sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இணைவோம் புரிந்துகொள்வோம்!

இணைவோம் புரிந்துகொள்வோம்!

இணைவோம் புரிந்துகொள்வோம்!


PUBLISHED ON : ஜூலை 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''நாளைக்கு கல்யாணத்துக்கு கோயம்புத்துார் போகணும். வித்யா வர்றாளா, இல்லை, வருணை கூட்டிக்கிட்டு நாம் மட்டும் போறோமா,'' மனைவியிடம் கேட்டார்.

''தங்கச்சி கல்யாணம் எப்படி வராமல் இருப்பா. அவளும் தான் வர்றா. எல்லாருமாக போயிட்டு வருவோம்,'' என்றாள், மனைவி.

சொன்னவள் மனதில் வருத்தம் இழையோடியது. என்ன செய்யறது நல்லபடியாக வரன் பார்த்து வித்யாவுக்கு கல்யாணம் செய்தேன். மூன்று வருட வாழ்க்கை பிரச்னைகளோடு வாழ பிடிக்காமல், ஒரு வயது மகனுடன் வந்து விட்டாள். கோர்ட், -கேஸ் என்று, 'டைவர்ஸ்' கிடைத்து விட்டது.

'இப்போது வருணுக்கு நான்கு வயது ஆகிவிட்டது. இன்னொரு கல்யாணம் வேண்டாம். எனக்கு என் மகன் மட்டும் போதும்...' என்று, தீர்மானமாக சொல்லி விட்டாள், வித்யா.

வித்யாவின் சித்தி மகள் நிவேதாவுக்கு கல்யாணம். அதற்குதான் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

மண்டபத்தில் உறவினர் கூட்டம் நிறைந்திருந்தது. எல்லாரிடமும் சகஜமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள், வித்யா.

வயதில் மூத்த உறவினர்கள் மட்டும், 'இந்த காலத்து பெண்களை புரிந்து கொள்ளவே முடியலை. திருமண பந்தம் வேண்டாம்ன்னு சுலபமாக பிரிஞ்சு வந்துடறாங்க. என்ன செய்யறது, காலம் கலிகாலம்...' என, அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

''அக்கா, நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். வருவியோ மாட்டியோன்னு நினைச்சேன்,'' என்றாள், மணப்பெண் நிவேதா.

''எப்படி நிவி... உன் கல்யாணத்துக்கு வராமல் இருப்பேனா. நீ எப்பவும் அழகு. அதில் கல்யாணக் களையும் சேர்ந்து தேவதை மாதிரி ஜொலிக்கிறே,'' தங்கையை புகழ்ந்தாள், வித்யா.

இரவு மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம் முடிந்தது.

''காலை, 8:00 மணி முகூர்த்தம். களைப்பாக இருக்கும். சீக்கிரம் போய் படு, நிவேதா. 5:00 மணிக்கெல்லாம் எண்ணெய் நலுங்கு இருக்கு,'' என்று, நிவேதாவின் அம்மா சொல்லிவிட்டு போக, உறவினர்கள் அங்கங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

''வருண் துாங்கிட்டானாக்கா?'' என்றாள், நிவேதா.

''ஆமாம். அம்மா, அவனுக்கு பால் கலந்து தந்து துாங்க வச்சுட்டாங்க. உன்கிட்டே கொஞ்சம் பேசணும், நிவா. அப்படி பால்கனியில் உட்கார்ந்து பேசுவோமா?''

தங்கையுடன் பால்கனிக்கு வந்தாள்.

கல்யாண மண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. வானில் மின்னும் நட்சத்திரக் கூட்டங்களை ரசித்தபடி நின்ற நிவேதாவிடம், ''நிவா... நானும் கல்யாண கனவுகளோடு என் வாழ்க்கையில் அடியெடுத்து வச்சேன். ஆனால், நான் நினைத்தது நடக்காமல், என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு. நீயாவது உன் கணவனோடு நிறைவா சந்தோஷமாக வாழணும்,'' என்றாள்.

''புரியுதுக்கா, உன் மனசு என்ன நினைக்குதுன்னு புரியுது. கவலைப்படாதே, என் வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராமல் பார்த்துப்பேன்,'' என்றாள், தங்கை.

''மாப்பிள்ளைகிட்ட பேசிட்டு இருக்கியா. அவர் குணம் எப்படி?''

''நல்லவர்தான்கா, குறை கண்டுபிடிக்க எதுவுமில்லை. அதுமட்டுமில்லை, கல்யாணம் ஆன பிறகு அவரைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கத்தானே போறேன்,'' என்றாள்.

