PUBLISHED ON : பிப் 06, 2011

இதுவரை:
ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடைபெறும் கலைவிழாவில் நடனமாட, மதுரிமாவுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. மதுரிமாவின் வாழ்நாள் கனவுகளில் ஒன்றான இது நிறைவேற இருப்பதில் மிகவும் மகிழ்ந்தாள் மதுரிமா. அலுவலக நெருக்கடி காரணமாக மதுரிமாவுடன், அந்நிகழ்ச்சிக்கு வரமுடியாத நிலையில் இருப்பதை
விவரித்தான் நரேன். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தன் வீட்டுக்கு மதுரிமாவை அழைத்துச் சென்றான் நரேன் —
நரேனுக்கு எரிச்சல், அளவு கடந்து பீறிட்டது. இந்த சி.இ.ஓ.,வோடு, நண்பன் என்று உறவாடுவதா அல்லது பகைவன் என்று போராடுவதா என்று தெரியவில்லை.
நெஞ்சம், நீறுபூத்த நெருப்பாய் தகித்தது - சி.இ.ஓ., மீது எழுந்த கோபம், குறைவதாகத் தெரியவில்லை.
என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கும் முன், இனம் புரியாத அச்சம் அவனை கவ்விக் கொண்டது. எழுந்து, அந்த சிறிய அறையில் நடை பயின்றான். பொதுவாக, கம்ப்யூட்டர் பொறியாளர்கள், மனநிலை பாதிக்கப்பட்டால், இப்படித்தான் கைகளை பிசைந்தபடி, குறுக்கும் நெடுக்குமாக நடப்பர் என்று, ஏதோ ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறான். நேரம் கெட்ட நேரமாக, அது, நரேனின் நினைவில் இப்போது பற்றிக் கொண்டது.
முடிவாக, வந்தது வரட்டும் என்று, மொபைல் எண்களை தொட்டான்.
''எஸ்!'' என்று, அடுத்த முனையில் வைத்தீஸ்வரன் கர்ஜித்தார்.
''குட்மார்னிங் சார்...'' நரேன் குரலில் தெரிந்தது பவ்யமா, நட்பா, பணிவா இல்லை வெறுப்பா என்று இனம் தெரியாமல், ''என்ன நரேன்... கோபமா?''
''நோ சார்.''
''அநாவசியமாக மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்வதாக நினைத்தாயா?''
''நோ சார்.''
''உன்கிட்ட பேசணும் போல தோணுச்சு...''
''பேசுங்க சார்...''
''ஐ சே... பி பார்மல் - இயற்கையா பேசு.''
''என்ன விஷயம் சார்.''
''ஒரு விஷயமும் இல்லை - நேத்து என்கிட்ட கோபிச்சுட்டு போயிட்டே, அதுக்குப் பிறகு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஆபிஸ் வந்ததுக்குப் பின் பேசறேன்!''
''இன்னைக்கு நான் லீவு சார்.''
''ஏன்?''
''மதுரிமாவை, என் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்கேன்.''
''அப்படியா... விருந்துக்கு யாரை எல்லாம் கூப்பிட்டிருக்கே நரேன்!''
''யாரையும் கூப்பிடலே சார்.''
மேற்கொண்டு அவரோடு உரையாட அவனுக்குப் பிடிக்காததால், ''சார்... நாளை நேரில் பேசலாமா?'' என்று சொல்லி, மொபைல் இணைப்பை துண்டித்தான்.
''அப்பாடா...'' என்று, இரண்டு கைகளையும் உதறி, சோம்பல் முறித்தான். ஒரு பெரிய விடுதலை கிடைத்த உணர்வோடு, நாற்காலியிலிருந்து எழுந்தான்.
அந்த அறைக்குள் ஒயிலாக எட்டிப் பார்த்தாள் மதுரிமா.
''என்ன ஏஞ்சல்... இந்த குடில் பிடிச்சிருக்கா?'' நாடக பாணியில் கேட்டான்.
அமைதியாகத் தலையை ஆட்டினாள் புன்னகையுடன்.
