PUBLISHED ON : மார் 06, 2011

இதுவரை:
விமான பணிப் பெண்ணான கவிதா, நரேனை சந்திக்க அவனது வீட்டிற்கு வந்தாள். தான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்றும், விவாகரத்து பெற்றவள் என்றும், தனக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறினாள். தன் தனிமையை போக்க, ஒரு வழி சொல்லுமாறு நரேனிடம் கேட்டாள். அச்சமயத்தில், மதுரிமாவிடமிருந்து
நரேனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது —
நரேன் நிலைகுலைந்து நிற்க, அவன் கையிலிருந்து அவசரமாக போனைப் பிடுங்கிய கவிதா, ''ஹாய் மது... எப்படி இருக்கே... '' என, எதிர்முனையில் இருக்கும் மதுரிமாவிடம், சிரித்தபடியே கேட்டாள்.
தன் அருமைக் கணவனிடம் ஆசையுடன் பேச போன் செய்த மதுரிமா, ஒரு வினாடி ஆடிப் போனாள்.
''யாரு... கவிதாவா?''
தன் கணவன் போனில், அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத கவிதா பேசுவாள் என்பதை நம்ப முடியாதவளாய் கேட்டாள் மதுரிமா.
''ஆமா... கவிதா தான் பேசறேன்... நல்லா இருக்கியா?''
''எனக்கென்ன... நல்லாவே இருக்கேன். ஆமா... நீ எப்படி இந்த நேரத்துல?''
கவிதா, தன்னை ஒருமையில் அழைத்துப் பேசியதில், மதுரிமாவிற்குள் லேசான கோபம் முளைவிட்டிருந்தது. இந்த உரிமையை இவளுக்கு யார் கொடுத்தது. அந்த கோபத்தில், மதுரிமாவும் ஒருமையிலேயே பேசினாள்.
''மது... நான் ஒருவரை சந்திக்க வேண்டும் என முடிவு செய்து விட்டால், நேரம் காலம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்,'' என்று கூறி, கலகலவென்று சிரித்தாள் கவிதா. அவளோடு சேர்ந்து சிரிக்கும் மனநிலையில் மதுரிமா இல்லை. கவிதா பேசியதும், அவள் பேச்சின் தன்மையும் மதுரிமாவை எரிச்சல் அடைய வைத்தது.
கவிதா சொன்னதற்கு உடனே பதிலைச் சொல்லாமல், அவளுக்குள் நினைத்துப் பார்த்தாள் மதுரிமா...
அன்று ஞாயிற்றுக்கிழமை... நரேனுக்கு விடுமுறை நாள். வழக்கமாக இந்த நேரத்தில், நரேன் எழுந்திருப்பதே பெரிய விஷயம்.
இப்போதும் கூட அவன் கட்டிலில் படுத்திருப்பான் என்ற நினைப்போடு தான், நரேனுக்குப் போன் செய்திருந்தாள் மதுரிமா.
இதோ, அவனுக்கு பதிலாக அவளோடு போனில் பேசுகிறாளே கவிதா... அப்படியென்றால், ஒருவேளை நரேன் இன்னமும் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க, அவனுக்கு அருகில் கவிதாவும்...
இந்த கவிதா நேற்றிரவே தன் வீட்டிற்கு வந்திருப்பாளோ என்ற, பெண்மைக்கே உரிய இயல்பான சந்தேகம் அவளுக்குள் தலைதூக்கியது.
''என்ன மது... பேச்சையே காணோம்?''
''நான் உன்னிடம் பேசுவது இருக்கட்டும்; நரேன் இல்லையா?''
''மது... என்ன கேள்வி இது... நரேன் இல்லாமல், எனக்கு மட்டும் தனியாக உன் வீட்டில் என்ன வேலை? என் பக்கத்திலேயே இருக்கார்.''
''போனை அவர்கிட்ட கொடு.''
''அதுக்குள்ள என்ன அவசரம்... கொஞ்ச நேரம் எங்கிட்டத்தான் பேசேன்.''
