
ஹாலில் காரசாரமாக பேச்சு வார்த்தை நடைபெறுவது, உள் அறையில் படுத்திருந்த சாரதாவிற்கு தெளிவாகக் கேட்டது. பேத்தி லட்சணாவின் குரல் உயர்ந்து ஒலித்தது.
''இங்கே பாரும்மா... நீ திருமணம் பண்ணி வச்சுட்டேங்கிறதுக்காக, என்னால சகிச்சுக்கிட்டு வாழ முடியாது. திருமணமாகி ஆறு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள என் நிம்மதியே போயிடுச்சு. மனுஷனா அவரு... எப்ப பார்த்தாலும் காட்டு கத்தலாக கத்திக்கிட்டு கோபப்பட்டுக்கிட்டு...
''நான் அவருக்கு பெண்டாட்டியா... இல்லை, அடிமையான்னு தெரியலை. எனக்கு வெறுப்பு தான் அதிகமாகுது. கண்ணே மணியேன்னு கொஞ்ச வேண்டாம். 'அட்லிஸ்ட்' மனசைப் புரிஞ்சுக்கிட்டு கூட நடக்கத் தெரியாத ஜடமா இருக்காரு,'' என்றாள், லட்சணா.
''அதனால... இப்படி சொல்லாமல் கிளம்பி வந்தா என்ன அர்த்தம்?'' என்றாள், காஞ்சனா.
அம்மாவை முறைத்தவள், ''இந்த வாழ்க்கை, எனக்கு வாழப் பிடிக்கலைன்னு அர்த்தம். அவர்கிட்டேயிருந்து, விவாகரத்து வாங்கப் போறேன்னு அர்த்தம்...''
'எவ்வளவு சர்வ சாதாரணமாகச் சொல்கிறாள். கிடைச்ச வாழ்க்கையை விட, பிடிச்ச வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறாள். விவாகரத்து வாங்கி, அடுத்த திருமணம். இந்தக் காலத்து தலைமுறை, எல்லாவற்றையும் மேலோட்டமான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர்...' என, நினைக்கும் போது, சாரதாவிற்கு மனசு வலித்தது.
அறைக்கு வந்த காஞ்சனா, ''அம்மா, 'பாத்ரூமில்' உனக்கு வெந்நீர் கலந்து வச்சுட்டேன். மெதுவா எழுந்து வந்து குளிக்கிறியா?''
மகளின் முகத்தில் கவலை அப்பட்டமாகத் தெரிந்தது.
''லட்சணா ஊரிலிருந்து வந்திருக்கா போலிருக்கு.''
''ஆமாம்மா... ஏதோ பிறந்த வீட்டு ஞாபகம் வந்து, 10 நாள் இருந்துட்டு போகலாம்ன்னு வந்திருக்கா... வந்த களைப்பு. 'ரெஸ்ட்' எடுக்கப் போயிட்டா. அப்புறமா உன்னை வந்து பார்ப்பா.''
'தெரிந்தால் மனது கஷ்டப்படுவேன் என்பதால், என்னிடம் மறைக்கிறாள். வயதான காலத்தில் ஒரே மகளிடம் தஞ்சம் அடைந்திருக்கும் என்னால், அவளைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடிகிறது. பாவம், எவ்வளவு சிரமப்பட்டு, லட்சணாவின் திருமணத்தை நடத்தினர்.
'ஜாதகப் பொருத்தம் பார்த்து, உற்றார் உறவினரை அழைத்து, ஊர் கூடி நடத்தப்பட்ட திருமணம். ஆறு மாதத்தில் அர்த்தமில்லாததாக போய் விட்டதே...' என, நினைத்தபடி, மெல்ல படுக்கையை விட்டு எழுந்தாள், சாரதா.
''பாட்டி... இப்ப உடம்பு எப்படியிருக்கு... கை, கால் வலி உடம்பு வலி பரவாயில்லையா... வலிக்குதுன்னு ஒரே இடத்தில் படுத்திருக்காமல், 'வாக்கர்' உதவியோடு நட, பாட்டி. அப்பதான் உனக்கும் உற்சாகமாக இருக்கும்,'' என்ற பேத்தியை பார்த்து சிரித்தாள், சாரதா.
