PUBLISHED ON : டிச 25, 2011

விளம்பர தூதுவராக அமலா பால்!
தென்னிந்திய நடிகர்கள் பங்கு பெறும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் விரைவில் நடைபெற உள்ளது. இதில், சென்னை அணியின் விளம்பர தூதுவராக த்ரிஷாதான் நியமிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்க்கெட்டில் பிசியாக இருக்கும் நடிகை ஒருவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியதால், இப்போது, த்ரிஷாவுக்கு பதிலாக, அமலா பால் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட இருக்கிறார்.
— சினிமா பொன்னையா.
மீண்டும் ஐஸ்வர்யா ராய்!
அம்மாவாகி விட்ட நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் சினிமாவில் நடிப்பாரா, மாட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பன்சாலி என்ற பாலிவுட் இயக்குனர் இயக்கும் அப்படத்தில், முதலில் சல்மான்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஐஸ்வர்யா ராய் அவருடன் நடிக்க மறுத்ததால், இப்போது ஷாரூக்கானை, 'கமிட்' பண்ணியுள்ளனர். காடு காத்தவனும், கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!
— எலீசா.
புலியுடன் நடித்த டாப்சி!
கரப்பான் பூச்சியைக் கண்டாலே காத தூரத்துக்கு அப்பால் ஓடும் நம்ம ஊர் நடிகைகளில், ஆடுகளம் டாப்சி வித்தியாசமானவராக இருக்கிறார். அதாவது, தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும், மொடுகு என்ற படத்துக்காக புலியுடன் இணைந்து ஒரு காட்சியில் நடித்துள்ளார். அவரது இந்த துணிச்சலை பாராட்டி, வைர மோதிரம் பரிசளித்துள்ளார் படாதிபதி. காண கிடைத்தது கார்த்திகைப் பிறை போல!
— எலீசா.
அதிரடி வேடத்துக்கு தயாராகும் அனுஷ்கா!
செல்வராகவனின் புதிய படம், இரண்டாம் உலகம். இதில், அனுஷ்காவுக்கு, அருந்ததி படத்துக்கு இணையான வேடம். நீண்ட நாட்களுக்கு பின், வெயிட்டான வேடத்தில் நடிக்கும் படம் என்பதால், இப்படத்துக்காக கேட்டதை விடவும் கூடுதலான கால்ஷீட்டை வாரி வழங்கியுள்ளார். மேலும், இப்படத்தின் நாயகனான ஆர்யாவும் கதைக்கேற்ப தன் உடற்கட்டை குறைத்து வருகிறார். அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்.
— எலீசா.
மும்பையில் குடியேறும் தனுஷ்!
இந்திப் படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ள தனுஷ், விரைவில் மும்பையில் குடியேறப் போகிறார். அங்கிருந்தபடியே இந்தி படத்திற்கான அடுத்தக்கட்ட வேலைகளில் ஈடுபடப்
போவதாக சொல்பவர், அப்படத்துக்காக, வேல்ராஜ் என்ற ஒளிப்பதிவாளரை, 'புக்' பண்ணியுள்ளார். இவர், தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், '3' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
— சி.பொ.,
குத்துச்சண்டை பயிலும் ஜெயம் ரவி!
அமீர் இயக்கும், ஆதிபகவன் படத்தில், இரட்டை வேடத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி, அடுத்து, பூலோகம் என்ற படத்தில் நடிக்கிறார். குத்துச் சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதற்காக, கடந்த இரண்டு மாதங்களாக ஒரு குத்துச் சண்டை மாஸ்டரிடம் முறையான பயிற்சி எடுத்து வருகிறார்.
— சி.பொ.,
40 கோடி ரூபாய் செலவில் முகமூடி!
மிஷ்கின் இயக்கவிருக்கும், முகமூடி படத்தில், ஜீவா நாயகனாகவும், நரேன் வில்லனாகவும் நடிக்க இருந்தனர். ஆனால், இப்போது அப்படத்தை பிரமாண்டமாக, அதாவது, 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஜீவா படங்களின் வியாபாரம், ஆறு கோடி ரூபாய் மட்டுமே என்பதால், அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டு, சில முன் வரிசை ஹீரோக்களை அணுக திட்டமிட்டுள்ளார் மிஷ்கின்.
— சினிமா பொன்னையா.
விஸ்வரூபம் படத்தில் ஆப்கனில் உள்ள முஜாகிதீன் தீவிரவாதியாக நடித்துள்ளார் கமல். இதற்காக, அந்த இயக்கம் குறித்த பல தகவல்களை திரட்டி, 'ஸ்கிரிப்ட்' செய்துள்ளார்.
அவ்ளோதான்!