''உங்கிட்ட பேசறதுக்கு எனக்கு என்ன இருக்கிறது?''
மதுரிமாவின் பேச்சில் லேசான உஷ்ணம் பரவுவதை கவிதாவால் உணர முடிந்தது. அதைப்பற்றி கவலைப்படாதவளாய், ''ஆனால், உங்கிட்ட பேசறதுக்கு எனக்கு நிறைய இருக்கிறது மது,'' என்றாள் கவிதா.
''ரொம்ப சந்தோஷம்... நான் ஊருக்கு வந்த பிறகு பேசிக்கலாம். இப்ப அவர்கிட்ட போனைக் கொடு.''
மதுரிமாவின் குரல், கவிதாவிற்கு உத்தரவிடுவதைப் போல் ஒலித்தது. அதற்கு மேலும் தன் பேச்சை நீட்டிக்க விரும்பாத கவிதா, போனை நரேனிடம் நீட்டி சிரித்தபடியே, மதுரிமாவுக்கு கேட்கும் விதமாக சப்தமாகவே சொன்னாள்...
''நரேன்... உங்க ஒய்ப் ரொம்பவும் பொசசிவ்வா இருக்காங்க. போன்ல நான் பேசினதுல, மதுவுக்கு ரொம்பவே கோபம். கொஞ்சம் சமாதானப்படுத்துங்க.''
தான் எந்த தவறுமே செய்யாமல், தன் மனைவியின் முன்பாக, தன்னை ஒரு குற்றவாளி போல் நிறுத்திவிட்ட கவிதாவைப் பற்றிய ஒரு வெறுப்பான சிந்தனையோடு, கவிதா நீட்டிய போனை வாங்கி, மதுரிமாவுடன் பேசினான் நரேன்.
''ஹாய் டார்லிங்... குட் மார்னிங்.''
''குட்மார்னிங் யாருக்கு? எனக்கா, இல்ல...''
மதுரிமாவின் முதல் வார்த்தைகளே, அவன் மேல் அக்னித் துண்டுகளாய் வந்து விழுந்தன. மதுரிமா தற்போது என்ன மனநிலையில் இருப்பாள் என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது.
''டார்லிங்... டோன்ட் பீ சில்லி... எதுக்கு இவ்வளவு கோபப்படற?''
''பின்னே... கோபப்படாம என்ன பண்றது. கொஞ்சற மாதிரியா அங்கே விஷயம் நடந்துகிட்டிருக்கு...''
''கூல் டவுண் மது... நீ இன்னும் என்னை சரியாப் புரிஞ்சுக்கல.''
''யார் சொன்னது... நான் உங்கள சரியாவே புரிஞ்சுக்கிட்டிருக்கேன்; கூடவே உங்க கூட இருக்கும் கவிதா பத்தியும் நல்லாவே புரிஞ்சுக்கிட்டிருக்கேன். அவ எதுக்காக அங்கே வந்திருக்கா?''
''தெரியல... இனிமே தான் கேக்கணும்.''
''இனிமே தான் கேக்கணுமா... அப்ப இவ்வளவு நேரமா என்ன தான் பண்ணிக்கிட்டிருக்கீங்க. அவ எப்ப நம்ம வீட்டுக்கு வந்தா?''
''மது... ஜஸ்ட் நவ்... என்ன விஷயமா வந்திருக்கான்னு கேட்டுட்டு சொல்றேன். ஆமா... நீ எப்படி இருக்கே? உன்னோட புரோகிராம் எப்படி போய்க்கிட்டிருக்கு?''
''என்னோட புரோகிராம் இருக்கட்டும். இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் என்ன புரோகிராம். அத சொல்லுங்க முதல்ல...''
''மது... தேவையில்லாமல் நீ உன்னை கஷ்டப்படுத்திக்கிற; என்னையும் கஷ்டப்படுத்தற. டோன்ட் ஸ்பாயில் அவர் சண்டே. என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு, நானே உனக்கு போன் பண்றேன். குட் டே டியர்...''