''எனக்கு வயசு, 80ஐ தாண்டியாச்சு. மனசு சொல்றதை உடம்பு கேட்ட காலம் போய், உடம்பு சொல்றதை மனசு கேட்க வேண்டியதாயிருக்கு. என்னால முடியலைன்னு கை, கால் கெஞ்சும்போது, படுக்க வேண்டியதாக தான் இருக்கு... இருந்தாலும், அதையும் மீறி நடக்கத்தான் செய்யறேன்.''
''கரெக்ட் பாட்டி... எப்போதும் மனசை மட்டும் விட்டுத் தரக்கூடாது. என்னைப் பாரு, எங்கேயோ நரகத்தில் மாட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு. இப்ப தான் இரண்டு நாளாக நிம்மதியாக இருக்கேன்.''
''நீ சொல்றது எனக்கு புரியலை லட்சணா,'' என்றாள், சாரதா.
''எனக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழப் பிடிக்காமல், என் மனசு சொல்றதைக் கேட்டு புறப்பட்டு வந்துட்டேன். அவர் சரியில்லை, பாட்டி. அவரோடு என்னால் காலம் தள்ள முடியாது.
''விவாகரத்து வாங்கிடலாம்ன்னு இருக்கேன். என்ன அப்படி பார்க்கிறே... பயப்படாதே பாட்டி, இதைவிட நல்ல வாழ்க்கை எனக்கு அமையும். இந்தக் காலத்தில் இதெல்லாம் சகஜம் பாட்டி...'' என, சர்வ சாதாரணமாக சொல்லும் பேத்தியை, மவுனமாக பார்த்தபடி இருந்தாள், சாரதா.
''அம்மா... உளுந்து வடை சாப்பிட்டு நாளாச்சு. இன்னைக்கு செய்து கொடும்மா,'' என்றாள்.
'கணவனைப் பிரிந்து, இப்படி வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறோமே என்ற கவலையில்லாமல் இருக்கும் மகளை நினைத்து வருத்தப்படுவதா... கோபப்படுவதா...' என, புரியவில்லை காஞ்சனாவிற்கு.
மாலை நேர காற்று, தென்றலாக மாறி வீச, தோட்டத்து படியில் கால் நீட்டி உட்கார்ந்திருக்கும் பாட்டியிடம் வந்தாள், லட்சணா.
''என்ன பாட்டி... படுக்கையை விட்டு எழுந்துட்டே போலிருக்கு. உடம்பு சொல்றதை கேட்காமல் மனது சொல்றதை கேட்க ஆரம்பிச்சுட்டே போலிருக்கு,'' என, சிரித்தபடி கேட்டாள்.
''உட்கார் லட்சணா. இப்படி இரண்டு பேரும் தோட்டத்தில் உட்கார்ந்து பேசி நாளாச்சு,'' என, பாட்டி சொல்ல, அவளருகில் உட்கார்ந்தாள்.
''என்ன பாட்டி... நீயாக எதையோ யோசனை பண்றே?''
''அந்தக் காலத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சு பார்க்கிறேன், லட்சணா. உன் தாத்தாவை திருமணம் பண்ணின புதுசு; எனக்கு எதுவுமே பிடிக்கலை. அவர் என்னை நடத்தின விதம், அப்பப்பா... எதையும் சாதாரணமாக சொல்ல மாட்டாரு. கோபப்பட்டு எரிச்சலுடன் தான் சொல்வாரு...
''சமையல் விஷயத்தில் பயந்து, பயந்து செய்வேன். சமயத்தில், என் நிலைமையை நினைச்சு, அழுகை வரும். ஆனா, எந்த சூழ்நிலையிலும் இதிலிருந்து மீண்டு வரணும்ன்னு நினைக்கலை. இது, எனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை... இதை வாழ்ந்துதான் ஆகணும்ங்கிற எண்ணம் இருந்துச்சு.''
''பாவம் பாட்டி நீ... கடைசி வரை தாத்தாவின் அராஜகத்திற்கு பயந்து தான் வாழ்ந்துட்டு இருந்தே இல்லையா?''
''இல்லை லட்சணா, நீ நினைப்பது தப்பு... நாளாக ஆகத்தான் தெரிஞ்சது, அவர்கிட்டே கோபம் மட்டுமில்லை... என்னை உயிராக நேசிக்கும் அன்பு உள்ளமும் இருந்ததுங்கிறதை உணர்ந்தேன். 'காலையிலிருந்து விரதம்ங்கிற பேரில் கொலை பட்டினி இருக்கே... வா... வந்து சாப்பிடு...' என, அருகில் உட்கார
வச்சு, அதட்டி சாப்பிட வைக்கும் அவரோட அன்பு.