''என்ன கலை நயம் உனக்கு... இந்த வீடே ஒரு கலைக்கோவில் மாதிரி இருக்கு நரேன்!''
''ஓ... தேங்க்யூ!'' - தோளைக் குலுக்கி, தலையை ஆட்டினான் நரேன்.
''அப்புறம்...'' இழுத்தாள் மதுரிமா.
''சொல்லு டியர்!''
''கல்யாணம்கறது சந்தோஷமான விஷயம்... நாம சுருக்கமா முடிச்சுட்டோம். ஆனா, பொண்ணு பார்த்து, நலங்கு வச்சு, நாள் பார்த்து, மண்டபத்துக்கு அலைஞ்சு, வீடு வீடா பத்திரிகையை கொடுத்து அழைத்து, அவங்க வீட்ல கூல்டிரிங்ஸ், காபி, ஹார்லிக்ஸ் குடிக்க... அப்புறம் மூணு வேளைக்கும் பட்டியல் போட்டு சமைச்சு, பரிமாறி, தொட்டும் தொடாம வேஸ்டு பண்ணி, சுதா ரகுநாதனையும், மாண்டலின் சீனிவாசனையும் அரேஞ்ச் பண்ணி, அந்த கச்சேரியையும் முழுசா கேட்காம, இதெல்லாம் கலவையா இருந்தா, அதோட சுவையே அலாதி.''
''ஏய் மது... மூச்சு விடாம பேசறே? கொஞ்சம் நிறுத்திக்க; மீதியை நான் பேசறேன். நீ சொன்ன எல்லா சங்கதியும், நம்ம கல்யாணத்திலே நடக்கத்தான் செஞ்சுது. அதோட த்ரில் அலாதி தான். எல்லாத்தையும் பதிவு பண்ணி, 'டிவிடி'யா கொண்டு வந்திருக்கேன்.''
''நரேன்... பிரேக்பாஸ்ட் முடிச்சதும், அதைப் பார்க்கணும்.''
''பார்ப்போம்... பார்ப்போம்... நாம பார்க்கறது மட்டுமல்ல... அதை, நமக்குப் பிறக்கப் போற குழந்தைக்கும் போட்டு காண்பிப்போம்!''
''குழந்தையா?'' என்று கேட்டு, அதீதமாக வெட்கப்பட்டாள் மதுரிமா.
''ஆமா...'' என்றவன், அவள் கரத்தை ஆவலுடன் பற்றினான்.
மிக மெதுவாக கரங்களைத் தடவிக் கொடுத்தபடி கேட்டான்...
''கண்ணாடியில் உன் அழகைப் பார்க்கும் போது, நீ கர்வப்பட்டது உண்டா?''
''ம்...'' என்று செல்லமாக முனகினாள்.
''நரேன்... எதுக்காக அப்படி கேட்டீங்க?''
''ஒரு பத்திரிகையில படிச்சிருக்கேன்!''
''ஐயோ... எந்த பத்திரிகைக்கும் நான் பேட்டி தரலியே.''
''ஒரு பிரபல நாட்டிய பெண்மணி, 'அரங்கத்தில் பலர் பார்ப்பதை, எனக்கு நானே அந்தரங்கத்தில் ரசிப்பேன்...'ன்னு சொல்லியிருக்காங்க.''
''எல்லா நாட்டியப் பெண்கள் பேட்டியும் படிப்பீங்களா?'' - கிண்டலாகக் கேட்டாள்.
''நெட்டில் தட்டி, தட்டி படிப்பேன். ஆனா, உன்னைப் பத்தி படிச்சதில்லை. இனிமே முழுமையாப் படிக்கப் போறேன்...'' 'முழுமையா' என்பதில், அழுத்தம் கொடுத்தான்; மதுரிமா வெட்கப்பட்டாள்.
ஆங்கில மொழி, ஆங்கில நாகரிகம் ஆகியவற்றில் முழுவதுமாக திளைத்திருந்தாலும், மெல்லிய உணர்வுகளால் ஆட்படுத்தப்பட்டவள் மதுரிமா.