அதற்கு மேலும் மதுரிமாவுடன், கவிதா பற்றி பேசிக் கொண்டிருப்பது பிரச்னையை மேலும் பெரிதாக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நரேன், போனைத் துண்டித்தான்.
மதுரிமா விடுவதாக இல்லை. நரேனின் மொபைல் போன் மீண்டும் ஒலித்தது; நரேன் எடுக்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு, போன் மீண்டும், மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அப்போதைக்கு மதுரிமாவுடன் பேசாமல் இருப்பதே நல்லது என்ற முடிவில், உறுதியாக இருந்தான் நரேன். கொஞ்ச நேரத்திற்குப் பின், போன் ஒலிப்பது நின்றது.
''கவிதா... நீ செஞ்சது ரொம்பவும் தப்பு. எதுக்காக இப்படி நடந்துகிட்ட?''
''எப்படி நடந்துகிட்டேன்?''
ஒன்றுமே தெரியாதவள் போலவும், எதுவுமே நடக்காதது போலவும் அவனையே திருப்பிக் கேட்டாள் கவிதா. நரேனுக்கு ஆத்திரம் வந்தது; அடக்கிக் கொண்டான்.
''எனக்கு, என் மனைவியிடமிருந்து வந்த போன் கால்... அத நீ எதுக்காக அட்டண்ட் பண்ண?''
''அதுல என்ன தப்பு? ஆபிஸ்ல ஒரு எம்.டி.,க்கு வர்ற எல்லா போன் காலையும், அந்த எம்.டி.,யோட, பி.ஏ., எடுத்துப் பேசறது இல்லையா?''
''யூ ஆர் ராங்... இது ஆபிசும் இல்லை; நீ என்னோட பி.ஏ.,வும் இல்லை.''
''அது எனக்கும் தெரியும். மதுரிமா எனக்கும் தெரிஞ்சவங்க தானே!''
''இடம், பொருள், ஏவல்ன்னு சொல்வாங்களே... அந்த மூணுமே, இந்த சூழ்நிலையில் நீ பேசறதை அனுமதிக்காது.''
''அதாவது, நான் உங்க வீட்டுல இருந்துகிட்டு, உங்க மனைவி கிட்ட, அதுவும், அவங்க வெளியூர்ல இருக்கும் இந்த நேரத்துல பேசினது தப்பு... அப்படித்தானே...''
''யெஸ்... எக்சாக்ட்லி!''
கவிதா சொன்னதை ஆமோதித்துவிட்டு, சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து, புகையை இழுத்து வெளியே ஊதினான் நரேன்.
''மதுரிமா, சரியான சந்தேகப் பிராணியா இருப்பாங்க போலிருக்கு!''
சொல்லிவிட்டு, மென்மையாகவும், சங்கீதமாகவும் சிரித்தாள் கவிதா. வேறு நேரமாயிருந்தால், அவளது சிரிப்பை ரசித்திருப்பான் நரேன். இப்போது அவனுக்குள் கோபம் தான் வந்தது.
''இது சந்தேகம் இல்லை. கணவன் என்பவன், தனக்கு மட்டுமே சொந்தம்ன்னு நினைக்கும் ஒரு தமிழ்ப் பொண்ணோட இயல்பான குணம்.''
''யூ மீன்... பொசசிவ்னஸ். நரேன்... நானும் ஒரு தமிழ்ப் பெண் தான்; இப்ப நீங்க சொன்னது, எனக்குத் தெரியாத ஒன்றல்ல...''
''தெரிஞ்சும் அதை செஞ்சிருந்தா, நீ வேணும்னே தப்பு பண்ணி இருக்கறதா அர்த்தம். சொல்லு... ஏன் இப்படி செஞ்ச... உன் கூட கொஞ்ச நாள் பழகிய எனக்கு செய்த உதவியா இது?''
''நரேன்... இப்ப எனக்கு ஒரு சந்தேகம்...''
''என்ன சந்தேகம்?''