''நானும் அப்படிதான். ஆரம்பத்தில் அவர் நல்லவர்ன்னு நினைச்சு எல்லாவிதத்திலும் அனுசரிச்சு போனேன். அவர் எது சொன்னாலும் கேட்டேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் என்னை, அவருக்கு சேவகம் செய்யற ஒரு ஆளாகதான் நடத்துறாருன்னு புரிஞ்சுச்சு.

''என் விருப்பம், ஆசைகள் எதையும் பெரிசா நினைக்காமல், அலட்சியப் படுத்துவாரு. நான் எதிர்த்தால், உடனே பிரச்னை வரும். என் சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து அவரோடு வாழ எனக்கு பிடிக்கலை. இப்போது குழந்தையோடு வந்து, எனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன்.

''அதனால் தான் சொல்றேன், ஆரம்பத்திலிருந்தே நீ, உன் இடத்தை விட்டுக்கொடுக்காமல் வாழப் பழகு. முதலிலேயே இவள் இப்படிதான்னு அவருக்கு புரியவை. அப்பதான், பின்னால் என்னைப் போல, சங்கடப்படும் நிலைமை வராது.

''அப்பாவியாக இருந்து அனுசரித்து போனதால் தான், என்னை அடிமை மாதிரி நினைச்சுட்டாரு. என் அனுபவத்தில் இருந்து நான் உனக்கு இதைச் சொல்றேன்,'' என்றாள், வித்யா.

''நீ, உன் அனுபவத்தை சொன்ன. எனக்கென்னவோ, கணவன், மனைவின்னு ஆன பிறகு, அவர்களுக்குள், 'ஈகோ' பார்க்கக் கூடாதுன்னு தோணுது. ஆரம்பத்தில் விட்டுக்கொடுத்து அனுசரித்து போனதாக சொன்ன.

''இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், நிச்சயம் உங்களுக்குள் புரிதல் வந்திருக்கும். நீ, உன் வாழ்க்கையை இழக்க வேண்டிய அவசியம் வந்திருக்காதுன்னு எனக்கு படுது.

''காலம் நிச்சயம் அவருக்கு உன்னைப் புரிய வச்சிருக்கும். உன் அன்பு, அவரை அடிபணிய வச்சிருக்கும். ஆனால், இவருக்கு நாம் அடிமையாங்கிற எண்ணம், 'ஈகோ' தான் உங்களுக்குள் பிரிவினையை உண்டாக்கியிருக்கு. அஞ்சு விரலும் ஒன்றாக இருப்பதில்லையே... அதுபோலதான் மனிதர்களின் குணங்களும்.

''முதலில், என் கணவரை புரிஞ்சுக்க முயற்சிப்பேன். அவருக்கு ஏற்றாற் போல என்னை மாத்திக்கும் போது, அவரும் எனக்காக விட்டுக் கொடுத்து வருவாரு. இது ஒரு சின்ன புரிதல். கணவன், மனைவிக்குள் அவசியம் இருக்க வேண்டியது.

''இதில், 'ஈகோ' எங்கிருந்து வருதுன்னு எனக்கு புரியலை. நிச்சயம் உன் அனுபவம் எனக்கு ஒரு பாடம் அக்கா. அவசரப்பட்டு என் வாழ்க்கையை இழந்துட மாட்டேன்.

''நம்ப தாத்தாவை பாரு... கோபம் வந்தால், 'அட, அறிவுகெட்டவளே'ன்னு, கத்துவாரு. அப்புறம் அவரே தான், 'உன் பாட்டியை போல உண்டா. ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்வா. நான் சம்பாதிக்க மட்டும் தான் செய்யறேன். இந்த குடும்பத்தை நிலை நிறுத்தினவளே அவள் தான்'னு, பெருமையா சொல்வாரு. இதுதான்க்கா புரிதலுடன் கூடிய தாம்பத்தியம்.

''அதனால், நீ கவலைப்படாதே. எந்த காரணம் கொண்டும் என் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துட மாட்டேன். சரி, துாங்கப் போலாமா. காலையில் எண்ணெய் நலுங்கு இருக்கு. சீக்கிரம் எழுந்திருக்கணும்,'' என்ற நிவேதா, அங்கிருந்து சென்றாள்.

மனதின் ஓரத்தில் சின்னதாக தோன்றிய வலி, உடல் முழுவதும் பரவ, அப்படியே அந்த இடத்தை விட்டு நகராமல் உட்கார்ந்திருந்தாள், வித்யா.

பரிமளா ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us