தனக்கு கிடைத்த பெரிய அருட்கொடை மதுரிமா என்று நம்பினான் நரேன்.
திடீரென்று முளைத்த வில்லங்கங்களை எல்லாம் விலக்கி, மதுரிமாவை ஒரு பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்று, மனதில் சங்கல்பம் செய்து கொண்டான். உண்மையில், வயதான பெற்றோரின் கவலையைப் போக்கத்தான், மதுரிமாவின் அழகுக் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான். அந்த குதூகலக் குமிழ், இப்போது பெரிதாக பரிணமிக்கிறது.
மெதுவாக எழுந்து போய், கதவைத் தாழ்ப்பாள் போட்டான்.
''ஏன்... ஏன்?'' என்று கேட்டாள்.
''பூஜை வேளையில் கரடியாய், ஜெசிகா உள்ளே நுழையக் கூடாது இல்லையா...''
''அவள் நிஜமாவே கரடி மாதிரித்தான் இருக்கா!'' - சிரித்தவாறு சொன்னாள் மதுரிமா.
''சே... பார்க்கத்தான் அவள் முரடு,'' என்று சொல்லியவாறு, கொஞ்சம் வலுவாக, மதுரிமாவை கட்டில் பக்கம் இழுத்தான்.
''என்ன நரேன்...'' என்று கேட்டுக் கொண்டே, அவன் பக்கம் சாய்ந்தாள்.
வலுவான அவன் ஆளுமை, அவளுக்கு இதமாய் இருந்தது.
கதக் நடனம், மொகலாய சாம்ராஜ்யத்தில் உருவான கலை. லக்னோ, ஆக்ரா, ஜெய்ப்பூரில் தொடங்கி, இன்று உலகெங்கும் ரசிகர்களை விரிவுபடுத்திக் கொண்ட அழகு நடனம், கதக்!
பம்பரமாய் சுற்றி, ஒயில் காட்டும் உடல் வனப்புப் பெற்றிருந்தாள் மதுரிமா.
அவன் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டிருந்த மதுரிமாவின் கண்கள், மயங்கி இருந்தன.
''ஏதாவது பேசு...'' - அவள் சிவந்த காதுகளில் முணுமுணுத்தான்.
தலையில் இருந்து பிரிந்த சில முடிக்கற்றைகள், அவள் நெற்றியில் விழ, அதை அவள் தன் அழகுக் கைகளால் ஒதுக்கிவிடும் அழகைப் பார்த்து, பேச முடியாமல், சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவள் கரத்தைப் பற்றி இழுத்தான். சூடான அவன் கைகளில், சில்லென்ற அவள் கரங்கள் சிறைப்பட்டன.
இருவருக்குள்ளும், ஆனந்த அலைகள் பிரவகிக்க ஆரம்பித்தன.
காதில் கிசுகிசுத்தான்; சிணுங்கினாள்.
''உங்களுக்கு, நேரம், காலம் வரம்பே கிடையாதா?''
''கணினி யுகத்தில், கம்ப்யூட்டரை கையாள்பவர்களுக்கு, நேரம் காலமே கிடையாது!'' என்று செல்லிக் கொண்டே, அவளை இன்னும் இறுக்கி முகர்ந்தான்.
''காலை உணவு ரெடியா டேபிள்ல இருக்கு நரேன்...''
''இருக்கட்டும்... பசி வர்றப்ப சாப்பிடலாம். இப்ப வேற விதமான பசி,'' என்று, மெதுவான குரலில் சொன்னான்.
''சேய்!'' என்றாள்.
''என்ன சேய்... இது என்ன ரகசியமா?'' என்று, நாட்டிய கேசரி தண்டாயுதபாணி பிள்ளை பாடிய பாடலை, மெதுவான குரலில் பாடினான்.
''நரேன்... உங்களுக்குத் தெரியாதது எதுவுமே கிடையாதா?'' வியந்தாள்.
''தெரியாததையெல்லாம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரம்மா நீ... மோகமாகினேன் தேவி...'' நாட்டிய பாணியில் கிண்டலடித்தான்.