''நான் உங்கள சந்திக்க வந்ததுல, மதுரிமாவுக்கு வந்திருக்கும் சந்தேகம் ஒருபுறம் இருக்கட்டும்... அதே சந்தேகம், எம்மேல உங்களுக்கும் வந்திருக்கா?''
கவிதாவின் இந்த கேள்வி, நரேனை நேரிடையாகத் தாக்கியது.
இந்த கேள்வியின் மூலம், இவள் முதலில் என்னை அசைத்துப் பார்க்கிறாள். இவளிடம் ஏமாந்துவிடக் கூடாது; நான் ஏமாற மாட்டேன். மதுரிமா நினைக்கிற மாதிரி, இந்த கவிதா ஒன்றும் சாதாரணமான பெண் இல்லை. இவளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஓரு முடிவுக்கு வந்தவனாய், ''எனக்கு அந்த மாதிரியான சந்தேகம் எதுவும் உன் மேல் இல்லை கவிதா,'' என்றான்.
அவனுக்குள் அப்படி ஒரு சந்தேகம் இருந்தும், அவள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக, பொய் சொன்னான் நரேன்.
''ரொம்ப சந்தோஷம்... என் மீது நீங்கள் வைத்திருக்கும் நல்லெண்ணத்திற்கு, மிக்க நன்றி நரேன்.''
அவனின் அந்த நல்லெண்ணத்திற்காக, கவிதா உண்மை யிலேயே சந்தோஷப் படுகிறாளா, இல்லை பாவனை பண்ணு கிறாளா என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.
யார் கண்டது... எடுத்த எடுப்பிலேயே ஆளைக் கவிழ்த்து விடாமல், மெல்ல விட்டுப் பிடிக்கலாம் என்ற எண்ணம் கூட இவளுக்குள் இருக்கலாம்.
இவளின் வக்ரம் பிடித்த கணவன் பற்றியும், குழந்தை பற்றியும், இவளது தனிமை பற்றியும் தன்னிடத்தில் சொல்வதற்குக் காரணமே, இவள் மீது நான் இரக்கம் கொள்வதற்காக இருக்கலாம். அந்த இரக்கத்தின் காரணமாக, இவளைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும் என்ற முயற்சியாக இருக்கலாம். அந்த முயற்சியின் காரணமாக, இவளுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் என்னை இவள் பக்கம் ஈர்த்து சாய்த்துவிடும் ஆசையாக இருக்கலாம் என எண்ணமிட்ட நரேன், அப்போதைய சூழலை மாற்ற, பேச்சை திசை திருப்பி, மீண்டும் கவிதா ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு போனான்.
''நீ எதோ உன் கணவர் பற்றியும், குழந்தை பற்றியும், உன் தனிமை பற்றியும் பேச ஆரம்பிச்ச... அது பற்றி சொல்லு.''
கவிதா, உடனே சொல்லி விடவில்லை; கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அவளுக்குள் மீண்டும் அந்த பழைய நினைவுகளும், அதன் காரணமாக சோகமும் வந்து தொற்றிக் கொண்டது. நீண்ட பெருமூச்சு விட்டாள் கவிதா. நரேன் பயந்ததைப் போலவே, அவளைப் பற்றிய பரிதாப உணர்வுகள், அவனுக்குள் மெல்லத் தோன்ற ஆரம்பித்தன.
''யெஸ்... என் கணவர், என் குழந்தை, என் தனிமை பற்றியெல்லாம், உங்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்பதற்காகத்தான் நான், உங்களைத் தேடி வந்தேன்; ஆனால்...''
கவிதா சொல்லாமல் நிறுத்தினாள்... அவளே தொடரட்டும் என, மவுனமாக அமர்ந்திருந்தான் நரேன். அவளே தொடர்ந்தாள்...
''மதுரிமா சந்தேகப்படற மாதிரி, ஐ ஆம் சாரி... மதுரிமா பயப்படற மாதிரி, எந்தவிதமான தவறான எண்ணத்தோடும், நான் உங்களைத் தேடி வரவில்லை.''
