்.

'இவர்களுக்கு சேவை செய்யும் அளவுக்கு நான், நல்லபடியாக இருக்கிறேன் என்றால், அதற்கு, இறைவனின் கருணைதான் காரணம்.இதை தொண்டு என்ற பெரிய வார்த்தைக்குள் அடக்க விரும்பவில்லை...' என்கிறார்.

வெளிநாட்டு பயணங்கள் உல்லாசத்திற்கே என்றாகிப் போன இக்காலத்தில், அது, தொண்டு செய்வதற்கே என்று நினைத்து, இந்தியா வந்து போகும் நல்ல உள்ளம் கொண்ட, லாராவை மனதார வாழ்த்துவோம்.

-எல்.இனியா






      Dinamalar
      Follow us