குழந்தை போல, 'கலகல'வென சிரித்தாள்.
அவனை கண்ணுக்குக் கண் பார்த்தாள். அவனது ஆரோக்கியமான உடல், அவளை ஆராதிக்கும் கண்கள், அவளுடைய பாவனைகளுக்காக, அசைவுகளுக்காக ஏங்கும் கண்கள், அவள் மோகத்தை மேலும் விஸ்வரூபம் எடுக்க வைத்தது.
நேரம், காலம் அனைத்தையும் கடந்து நிகழும் சங்கமம், இருவருக்குமே இனிப்பாக இருந்தது. ஒருவர் கேட்டு, மற்றொருவர் கொடுப்பது போல இல்லாமல், இருவரும் யாசித்து, இருவருமே கொடுப்பவர்கள் போல உணர்ந்தனர்.
சங்கமம் நிகழ்ந்தபின், சாதாரண நிலைக்கு வந்து, அந்த நினைவுகளுடன் கேட்டாள்... ''நாட்டிய மங்கை என்பதால் தானே, என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கு?''
''ஓ நோ...'' என்று தலையசைத்தவன், பின் சாவகாசமாய் சொன்னான்...
''மதுரிமா நாட்டியமாடாமல் இருந்தாலும் எனக்கு பிடிச்சிருக்கும்!''
''அப்படியா... நடனத்தை விட்டுவிடவா?''
இந்த உணர்ச்சி அவியல்கள் எல்லாம் சில கணங்களுக்கு மட்டுமா அல்லது நிரந்தரமானதா?
மதுரிமா மீது நரேனுக்கு ஏற்பட்டிருக்கும் அலாதி ஈர்ப்பு, புது மனைவி என்பதால் மட்டுமல்ல...
அவள் காட்டும் பாசம், நெகிழ்வு, புரிந்து கொள்ளும் பாங்கு எல்லாம், அவனை வெகுவாக ஈர்த்தது. அவனுக்கு பெருமையாகவும் இருந்தது. தன் மனைவி என்பதில் அதீத மகிழ்ச்சியடைய வைத்தது.
தன்னைப் பற்றி முழுமையாக அவளிடம் சொல்லி, சின்ன சின்ன மனஸ்தாபங்கள் கூட ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, மனதில் உறுதி செய்து கொண்டான்.
அறையை விட்டு ஜோடியாக வெளியே வந்தனர்.
ஜெசிகாவை காணோம்.
இருவரும், எதிரும், புதிருமாக உட்கார்ந்து கொண்டனர்.
இருவருக்கும் அதிகமான பசி... ப்ரெட் டோஸ்ட், சீரியல் மப்கின், பவ் என்று வரிசையாக காலி செய்தனர்.
மதுரிமா, ரொட்டியை கடிக்கும் போதே, ஏக்கமாக பார்த்தான்.
அவள் சட்டென்று புரிந்துகொண்டு, பாதி கடித்தது போக, மீதியை அவனிடம் நீட்ட, நரேன் ஆர்வமுடன் அதை சுவைக்க, அதே போல பரிமாற்றங்கள் தொடர்கதையாய் நீடித்தன.
திடீரென்று நரேன், ''மதுரிமா... நீ தமிழ் படங்கள் பார்ப்பது உண்டா?'' என்றான்.
''டிவி'யில் பார்ப்பேன்!''
''புதுமைப்பெண் பார்த்திருக்கியா?''
''நோ...'' என்று தலையாட்டினாள். நரேன் குறும்புத்தனமாக சிரித்தான்.
''என்ன?'' என்று கண் ஜாடையால் கேட்டாள்.
''இதே போலத்தான், காலைக் காட்சி முடிந்து, மனைவி குளித்து வருவாள்... கணவன், மறுபடியும் அவளை குளிக்குமாறு செய்து விடுவான். மீண்டும் ஆக்ஷன் ரீப்ளே... செம ஜாலியா இருக்கும். ரேவதியும், பாண்டியனும் நடிச்சிருப்பாங்க!'' என்று சொல்லி நிறுத்திவிட்டு, மதுரிமாவை பார்த்தான்.