''நோ... மதுரிமாவை நீ தவறாகப் புரிஞ்சிக்கிட்ட... இந்த குறைந்த நாட்களில், அவளை நிறைவாக அறிவேன். அவள், அந்த மாதிரியான பெண் இல்லை. அந்த அர்த்தத்தில் என்னிடம், போனில் உன்னைப் பற்றித் தவறாக எதுவும் பேசவில்லை.''
மனைவி என்பதற்காக, மதுரிமாவை விட்டுக் கொடுக்காமல் அவன் பேசுகிறான் என்பது, கவிதாவிற்கு நன்றாகவே புரிந்தது.
''இட்ஸ் ஓ.கே., மதுரிமா பற்றி நானும் எதுவும் தவறாக நினைக்கவில்லை. சில நேரங்களில், சில பெண்களுக்குள் இயல்பாகத் தோன்றும் குணம் தான் இது.''
''மறுபடியும் நீ மதுரிமா பற்றிய பேச்சுக்கே போற... உன்னைப் பற்றிச் சொல்லு. உன் கணவர் டேவிட் ஆண்டர்சன், இப்போது என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார். விவாகரத்து பெற்ற பின், ஒரேயடியாக விலகிப் போய்விட்டாரா?''
''இல்லை... அவர் என்னை விட்டு முழுவதுமாய் விலகிப் போய்விடவில்லை.''
''நான் தான் முதலிலேயே சொன்னேனே... விவாகரத்திற்குப் பின்பும் சேர்ந்து வாழ்பவர்கள் இருக்கின்றனர் என்று!''
''உங்கள் நல்லெண்ணம் எனக்குப் புரிகிறது. ஆனால், அவர் என்னை முழுவதுமாய் விலக்கி விடவில்லை என்று நான் சொன்னதற்கு அர்த்தமே வேறு.''
''எனக்குப் புரியவில்லை கவிதா.''
''சொல்கிறேன்... அவர் என்னிடமிருந்து விலகாமல் இன்னமும் தொடர்வது, என்னுடன் மறுபடியும் சேர்ந்து வாழ்வதற்காக அல்ல...''
''வேறு எதற்காக?''
''என்னை மேலும் மேலும் இம்சைப் படுத்துவதற்காக...''
இதைச் சொன்ன போது, கவிதாவின் கண்களில் நீர் துளித்தது. கண்ணீரை கைக்குட்டையால் லேசாக ஒற்றி எடுத்தாள்.
''இம்சை படுத்துகிறாரா... என்ன பண்ணுகிறார்?''
''அவரது மனோவியல் படிப்பும், அது சம்பந்தமான ஆராய்ச்சிகளும், அதற்கான ஒரு சோதனைப் பொருளாய் என்னையே மாற்றும் முயற்சியில்...''
அதற்கு மேல் பேச முடியாமல், தன் உணர்வுகளைக் கட்டுபடுத்த முடியாதவளாய், குலுங்கி அழுதாள் கவிதா. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை நரேன்.
''சோதனைப் பொருளாக என்றால், எந்த விதத்தில் கவிதா?''
''செக்ஸ்... ஒரு பெண் செக்ஸ் என்பதை தெரிந்தும், உணர்ந்தும் கொண்ட பின், இனி அவளுக்கு அது இல்லை என்ற சூழ்நிலையில், அது பற்றிய, ஐ மீன், செக்ஸ் பற்றிய தாக்கம், அவளுக்குள் என்னென்ன மாற்றங்கள், அதன் காரணமான நிகழ்வுகளைத் தோற்றுவிக்கிறது எனும் அவரது ஆராய்ச்சிக்கு, என்னை சோதனைப் பொருளாக்கும் ஒரு முயற்சி.''
பெண்மை என்பது மிகவும் மென்மையானது. அதன் மீதா இத்தனை வன்மையான ஒரு முயற்சி. இது, சீதைக்கு நேர்ந்த அக்னிப் பிரவேசத்தைக் காட்டிலும், கொடுமையான விஷயம்.
