PUBLISHED ON : மே 20, 2012

வருகிறார் வடிவேலு!
அரசியல் மாற்றத்துக்கு பின் அடங்கியிருக்கும் வடிவேலு, மீண்டும் நாயகனாக நடிக்க வருகிறார். ஏற்கனவே அவரை வைத்து, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்புதேவனே, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார். அதில், அதிரடி காமெடி நாயகனாக, தன் அடுத்த பிரவேசத்தை துவங்குகிறார் வடிவேலு.
— சினிமா பொன்னையா.
இந்திக்கு செல்லும் தமன்னா!
அசின், இலியானா, டாப்சி, காஜல் அகர்வாலை தொடர்ந்து, இந்தி சினிமாவில் நடிக்க, பல தென்னிந்திய நடிகைகள் முயற்சித்து வருகின்றனர். அதில் தமன்னாவின் முயற்சிக்கு, தற்போது பலன் கிடைத்துள்ளது. அஜய் தேவ்கான் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அதோடு, பாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு, படு கவர்ச்சியாக நடிக்கவும், ஓ.கே., சொல்லியிருக்கிறார். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
—எலீசா.
நடிகை திவ்யா பாரதி கதை படமாகிறது!
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை மையப் படுத்தி, 'த டர்ட்டி பிக்சர்ஸ்' படம் உருவானதைத் தொடர்ந்து, மும்பை அடுக்கு மாடியில் இருந்து, விழுந்து மறைந்த திவ்யா பாரதியின் வாழ்க்கையை மையமாக வைத்தும், இப்போது ஒரு படம் தயாராகிறது. இதில் நடிக்க, தொடையழகி ரம்பாவை அணுகினர். ஆனால், திருமணத்துக்குப் பின், பெரிய அளவில் அவர் உடல் பெருத்து விட்டதால், வேறு நடிகையை தேடி வருகின்றனர். கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வைத்த கதை!
— எலீசா.
3டி படத்தில் பிரபுதேவா!
இந்தியில் முதல், '3டி' படம் உருவாகிறது. இதில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார் பிரபுதேவா. 'இதைத் தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாட சான்ஸ் கிடைத்தாலும் ஆடுவேன்...' என்று சொல்லும் அவர், 'சினிமாவைப் பொறுத்தவரை, நடிகைகள் ஒரு பாட்டுக்கு ஆடினால் தான், 'ஐட்டம் டான்சர்' என்பர். அதுவே, நடிகர்கள் ஆடினால், சிறப்புத் தோற்றம் என்பர். அதனால், ஒரு பாட்டுக்கு ஆடுவதில், எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை...' என்கிறார் பிரபுதேவா.
— சி.பொ.,
திரவுபதி வேடத்தில் நயன்தாரா!
தெலுங்கில் சீதை வேடத்தில் நயன்தாரா நடித்த, 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' படம், அவரது நடிப்புக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனால், இப்போது தெலுங்கில் <உருவாகும், 'நர்த்தன சாலா' என்ற பக்தி படத்திற்கும் நயன்தாராவை, 'புக்' செய்துள்ளனர். இதில், 'திரவுபதி வேடத்தில் நடிப்பதற்கு, நயன்தாரா தான் பொருத்தமாக இருப்பார்...' என்று, அவருக்கு நடிகர் பாலகிருஷ்ணாவே சிபாரிசு செய்துள்ளார்.
— சி.பொ.,
வில்லனாகிறார் மனோஜ்!
'தாஜ்மஹால்' மற்றும் 'கடல்பூக்கள்' உட்பட பல படங்களில் நடித்தவர் மனோஜ். டைரக்டர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு, நடிப்பில் சரியானபடி வாய்ப்புகள் இல்லாததால், டைரக்டராகப் போவதாக சொல்லி, சில ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டுப் பார்த்தார். ஆனால், மனோஜை நம்பி யாரும் கால்ஷீட் தரவில்லை. அதனால், டைரக்டர் ஆசையை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் நடிப்புக்கே வந்து விட்டார். 'அரும்பு மீசை குறும்பு பார்வை' படத்தை இயக்கிய வெற்றிவீரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் மனோஜ். ஆனால், ஹீரோவாக இல்லாமல், முதல்முறை யாக வில்லன் வேடமேற்கிறார். இது ஒர்க்-அவுட்டானால், அடுத்து முழுநேர வில்லனாக நடிக்கப் போவதாக கூறுகிறார்.
— சி.பொ.,
பாலா இயக்கும் பரதேசி!
'அவன்-இவன்' படத்தை தொடர்ந்து, அதர்வாவை நாயகனாக வைத்து இயக்கி வரும் படத்திற்கு, 'எரியும் தணல்' என்று பெயர் வைத்திருந்த பாலா, இப்போது அதை மாற்றி, 'பரதேசி' என்று வைத்துள்ளார். 'என் கதைக்கு இந்த பெயர்தான் மிக பொருத்தமாக இருக்கும்...' என்று சொல்லும் அவர், 'பரதேசி என்றால், தனக்கொரு இடம் கூட இல்லாதவன். எல்லா தேசத்தையும் தன் தேசமாக கருதுபவன்...' என்று அர்த்தம் என்கிறார்.
— சி.பொ.,
சித்தார்த்துக்காக பாடிய சிம்பு!
சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் இணைந்து நடித்த தெலுங்கு படம், 'ஓ மை ப்ரண்ட்!' இப்படம், 'ஸ்ரீதர்' என்ற பெயரில் தமிழுக்கு டப்பாகிறது. இதில், தெலுங்கு பதிப்பில் சித்தார்த்துக் காக பாடகர் பென்னிதயாள் என்பவர் பாடிய பாடலை, தமிழில் நடிகர் சிம்பு பாடியுள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் ராகுல்ராஜ் பாட அழைத்தபோது மறுத்த சிம்பு, பின்னர் சித்தார்த் அழைத்ததும், அவரது நட்புக்காக பாடிக் கொடுத்துள்ளார்.
— சி.பொ.,
இலங்கை அகதியாக அஜீத்!
'பில்லா - 2' படத்தில், இலங்கை அகதியாக அஜீத் நடிக்கிறார். இதனால், இலங்கை தமிழர்கள் மத்தியில் சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. ஆனால், 'பில்லா - 2' யூனிட்டோ, இந்த செய்தியால், படத்துக்கு, ஏதாவது ரூபத்தில் அச்சுறுத்தல் நிகழலாம் என்று மறுத்து வருகின்றனர். அதோடு, இலங்கை அகதியாக அஜீத் நடித்துள்ள ப்ளாஷ் பேக் காட்சிகளையும் குறைத்துள்ளனர்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோ தான்!