அவன் சொன்னதை புரிந்து கொண்டு, மெதுவாக முறுவலித்தாள்.
புதிய உற்சாகம் திடுமென முளைவிட, 'மது' என்று வாத்சல்யத்துடன் கூப்பிட்டான்.
''என்ன நரேன்... நான் மாட்டேன்!'' என்று மெதுவான குரலில் சொன்னாள்.
''ஐயோ... நான் எதுக்கு உன்னை கூப்பிடறேன்கறதை புரிஞ்சுக்க; கமான்... என் கூட வா... பக்கத்து வீட்டில் அருமையான தம்பதி இருக்காங்க... அறிமுகப்படுத்தி வைக்கிறேன்!''
ஆதூரத்துடன் அவள் கையைப்பற்றி அழைத்துப் போனான்.
காலிங்பெல் ஒலித்ததும், ஒடிசலான அமெரிக்க பெண், கதவைத் திறந்தாள். கூடவே ஒட்டிக்கொண்டு ஒரு ஆண்.
''ஓ வெல்கம்...'' என்று கோரசாக கூறி, உள்ளே அழைத்துச் சென்றனர்.
பரஸ்பரம் அறிமுகம் நடந்தது. அவர்களும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள்.
கணினியிலிருந்து, கதக் வரை, அவர்கள் உரையாடல் தாவிக்கொண்டே போனது.
இடையே தேநீரும், பிஸ்கட்டும். கலகலப்புக்கு பஞ்சமே இல்லை.
சிரிப்பும், கும்மாளமுமாக அந்த தம்பதிகள் கிண்டலடித்துக் கொண்டது, மகிழ்ச்சியாய் இருந்தது.
இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.
''அப்புறம் சந்திக்கிறேன்!'' விடைபெற்றான் நரேன்.
வீட்டுக்கு வந்ததும் மதுரிமா சொன்னாள்... ''என்ன அருமையான தம்பதிகள். மேட் பார் ஈச் அதர்!''
''மதும்மா... இப்ப அவங்க என்ன பேசிப்பாங்க தெரியுமா? நீ சொன்ன இதே வசனத்தை, நம்மைப் பற்றி அவங்க பேசிட்டிருப்பாங்க. 'மேட் பார் ஈச் அதர்!' என்று.''
''அப்படியா?'' என்று கிண்டலாக கேட்டு, ரோஜா நிற ஈறுகள் தெரிய சிரித்தாள்.
ஜெசிகா இல்லாததால், சின்ன சின்ன வேலைகளை செய்தாள் மதுரிமா. நரேன் கூடவே நின்று கொண்டிருந்தான். பேச்சு, கிண்டல், சீண்டல், கிள்ளல், துள்ளல் எல்லாம் கலந்த உணர்ச்சி குவியலாய், மகிழ்ச்சியின் விளிம்பை அவர்கள் தொட்டனர்.
மதியம் கரைந்து, மாலை மயங்கி, இரவு முகிழ்ந்தது என்றாலும், இருவர் உடலிலும், மனதிலும் அலுப்பு இல்லை.
''நரேன்... ஒண்ணு சொல்லட்டா?''
''ம்... சொல்லும்மா?''
''இந்த வாழ்க்கை, கடவுளா எனக்கு தந்த அன்பளிப்பு. மனசு திறந்து சொல்றேன்... உன்னை... சாரி உங்களை அடைய எவ்வளவு புண்ணியம் செய்தேனோ... இந்த வாழ்க்கை எனக்கு போதும்!''
நெகிழ்ந்து போனான் நரேன். தான் இந்த பாராட்டுக்கு எல்லாம் உரியவன் தானா என்று அவனுக்கே சந்தேகமாக இருந்தது.
நெளிந்தான், சமாளித்தான். உணர்ச்சி பிழம்பாய் நின்ற மதுரிமா, அடுத்து சொன்ன வார்த்தையை கேட்டு, நரேனின் விழிகள் அதிர்ச்சிக்குட்பட்டு விரிந்தன.
— தொடரும்.