கவிதா சொல்வது உண்மை தான். மனோவியல் என்பது, ஒரு கூர்மையான கத்தி. அதை வைத்து அற்புதமான அறுவை சிகிச்சையும் செய்யலாம்; மிகவும் ஆபத்தான கொலையும் செய்யலாம்.
ஆம்... ஆண்டர்சன் செய்து கொண்டிருப்பது, கொலை தான். அதுவும் ஒரேயடியாகக் கொன்று விடாமல், கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்து கொல்லும் கொடுமை. அவளுக்காக இரக்கப்பட்டான் நரேன்.
''ஐ ஆம் சாரி... உனக்காக உண்மையிலேயே வருத்தப்படுகிறேன்.''
''இட்ஸ் ஓ.கே., அதுபற்றி பேசத்தான், சோகத்தை மறைத்து, துள்ளலோடு வந்தேன். ஆனால், அதற்கான சூழல் மாறி விட்டது. நீங்கள் முதலில் மதுரிமாவிடம் பேசி, அவளை சமாதானப்படுத்துங்கள். நாம் மறுபடியும் நாளை சந்திப்போம். என்னைப் பற்றிய, என் கணவரைப் பற்றிய முழுக்கதையையும் நாளை சொல்கிறேன்.''
சொல்லி முடித்த வேகத்தில் எழுந்து கொண்டாள் கவிதா.
''சீ யூ நரேன்... ஹேவ் எ குட் சண்டே.''
அவன் பதிலுக்குக் காத்திராமல், கவிதா எழுந்து நடந்து செல்வதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் நரேன்.
கவிதா சென்ற பிறகு, மதுரிமாவை பற்றிய நினைவுகள் அவனுக்குள் பெரிதாய் எழுந்தன. மதுரிமாவை போனில் சமாதானப்படுத்து வதை விட, அவள் சற்றும் எதிர்பாராத விதமாக, ஆஸ்திரேலியா சென்று, அவள் முன்பாக நின்றால்...
அதுதான் சரி... உடனடியாக வைத்தீஸ்வரனை சந்தித்து, அவரிடம் கெஞ்சி, ஒரு வாரம் விடுமுறை வாங்க வேண்டும். நாளை மதுரிமாவை நேரில் சந்தித்தே ஆக வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்குப் பின், அவன் வைத்தீஸ்வரனைத் தேடி, அவரது பிளாட்டிற்கு வந்தபோது, வீடு பூட்டி இருந்தது. எங்கே போயிருப்பார்? பக்கத்து போர்ஷனுக்குச் சென்ற நரேன், காலிங் பெல்லை அழுத்த, அந்த பிளாட்டின் சொந்தக்காரர் வெளியே வந்தார்.
''சாரி பார் டிரபிளிங் யூ... பக்கத்து வீட்டில் வசிக்கும் வைத்தீஸ்வரன் சார், எப்ப வருவார்ன்னு ஏதாச்சும் சொன்னாரா?''
''மிஸ்டர் வைத்தீஸ்வரன் திரும்ப வர ஒரு வாரம் ஆகும். அவர், ஆஸ்திரேலியா போயிருக்கார்.''
ஆஸ்திரேலியா போயிருக்காரா? தன்னிடம் சொல்லவே இல்லையே...
'சார்... என்ன விஷயமா ஆஸ்திரேலியா போயிருக்கார்ன்னு தெரியுமா?' என்று நரேன் கேட்காமலேயே, அவராக சொன்னார்.
''டான்ஸ் புரோகிராம். ஏதோ மதுரிமான்னு ஒரு டான்சர்... அவளோட பரம ரசிகராம் இவர். ஆமா... நீங்க யாரு சார்.''
அந்த டான்சர் மதுரிமாவின் கணவன் நான் தான் என்று சொல்ல முடியாத ஒரு அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான் நரேன்.
— தொடரும்.
தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்
