PUBLISHED ON : ஜூன் 29, 2025

ஜூலை 1 - தேசிய அஞ்சல் ஊழியர்கள் தினம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1 அன்று, தேசிய அஞ்சல் ஊழியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், நாட்டின் அஞ்சல் சேவையில் அயராது உழைக்கும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பையும், மக்களின் வாழ்க்கையை இணைக்கும் அவர்களின் பங்களிப்பையும் பாராட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை, உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்புகளில் ஒன்றாக, கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை கடிதங்கள், பொதிகள், பண ஆணைகள் மற்றும் மின்னணு சேவைகளை வழங்கி, மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. அவர்கள் கடினமான சூழல்களிலும், தொலைதுாரப் பகுதிகளிலும் தங்கள் கடமைகளை ஆற்றுகின்றனர்.
அஞ்சல் ஊழியர்கள் தினம், இந்திய அஞ்சல் துறையின் வரலாற்றையும், அதன் ஊழியர்களின் தியாகத்தையும் நினைவு கூர்கிறது.
கடந்த, 1854ல், இந்தியாவில், நவீன தபால் அமைப்பு துவங்கப்பட்டது, இதன் மூலம் மக்களுக்கு தகவல் பரிமாற்றம் எளிதாகியது. இன்று, அஞ்சல் ஊழியர்கள், கடிதங்களை வினியோகிப்பது மட்டுமின்றி, வங்கி சேவைகள், ஆதார் புதுப்பித்தல் மற்றும் அரசு திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
கிராமப்புறங்களில், மக்களின் நம்பிக்கையான இணைப்பாக விளங்குகின்றனர், தபால் ஊழியர்கள். பலருக்கு அரசு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உதவுகின்றனர்.
இந்த நாளில், நாடு முழுவதும் பல்வேறு வகையில் கொண்டாட்டங்கள் நடைபெறும். தபால் அலுவலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதில், ஊழியர்களுக்கு பாராட்டு விழாக்கள், விருது வழங்கல் நிகழ்வுகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மூத்த அஞ்சல் ஊழியர்களின் சேவைகள் கவுரவிக்கப்பட்டு, அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்படும். சில இடங்களில், அஞ்சல் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதங்கள் எழுதி, அவர்களின் பணியை பாராட்டுகின்றனர், பொதுமக்கள்.
பள்ளிகளில் மாணவர்கள், அஞ்சல் துறையின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும், ஓவியப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்த நாள், அஞ்சல் ஊழியர்களின் அர்ப்பணிப்பை மட்டுமல்லாமல், இந்தியாவின் பன்முகத்தன்மையை இணைக்கும் அஞ்சல் துறையின் பங்களிப்பையும் வெளிச்சமிடுகிறது.
மழை, வெயில் மற்றும் பனி என, எந்த சூழலிலும் தங்கள் கடமையை செய்யும் இவர்களின் உழைப்பு, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தொடர்பை ஏற்படுத்துகிறது.
இந்த தினம், அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களின் பணியை மதிக்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இந்தியாவில், 2023ம் ஆண்டின் கணக்குப்படி, ஒரு லட்சத்து, 55 ஆயிரத்து, 531 அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும், 10 ஆயிரத்து, 264 அஞ்சல் நிலையங்கள் உள்ளன.
அஞ்சல் நிலையங்களில், 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், 2.50 லட்சம் நிரந்தர ஊழியர்களும், 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான கிராம அஞ்சல் சேவகர்களும் அடங்குவர்.
கடந்த, 1911ல், உலகின் முதல் விமான அஞ்சல், இந்தியாவில் துவங்கியது. ஹிமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிமில், 15 ஆயிரத்து 500 அடி உயரத்தில், உலகின் மிக உயரமான அஞ்சல் நிலையம் உள்ளது.
ஸ்ரீநகரின் டால் ஏரியில், மிதக்கும் அஞ்சல் நிலையம், 2011ல் துவங்கப்பட்டது. 1983ல், அண்டார்டிகாவில், 'தக்ஷிண கங்கோத்ரி' அஞ்சல் நிலையம் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எம். முகுந்த்