''மேலும், 'என் பெண்டாட்டிக்கு சமர்த்து பத்தாது... முட்டாள்தான்... பரவாயில்லை... யாரும் அவளைக் குறை சொன்னால் எனக்குப் பிடிக்காது...' என, நாலு பேர் முன்னால், எனக்காக பரிந்து பேசும் அவரது குணம்...
''நாட்கள் நகர, நகர... கணவன் - மனைவி உறவு, விட்டு விலகற பந்தம் இல்லை... கடைசி வரை தொடரும் பந்தங்கிறதை காலம் எனக்குப் புரிய வச்சுது. என்னுடைய பொறுமையும், சகிப்புத் தன்மையும் எனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையைக் கொடுத்துச்சு... நிறைவாக வாழ்ந்துட்டேன்.''
பாட்டியை பார்த்தபடி இருந்தாள், லட்சணா.
''லட்சணா... பாட்டி இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதே. வாழ்க்கையை நாம் எப்படி பார்க்கிறோங்கிறதில் தான் நம்முடைய வெற்றி, தோல்வியே இருக்கு. விட்டுக் கொடுத்து வாழற வாழ்க்கை, என்னைக்குமே வெற்றியை தான் கொடுக்கும்.
''கடவுள் எல்லாருக்கும் ஒரே மாதிரி வாழ்க்கையை கொடுக்கிறதில்லை. நமக்கு தரப்பட்ட வாழ்க்கையை பிடிச்ச மாதிரி வாழ கத்துக்கணும். அதுக்கு என்னை மாதிரி கொஞ்சம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேணும். இதை நீ என்னுடைய புத்திமதியாக எடுத்துக்க வேண்டாம். என் வாழ்க்கை பாடமாக எடுத்துக்க,'' என, பேத்தியின் கையை மென்மையாக பற்றியவள் தொடர்ந்தாள்...
''இவனை வேண்டாம்ன்னு விவாகரத்து பண்ணிட்டு, இன்னொருத்தனை தேடி போனால், அவன் மட்டும் உனக்கு ஏத்தவனா வருவான்ங்கிறது என்ன நிச்சயம், லட்சணா. நீ படிச்சவ, அறிவுள்ளவ... புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்.
''மனசு சொல்றதை கேட்கணும்ன்னு, சொல்வியே. அது உண்மை தான். ஆனா, நம் மனசு, நமக்கு நல்லது சொல்ற நண்பனாக இருக்கணும்,'' என்றாள், பாட்டி.
''லட்சணா... வடை சூடாக இருக்கு. நீயும், பாட்டியும் சாப்பிட உள்ளே வாங்க,'' குரல் தந்தாள், காஞ்சனா.
''உன் மகள், மொபைல்போனை எடுத்துக்கிட்டு மாடிக்கு போயிட்டா... இப்போதைக்கு வரமாட்டா... அதற்குள் கொஞ்சம் கேசரியும் பண்ணிடு... இனிப்போடு நல்ல செய்தி சொல்வாள்,'' என, மகிழ்ச்சி பொங்க சொன்னவள், மெல்ல எழுந்து, கணவன் படத்தின் முன் நின்றாள்.
'என்னை மன்னிச்சுடுங்க... அமைதியும், அன்பும், பொறுமையும் நிறைஞ்ச உங்களை கணவனாக அடைஞ்சு... எந்த சலனமில்லாமல் நீரோடையான வாழ்க்கை வாழ்ந்தேன்.
'என் கணவரைப் போல் எல்லாருக்கும் தங்கமானவர் கிடைக்காது தானே. ஆனா, உங்க பேத்திக்கு புத்திமதி சொல்ல, உங்களை என்னால் இப்படி தான் வெளிக்காட்ட முடிஞ்சது.
'உங்களோடு வாழ்ந்த அருமையான தாம்பத்ய வாழ்க்கை, என் உயிரோடு கலந்தது. உங்க நினைவுகளை சுமந்து தான், என் காலங்கள் போகுது...' என, கண்கள் பனிக்க, கணவனிடம் மனம் விட்டு சொன்னாள், சாரதா.
பரிமளா ராஜேந்திரன்